திங்கள், மார்ச் 1, 2021

headlines

img

மெய்போல் பேசி... (நேதாஜி - ஆர்எஸ்எஸ்)

‘பொய்யுடை ஒருவன் சொல்வன்மையால் மெய்போலுமே மெய்போலுமே’ என்று அதிவீரராமபாண்டியன் அன்று பாடியதுஇப்போது பிரதமர் நரேந்திர  மோடி போன்ற ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் தலைவர்களுக்கு கனகச்சிதமாகப்  பொருந்துகிறது. இதற்குச் சான்று கொல்கத்தாவில் நடந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்த நாள் விழாவில் அவர் பேசியதாகும். 

நேதாஜியின் சுதந்திர இந்தியா கனவும், சமத்துவ இந்தியா கனவும், ஆர்எஸ்எஸ் காரர்கள் காணாத கனவு. ஆனால் நேதாஜிஅன்னை நாடு அந்நியருக்கு அடிமைப் பட்டிருப்பதை எதிர்த்து இந்திய தேசிய ராணுவம் அமைத்து போரிட்டு விடுதலைபெற பாடுபட்டார். ஆனால் நாட்டை அடிமைப்படுத்தி யிருந்த பிரிட்டிஷாருக்கு ஒத்தாசை செய்து கொண்டு பிழைப்பு நடத்தியவர்கள் மோடியின் அன்றைய முன்னோர்கள். இத்தகைய நேர் எதிரான கொள்கை உடையவர்கள் தற்போது ஒரே கொள்கையுடைவர்கள்போல் பேசுவது அத்தகைய தன்மையதே ஆகும். 

அதனாலேயே அவர்களது நோக்கத்திற்கு ஏற்ப இருப்பதையெல்லாம் முந்தைய தலைவர்களின் பெயரில் சொல்கிற நடைமுறையை ஆர்எஸ்எஸ் பரிவாரத்தினர் பின்பற்றுவது வழக்கம். அதையே பிரதமர் மோடியும் பேசியிருக்கிறார். இந்தியா வலிமை மிகுந்த நாடாக உருவாக வேண்டும் என்று நேதாஜி கனவு கண்டதாக கூறியிருக்கிறார். உண்மையில் நேதாஜி, இந்தியா வளமை மிகுந்த நாடாக, நாட்டு மக்கள் சமத்துவம் மிக்கவர்களாக உருவாவதே சுதந்திர இந்தியாவின் நோக்கம் என்று எண்ணினார். ஆனால் இவர்களோ ஒரு சில கார்ப்பரேட் முதலாளிகள் செல்வத்தின் மேல் செல்வம் குவிக்கவே ஆட்சி நடத்துகிறார்கள் என்பது நேதாஜிக்கு நேர்மாறானதில்லையா?

இந்த உலகம் பெண்களுக்கு அடிப்படை உரிமைகளை வழங்க வேண்டும் என்று விவாதித்திக் கொண்டிருந்த போது ஜான்சி ராணி படைப்பிரிவை உருவாக்கி அவர்களை சுதந்திரப் போராட்டத்திலும் இணைத்தார் என்று மோடி அவ்விழாவில் பேசியிருக்கிறார். ஆனால் பெண்களுக்கு சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் 33சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றாமல் நேதாஜி யின் எண்ணங்களுக்கு எதிரானவர்களாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 
எத்தனையோ சட்டங்களை பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்றத்தில் சட்டமாக்கி ஆணவத்தோடு நடந்து கொள்ளும் மோடி தலைமையிலான அரசுபெண்கள் இடஒதுக்கீடு பற்றி மட்டும் கண்டு கொள்ளாதிருப்பது ஏன்? அது அவருடைய எஜமான அமைப்பான ஆர்எஸ்எஸ்-சின் கொள்கையே பெண் உரிமைக்கு எதிரானது என்பதால்தான். அத்துடன் இந்தியா தற்சார்பு அடைவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாதுஎன்று முழங்கியிருக்கிறார். அந்நிய நாட்டு மூலதனத்துக்கு கதவுகளை அகலத்திறந்து விட்டு விட்டு தற்சார்பு என்று நீட்டி முழங்குவதால் இந்தியா தற்சார்பு அடைந்துவிடாது என்பதை ஏனோ மறந்துவிட்டார்.
 

;