games

img

நீச்சலின் ரோல் மாடலுக்கு வயது 82 ! - சி.ஸ்ரீராமுலு

ஆரத்தி சஹா தனது நீச்சல் வாழ்க்கை யை தொடங்கிய பொழுது வயது 5. அன்றைக்கு யாருமே நினைத்துக் கூட பார்க்க வில்லை இந்த குட்டி பொண்ணு நாட்டுக்காக பல பதக்கங்களை குவிக்க போகுதுன்னு. பதினோரு வயதுக்குள் 22 பதக்கங்களை வென்று மாநில அளவில் மிகச்சிறந்த நீச்சல் வீராங்கனையாக உருவெடுத்தார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஆயுதப் படை வீரர் பஞ்சு கோபால் சஹாவுக்கு மூன்று குழந்தைகள். அதில் 1940 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி இரண்டாவ தாக பிறந்தவர் ஆரத்தி குப்தா சஹா. இரண்டரை வயதில் அம்மா மரணமடைந்து விட்டார். மூத்த சகோதர ரும் தங்கை பாரதியும் தாய்மாமன் வீட்டில் வளர்க்கப்பட்ட னர்.  பாட்டி வீட்டில் வளர்ந்த ஆரத்தி சஹா,சிறு வயது முதல் நீச்சல் செய்வதில் ஆர்வம் கொண்டிருந்தார்‌. மேற்குவங்கம் மாநிலம் ஹூக்ளி ஆற்றின் கரையில் நீந்த கற்றுக் கொண்டார். படிப்படியாக அவரது நீச்சல் திறமை அடையாளம் காணப்பட்டுள்ளது. தொடர்ந்து நீச்சல் பயிற்சியை கொடுக்க அருகில் இருந்த நீச்சல் பயிற்சி மையத்தில் சேர்த்து விட்டார் தந்தை. இவரது சகோதரி பாரதி சஹாவும் நீச்சல் வீராங்கனை.

நாடு விடுதலை அடைந்த சில ஆண்டுகள் வரைக்கும் நீச்சல் விளையாட்டில் பெண்கள் பங்கேற்பது அபூர்வமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் மும்பை, கொல்கத்தா என பல்வேறு நகரங்களில் நடந்த தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் 100 மீட்டர் ஃபிரீ ஸ்டைல், ஃபிரீ ஸ்ட்ரோக் (மார்பக நீச்சல்), பட்டர் ஃபிளை (பின்புற நீச்சல்), 200 மீட்டர்   பிரீ ஸ்டைல், ஃபிரீ ஸ்ட்ரோக் போட்டிகளில் கலந்து கொண்ட  ஆரத்தி  பதக்கங்களை குவித்து புது புது சாதனை படைத்தார். 1952 ஆம் ஆண்டு பின்லாந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் இவரையே சாரும். 200 மீட்டர் ஃபிரீ ஸ்ட்ரோக் போட்டியில் பங்கேற்ற அந்த முறை பதக்கம் பெற முடியவில்லை என்றாலும் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த அவருக்கு வயது 12. ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்று நாடு திரும்பிய ஆரத்தி, புது உத்வேகத்துடன் இங்கிலீஷ் கால்வாயை கடப்பதென்று முடிவு செய்திருக்கிறார். அன்றைக்கு நீச்சல் ஜாம்பவான்களாக திகழ்ந்த ஃப்ரோ ஜான் தாஸ், மிஹிர் சென் இருவரும் ஆதரவு கொடுத்து உதவியும் செய்தனர். கடுமையான பயிற்சிக்கு பிறகு இங்கிலீஷ் கால்வாயை கடக்கும் பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டது. மொத்தம் 58 பேர் பங்கேற்றனர். அதில்  ஐந்து பேர் பெண்கள். ஆசிய கண்டத்திலிருந்து பங்கேற்ற ஒரே வீராங்கனை ஆரத்தி.

உறைய வைக்கும் குளிர் ஒரு பக்கம், ஆபத்தான கடல் வாழ் உயிரினங்கள், ராட்சத  அலைகள், எதிர் திசை காற்று என முதல் முயற்சி மிகவும் சிரமத்திற்கு இடையே தாமதத்துடன் போட்டியை தொடங்கியும் தோல்வியில் முடிந்தது. இதிலிருந்து மீண்டு வருவதற்கு சில நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. மனம் தளராமல் திரும்பவும் இங்கிலீஷ் கால்வாயை கடக்கும் போட்டி களத்தில் குதித்தார்.  இந்த முறையும் ராட்சத அலை, கடுமையான காற்றில் பயணத்தை தொடங்கினார். 16 மணி நேரம் 20 நிமிடங்களில் 42 கடல் மைல் தூரத்தில் இங்கிலாந்தின் சாண்ட்கேட் பகுதியில் கடற்கரையை அடைந்து பயணத்தின் இலக்கை எட்டியதும் நமது மூவர்ண தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்து வெற்றியை நாட்டுக்காக அர்ப்பணித்தார். இதற்கு முன்னோட்டமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள், சக நீச்சல் வீரர்கள் முன்னிலையில் கொல்கத்தா தேசபந்து பூங்காவில் உள்ள குளத்தில் தொடர்ந்து 16 மணி நேரம் நீந்தி சாதனை படைத்தார். சுதந்திர இந்தியா பெண்கள் படைத்து வரும் சாதனைகள் மிக மகத்தானவை என்றும் அன்றைக்கு போற்றப்பட்டது.

1959 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி இங்கிலீஷ் கால்வாயை கடந்து உலக சாதனை படைத்த ஆரத்தியை, அன்றைய பிரதமர் நேரு பாராட்டினார். நாட்டின் மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’  விருதும் வழங்கப் பட்டது. 19 வயதில் இந்த விருதினை பெற்ற முதல் பெண்மணி யான, அவரது சாதனையை நினைவு கூரும் வகையில் 1999 ஆம் ஆண்டில் ‘தபால் தலை’ வெளியிடப்பட்டது. இந்திய நீச்சல் வீராங்கனையாக ஜொலித்து வந்தவருக்கு ரயில்வே பணியும் கிடைத்தது. தனது நீச்சல்  போட்டிகளில் மேலாளராக பணியாற்றியவரையே வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அர்ச்சனா என்ற மகள் பிறந்தார். கொல்கத்தா மாநிலத்தில் அவர் வாழ்ந்த இல்லத்திற்கு அருகில் மார்பளவு சிலையும் நிறுவப்பட்டது. சுமார் 300 மீட்டர் நீளம் கொண்ட பாதைக்கு இவரது பெயரும் சூட்டப்பட்டது.  இந்திய நாட்டிற்கு பெருமை தேடித்தந்த ஆரத்தி  சஹா 1994 ஆம் ஆண்டு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பிரியாவிடை பெற்றார்.  ஆரத்தியின் சாதனையும் தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் இந்தியா மட்டுமின்றி ஆசிய இளம் நீச்சல் வீரர்களுக்கு இன்று வரை உத்வேகம் அளித்து வருகிறது என்றால் அது மிகையல்ல. அவரது 82ஆவது பிறந்த நாளான இன்று அவரது நினைவுகளை போற்றி பெருமைப்படுத்துவோம்!