games

img

பெரிய வடகம்பட்டி டூ டோக்கியோ... சாதித்த செங்கல் சூளை தொழிலாளியின் மகன்....

டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியில்  உயரம் தாண்டுதலில் (டி-63) 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனை தமிழகமே கொண்டாடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக சேலம் மாவட்டம் பெரியவடகம் பட்டி மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் தொடரில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இது அவருக்கு கிடைத்துள்ள இரண்டாவது பதக்கம்.சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டியைச் சேர்ந்த தங்கவேலு-சரோஜா தம்பதியினரின் மகன் மாரியப்பன் (25). மாரியப்பன் தமது பள்ளிக்கல்வியை பெரியவடகம்பட்டியில் உள்ள அரசுப்பள்ளியில் படித்துள்ளார். கல்லூரி படிப்பை சேலத்தில் முடித்துள்ளார். எம்.பி.ஏ., படிப்பை நிறைவு செய்த அவர் தற்போது பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். மாரியப்பனுடன் பிறந்தவர்கள் குமார் (23), கோபி (21). குமார் பி.ஏ., ஆங்கிலம் படித்துள்ளார். கோபி பி.ஏ., எல்எல்பி இறுதியாண்டு படித்துவருகிறார்.

மாரியப்பனின் குடும்பம் விவசாயக் குடும்பம். மழை பெய்தால் மட்டுமே விவசாயம் வேறொன்றும் சொல்லிக்கொள்ளுமளவிற்கு இல்லை. மாரியப்பனின் தாயார் செங்கல்சூளைத் தொழிலாளி. ஆறு ஆண்டுகள் செங்கல் சூளையில் கற்களை அறுக்கும் வேலையைச் செய்துள்ளார். அதிகபட்சமாக அவருக்குக் கிடைத்த கூலி ரூ.200 மட்டுமே. இந்தப் பணத்தைக் கொண்டு தங்களது பிள்ளைகளை ஊக்கப்படுத்தி படிக்க வைத்துள்ளார் சரோஜா.மாரியப்பன் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே விளையாட்டில் ஆர்வம் காட்டியுள்ளார். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஊக்கமளித்துள்ளனர். எட்டாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மாற்றுத்திறனாளி என்பதை மறந்து மற்றவர்களுடன் போட்டியில் கலந்துகொண்டு மண்டல அளவில் வெற்றி பெற்றுள்ளார். 11-ஆம் வகுப்பு. 12-ஆம் வகுப்பு படிக்கும் போது தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதனை நிகழ்த்தியுள்ளார். ஆரம்ப காலம் தொடங்கி தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதனை படைப்பதற்கு அவருக்கு பக்கபலமாக இருந்தது அவரது தாய் சரோஜா, மற்றொருவர் அவருடைய விளையாட்டுப் பயிற்சியாளர் சத்தியநாராயணா. தற்போது மாரியப்பன் பணிக்குச் சென்றுவிட்டதால் தனது தாயையும், சகோதரர்களையும் கவனித்துக்கொள்கிறார்.ஒலிம்பிக் போட்டியில் தங்கம் பெற வேண்டும் என்பதுதான் மாரியப்பன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் லட்சியமாக இருந்தது. வெள்ளிப் பதக்கம் கிடைத்ததில் மகிழ்ச்சி என்றாலும் தங்கத்தை தவறவிட்டுவிட்டாரே அண்ணன் என்றார் அவரது சகோதரர் கோபி. அடுத்த ஒலிம்பிக்கில் எனது அண்ணன் நிச்சயம் தங்கம் வெல்வார் என்றார்.

பெரியவடகம்பட்டியில் சுமார் 2000 குடும்பங்கள் வசித்து வருகின்றன. பெரும்பாலானோர் விவசாயிகள். பெரியவடகம்பட்டியிலிருந்து சேலம் 35 கி.மீ. தொலைவில் உள்ளது.மாரியப்பனின் சகோதரர் கோபி கூறுகையில், “ எங்கள் கிராமத்தில் சிறுவர்கள், இளைஞர்கள் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானம் இல்லை. விளையாட்டு மைதானம் அமைத்துக்கொடுத்து கிராமப்புற இளைஞர்களை  விளையாட்டில் ஊக்குவிக்க வேண்டும். எங்களது கிராமத்தில் வங்கி ஏதுமில்லை. வங்கித் தேவைகளுக்காக எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள காடையம்பட்டிக்குத்தான் செல்ல வேண்டும். எங்கள் கிராமத்தில் வங்கிக்கிளை தொடங்கவேண்டும். எனக்கு தெரிந்தவரை இந்த இரண்டு கோரிக்கைகளும் முக்கியமானதாகக் கருதுகிறேன்” என்றார்.

கல்லூரி கல்வியை முடித்துள்ள உங்கள் சகோதரர் குமாருக்கும், படித்துக்கொண்டிருக்கும் தங்களுக்கும் தமிழக அரசுத் தரப்பிலிருந்து ஏதேனும் உதவிகள் தேவைகள் தேவைப்படுகிறதா எனக்கேட்டதற்கு?  நாங்கள் படித்துக்கொண்டிருக்கிறோம். வேறு எதுவும் எனக்குத் தோன்றவில்லை என்றார்.சேலம் மாவட்டத்தில் குக்கிராமமான பெரியவடகம்பட்டி அரசுப்பள்ளியில் படித்து சாதனை படைத்துள்ள மாரியப்பன் தமிழக அரசிற்கு மட்டுமல்ல. அரசுப்பள்ளிகளையே இன்றளவும் நம்பியுள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்றால் அது மிகையல்ல.தமிழக அரசு மாரியப்பன் கிராமத்திற்கு தேவைப்படும் வசதிகளையும் செய்துதர வேண்டும்.  வசதிகள் கிடைக்க கிடைக்க கிராமப்புற இளைஞர்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை தொடர்ந்து நிரூபிப்பார்கள் என்பது திண்ணம்.

தொகுப்பு : ச.நல்லேந்திரன்

;