headlines

img

விவசாயிகள் போராட்டத்தில் கரம் கோர்ப்போம்...

புதிய வேளாண் சட்டங்கள் மூலம் இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்களின் கைகளில் ஒப்படைக்க மோடி அரசு பாடாதபாடு பட்டு வருகிறது. ஆனால் விவசாயிகளோ உயிரை கொடுத்தாவது விவசாயத்தை காப்பாற்றுவது என்கிறஉறுதியோடு போராட்டக்களத்தில் இருக்கின்றனர். ஆனால் தற்போது மோடி அரசு உச்சநீதிமன்றத்தை பயன்படுத்தி விவசாயிகளின் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றமும் அதற்கேற்றவாறு இடைக்கால உத்தரவை பிறப்பித்திருக்கிறது. ஆனால் விவசாயிகளோ நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை எங்கள் போராட்டம் தொடரும் எனஅறிவித்திருக்கின்றனர். விவசாயிகளின் ஒன்று
பட்ட  தீர்க்கமான  இந்த முடிவு பாராட்டத்தக்கது. காரணம் இந்த சட்டமே தேவையில்லை. தேவையில்லாத சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்றியமுறையும் தவறானது. தற்போதும் கூட உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் இடைக்கால தீர்ப்பில் விவசாயிகளுக்கு எந்த நியாயத்தையும் வழங்கவில்லை. 

விசாரணையின் போது, வேளாண் சட்டங்கள் நல்லது என யாரும் வரவில்லையே ஏன் எனஅரசை பார்த்துக் கேட்டது நீதிமன்றம்; ஆனால்இடைக்கால தீர்ப்பின் போது முழுக்க முழுக்க வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்களை மட்டுமேஉறுப்பினர்களாக நியமனம் செய்திருக்கிறது. இதனை எப்படி விவசாயிகள் ஏற்பார்கள்? இந்தசெயல் எப்படி நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும்? அதனால்தான், விவசாயிகள் வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழு மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை என அறிவித்திருக்கின்றனர். 

சட்டம் நிறைவேற்றப்பட்ட போதே இந்த சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்யப்பட்டது. அப்போது இதே உச்சநீதிமன்றம் தடை விதிக்க முடியாது என அறிவித்தது. ஆனால் தற்போது இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கோடிக்கணக்கான விவசாயிகள் கடந்த 50 நாட்களாக தலைநகர் தில்லியில் உறையும்பனியில் போராடி வருகின்றனர். இதுவரை 80க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்திருக்கின்றனர். விவசாயிகளுடன் பிரதமர் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை. அதைவிட பிரதமருக்கு என்ன வேலை இருக்க முடியும்? 

 மத்திய அரசால் இயற்றப்பட்ட  வேளாண் சட்டங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய முடியாது என அரசு தரப்பு வாதிடுகிறது. அதனை ஆமோதிப்பது போன்று மவுனம் காக்கிறது உச்ச நீதிமன்றம். இது உளவியல் ரீதியாக விவசாயிகளை போராட்ட களத்தில் இருந்து வெளியேற்றும்நடவடிக்கைக்கு உதவியாகவே அமையும். இந்த அணுகுமுறை எப்படி விவசாயிகள் மத்தியில் உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும். விவசாயிகள் அவர்களுக்காக மட்டும்போராடவில்லை, இந்திய அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான போராட்டத்தையும் சேர்த்தே நடத்துகின்றனர். அனைத்து பகுதி மக்களும் போராடும் விவசாயிகளுடன் கரம் கோர்த்திட முன்வரவேண்டும்.  

;