games

img

உலக தடகளப் போட்டி மும்முறை தாண்டுதலில் சாதித்த மதுரை கொடிக்குளம் மாணவர்

மதுரை, ஆக.8- கொலம்பியாவில் நடைபெற்ற 20- வயதுக்குட்பட்டோ ருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மும்முறை தாண்டுதலில் (Triple Jump) வெள்ளிப் பதக்கம் வென்று மதுரைக்கு பெருமை சேர்த்துள்ளார் செல்வபிரபு (18). மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது கொடிக்குளம் கிராமம். இந்த  ஊரைச் சேர்ந்தவர் திருமாறன்-சுதா தம்பதியினர். விவசாயி களான இவர்களுக்கு ராஜபிரவீன், செல்வபிரபு என்ற இரு மகன்கள் உள்ளனர்.  இவர்களில் செல்வபிரபு உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்று கொடிக்குளம் கிராமத்திற்கும் மதுரைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.  செல்வபிரபு ஆரம்பகால படிப்பை மதுரை-நத்தம் சாலையில் உள்ள இராமகிருஷ்ணா மடத்தில் முடித்துள்ளார். திருச்சிராப்பள்ளியில் உள்ள காஜாமொய்தீன் பள்ளியில் 7 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். தற்போது திருச்சிராப்பள்ளியில் உள்ள பிஷப்ஹூபர் கல்லூரி யில் பி.ஏ. ஆங்கிலம் முதலாமாண்டு படித்து வருகிறார். 

படிப்பில் நாட்டமில்லாததால், செல்வபிரபுவை அவரது தந்தை ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணியாற் றும் ஜெயந்த், செல்வபிரபுவிற்கு பயிற்சி அளித்தார். பிரபுவின் வெற்றிக்கு அடித்தளமிட்டவர் ஜெயந்த் தான். பின்னர் தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் நடத்திய தேர்வில் நீளம் தாண்டுதலில் முதலிடத்தையும், 200 மீட்டர் ஓட்டத்தில் 2-ஆம் இடத்தையும் பெற்றுள்ளார். செல்வபிரபு  மும்முறை நீளம் தாண்டுதலில் இரண்டு தங்கப்பதக்கங்கள் நான்கு வெள்ளி, வெண்கலப் பதக்கங் களைப் பெற்றுள்ளார். உலக தடகளப் போட்டியில் தற்போது ஏழாவது பதக்கமாக வெள்ளி வென்றுள்ளார். இவரது வெற்றியை கொடிக்குளம் கிராமத்தினர் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து கொண்டாடினர். மகனின் சாதனை குறித்து திருமாறன் கூறுகையில், ‘‘பிரபு-விளையாட்டில் சாதிக்க வேண்டுமென்பதற்காக மூன்று ஏக்கர் நிலத்தை விற்றுள்ளேன். அவனது கனவையும் எனது ஆசையையும் நிறைவேற்றியுள்ளான். வரும் காலங்களில் ஒலிம்பிக்கில் சாதனை படைப்பான்’’ என்றார். மேலும் ‘‘எனது மகனின் வெற்றியை அறிவித்தபோது என்  கண்களில் கண்ணீர் வந்தது. வெள்ளிப் பதக்கத்தை  வென்ற எனது மகன் “அப்பா நான் சாதித்துவிட்டேன்” எனக் கூறிய போது எங்களது குடும்பம் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. எனது மகன் மதுரைக்கும், திருச்சிராப்பள்ளிக்கும், தமிழகத்திற்கும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளான்’’ என்றார்.

;