games

img

விளையாட்டு செய்திகள்

டி-20 உலகக்கோப்பைக்கான  இந்திய அணியும்... சர்ச்சையும்...

மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள 9ஆவது சீசன் உலகக் கோப்பை டி-20 தொடர் ஜூன் 1 அன்று தொடங்குகிறது. இந்த தொடருக்கான ஏற்பாடுகள் அனைத்தும் ஏறக்குறைய நிறைவு பெற்ற நிலையில், உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் நாடு கள் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. 

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் சூப்பர் பார்மில் உள்ள வீரர்களை தேர்வு செய்து மிகவும் பலமான அணியை அறி வித்து உலகக்கோப்பை தொடரை எதிர் கொள்ளவுள்ள நிலையில், இந்திய அணியோ வீரர்கள் தேர்வில் பல்வேறு  சர்ச்சையை எதிர்கொண்டு வருகிறது. 

இந்திய அணியில் தேர்வாகியுள்ள வீரர்கள் விபரம்: 
ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), விராட் கோலி, யாஷஸ்வி ஜெய்ஷ்வால், சூர்ய குமார், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங், பும்ரா, முகமது சிராஜ்

ரிவர்ஸ் வீரர்கள் : சப்மான் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான் (தேவைப்பட்டால் மட்டும் இவர்கள் அமெரிக்காவிற்கு செல்வார்கள்)

வீரர்கள் தேர்வும்... சர்ச்சையும்...

இந்திய அணியில் தேர்வு செய்யப் பட்டுள்ள 15 வீரர்களில் ரோகித் சர்மா,  விராட் கோலி, ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஜடேஜா ஆகிய  6 வீரர்கள் மட்டுமே சூப்பர் பார்மில் உள்ள நிலையில், குல்தீப், சஹால், பும்ரா, ஜெய்ஷ்வால் ஆகிய 4 வீரர்கள் ஓரளவு பார்மில் உள்ளனர். முக்கி யமாக துணை கேப்டனாக நியமிக்கப் பட்டுள்ள ஹர்திக் பாண்டியா, சூர்ய குமார், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் ஆகியோர் பார்மிலேயே  இல்லை என்றாலும் அவர்களுக்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது ஏன்? என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்  கேள்வி எழுப்பியுள்ளனர். அதே போல நடப்பு ஐபிஎல் சீசனில் மிக அருமை யான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ருதுராஜ் கெய்க்வாட், சப்மன் கில், கே.எல்.ராகுல், ரிங்கு சிங், தினேஷ் கார்த்திக், ரவி பிஷ்னோய், டி.நடராஜன், சந்தீப் சர்மா, ரியான் பாரக் ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்காதது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

15 விக்கெட்டுகள் வீழ்த்திய நடராஜன் பிசிசிஐ கண்ணுக்குத் தெரியவில்லை தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கண்டனம்

கடந்த காலங்களைப் போலவே நடப்பு சீசன் டி-20 உலகக்கோப்பை தொடரில் தமிழ்நாடு வீரர்கள் யாருக்கும் வாய்ப்பு வழங்கவில்லை. சூப்பர் பார்மில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளரான டி.நடராஜன் நடப்பு சீசன்  ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை (ஹை தராபாத் அணி - 15) வீழ்த்தி யது மட்டுமல்லாமல் பர்பிள் தொப்பியையும் தன்வசம் வைத்துள்ளார். ஆனால் டி.நடராஜன் உலகக் கோப்பையில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளார். மேலும் ஓரளவு திடமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மூத்த வீரரான தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின், சாய் சுதர்சன், சாய் கிஷோர் உள்ளிட்ட தமிழர்களுக்கும் வாய்ப்பு அளிக்காததற்கு தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அமித் ஷா மகன் ஜெய் ஷா  தேர்வு செய்த அணியாக இருக்குமோ?

 ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகன் ஜெய் ஷாவின் கட்டுப்பாட்டில் இந்திய கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உள்ளது. பிசிசிஐ செயலாளராக உள்ள ஜெய் ஷாவுக்கு கிரிக்கெட் பற்றி எந்த பின்புலமும் இல்லாத நிலையில், கல்லா கட்டவே அவரை இந்திய கட்டுப்பாட்டு வாரியத்திற்குள் கொண்டு வரப்பட்டதாக நாள்பட்ட சர்ச்சை உள்ளது. இத்தகைய சர்ச்சைக்கு மத்தியில் ஜெய் ஷாவும் கிரிக்கெட் விளையாட்டிற்கு சம்பந்தம் இல்லாத செயலிலேயே ஈடுபட்டு வருகிறார். அதாவது கிரிக்கெட் நலன் பற்றி பணியாற்றாமல் விளம்பர வருவாய், இதர வருவாய் ஈர்ப்பு பற்றியே ஜெய் ஷா செயலாற்றி வருகிறார். 

இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உலகக்கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிப்பில் பல்வேறு சர்ச்சைகள் உள்ள நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி ஜெய் ஷாவின் உத்தரவில் நியமிக்கப்பட்டு இருக்கலாம். அதனால் தான் இப்படி இந்திய அணி “சர்ச்சை அணியாக” உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

;