games

img

டென்னிஸில் அசத்தும் ‘ரன் வேட்டை’ ஆஷ்லி.....

“ரோஜர் பெடரர், ரபேல் நடால், ஜோகோவிச் என்ற பெயரை கேள்விப்பட்டதும் சட்டென்று நினைவுக்கு வருவது டென்னிஸ். இவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட அபார திறமையால் டென்னிஸ் உலகை ஆண்டு கொண்டிருக்கின்றனர்.

பெண்கள் என்று எடுத்துக் கொண்டால் மார்க்கரட் கோரட், கிரிஸ் எவர்ட், மார்ட்டினா நவரத்திலோவா, மோனிகா செலஸ், ஸ்டெபி கிராப், மார்ட்டினா ஹிங்கிஸ், செரினா வில்லியம்ஸ், மரியா ஷரபோவா என தனியொரு வீராங்கனையே அந்தந்த காலகட்டத்தை தங்கள் கைக்குள் வைத்திருந்தனர் ”.

இவர்களுக்கு இணையாக  ஜஸ்டின் ஹெனின், இவனோவிச், ஜெனிபர் கேப்ரியாட்டி, அராஜெண்டா சான், கிவிடோவா, கரோலின், ஹெல்ப், கார்பின் முகுருசா, நவோமி ஒசாகா போன்றோர் அவ்வப்போது வந்து போனாலும் ஒரு நிலையான போட்டியை தொடர்ச்சியாக எப்போதும் கொடுத்ததில்லை.

இந்த நிலையில்,“மே ஐ கம் இன்?” (நான் உள்ளே வரலாமா?) என்று புதிதாக என்ட்ரி கொடுத்தவர் ஆஷ்லி பார்டி.தற்போது மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகமான நிலையில் அதிர்ச்சி தோல்வியால் அரையிறுதிக்கு முந்தைய சுற்றோடு வெளியேறினாலும் பெண்கள் டென்னிஸ் உலகில் தற்போதும் அவர்தான் ‘நம்பர் ஒன்’.
ஆஸ்திரேலியா கண்டத்தின் வட கிழக்குப் பகுதியில் பரப்பளவில் இரண்டாவது இடத்திலும் மக்கள் தொகையில் மூன்றாவது இடத்திலும் அமைந்துள்ள குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பிறந்து வளர்ந்த அவர், புலம்பெயர்ந்த ஐரோப்பிய  தம்பதியர் ராபர்ட்-ஜோசியின் மகள்.

சிறு வயதிலிருந்தே விளையாட்டு மீது கொண்டிருந்த தீராத காதலால் நான்கு வயதில் பெற்றோரின் உதவியுடன் டென்னிஸ் மட்டையை கையில் பிடித்தாலும், 12 வயதில் தேசிய பயிற்சி மையத்தில் இணைந்து முறைப்படி கற்றுக் கொண்டு அடுத்து மூன்றாண்டுகளில் மகளிர் டென்னிஸ் அசோசியேஷன் நடத்திய போட்டிகளில்  ஒற்றையர் பட்டத்தை 8 முறையும் இரட்டையர் பிரிவில் 10 முறையும் பட்டம் வென்று அசாத்திய திறமையை வெளிப்படுத்தினார்.“நான் வயதில் சிறிய பெண்ணாக இருக்கிறேன். மேலும் ஒரு டீனேஜ் பெண்ணாக இருப்பதால் பலவற்றையும் கற்று அனுபவம் பெற ஆசைப்படுகிறேன்” என்று திடீரென்று தனது பாதையை மாற்றி, கிரிக்கெட் பக்கம் திருப்பினார்.இளம் வயதிலேயே துணிச்சலான முடிவுகளை எடுப்பதில் ஆர்வமுடையவர் என்பதால் ரூட்டை மாற்றி, சில ஆண்டுகாலம் டென்னிஸ் மட்டைக்கு ஓய்வு கொடுத்து கிரிக்கெட் மட்டையை சுழற்றினார். மிக விரைவிலேயே ஆஸ்திரேலியாவின் மிகப் புகழ்பெற்ற டி20 பிக்பேஷ் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காகவும் பின்னர் குயின்ஸ்லாந்து பைபர் அணிக்காகவும் கிரிக்கெட் மைதானத்தில் ரன்வேட்டை நடத்தினார்.

இரண்டாண்டு காலம் பிரேக் எடுத்தவர். மீண்டும் 2016 ஆம் ஆண்டு டென்னிஸ் உலகிற்கு திரும்பியபோது தொட்டதெல்லாம் வெற்றிதான். அதுவரைக்கும் ரேங்கில் பின்னால் இருந்தவர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு தரவரிசை பட்டியலில் டாப் 20க்குள் இடம் பிடித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.கடந்த 2018 ஆம் ஆண்டு யுஎஸ் ஓபன் தொடரின் இரட்டையர் பிரிவிலும், 2019ஆம் ஆண்டில் பிரெஞ்ச் ஓபன் ஒற்றையர் போட்டியிலும் முதன்முதலாக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று உலக அரங்கில் தனது பெயரையும் பதிய வைத்தார்.

முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையான 24 வயதாகும் ஆஷ்லி பார்டி, இப்போது டென்னிஸில் உலகின் முதல் நிலை வீராங்கனை என்கிற பெருமையை பெற்றிருக்கிறார்.2010ஆம் ஆண்டில் தனது 14வது வயதில் உள்ளூர் போட்டிகளில் விளையாடத் துவங்கி 15 வயதில் சர்வதேச அளவில் இளையோர் அமெரிக்க ஓபன் தொடரில் களமிறங்கி வயதில் மூத்த வீராங்கனைகளுக்கு பெரும்  சவாலாக உருவெடுத்தார்.பின்னர், 2014 ஆம் ஆண்டு இறுதியில் டென்னிசுக்கு முழுக்கு போட்ட ஆஷ்லி பார்டி, இரண்டு ஆண்டுகள் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். அதன் பிறகு 2016 ஆம் ஆண்டில் மறுபடியும் டென்னிஸ் களத்திற்கு திரும்பி முதல் நிலை வீராங்கனையாக அசத்தி வருகிறார்.

கட்டுரையாளர் : ஸ்ரீராமுலு

;