மான்டே கார்லோ மாஸ்டர்ஸ்
ஆஸ்திரேலியாவின் மினார் அதிர்ச்சி தோல்வி
களிமண் தரையில் நடைபெறும் முக்கிய சர்வதேச டென்னிஸ் தொடரான மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் தொடர் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. ஆடவருக்கு மட்டும் இந்த தொடரில் தற்போது 3-வது சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. புதனன்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 14-ஆம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், தரவரிசையில் இல்லாத ஜெர்மனி வீரர் ஸ்ட்ரப்பிடம் 3-6,2-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். இதே பிரிவின் மற்றொரு 3-வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஜுவரேவ் 6-4, 6-4 என்ற செட் கணக்கில், தரவரிசையில் இல்லாத ஸ்பெயினின் பாடிஸ்டாவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மைக்கேல் ஜோர்டனின் காலணிகள் ரூ.18 கோடிக்கு ஏலம்
பிரபல கூடைப்பந்து வீரரான அமெரிக்காவின் மைக்கேல் ஜோர்டனின் காலணிகள் ரூ.18 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. 1998-ஆம் ஆண்டு என்பிஏ தொடரின் இறுதிச்சுற்றில் சிக்காகோ புல்ஸ் - உடா ஜாஜ் அணிகள் மோதின. ஜோர்டனின் அபார ஆட்டத்தால் சிக்காகோ புல்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிச்சுற்றில் ஜோர்டன் அணிந்து விளையாடிய 13 எஸ் வகை காலணிகள் ஏலம் விடப்பட்ட நிலையில், 2.2 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் 18 கோடி ரூபாய்) விற்பனையாகி உள்ளது. காலணிகளை போலவே ஜோர்டானின் ஜெர்சிகளும் அதிக தொகைக்கு ஏலம் போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலவசம் என்றாலும் ஜியோ சினிமாவிற்கு மார்கெட்டிங் இல்லை ஒன்றிரண்டு ஆட்டங்கள் மட்டுமே 1 கோடி பேர் ரசிக்கின்றனர்
16-வது சீசன் ஐபிஎல் தொடரை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், ஓடிடி பிளாட்பாரத்தில் அம்பானியின் ஜியோ சினிமா நிறுவனமும் இலவசமாக வழங்குகிறது. ஜியோ சினிமாவின் பெயர் மற்றும் மார்கெட்டிங்கை பிரபலப்படுத்த அம்பானி இலவசம் அளித்தும் ரசிகர்களிடையே பிரபலம் இல்லாமல் உள்ளது. ஒன்றிரண்டு ஆட்டங்கள் மட்டுமே 80 லட்சம் முதல் 1 கோடி ரசிகர்கள் ஆட்டத்தை ஜியோ சினிமாவில் காணுகின்றனர். அதாவது சென்னை, மும்பை, பெங்களூரு ஆகிய அணிகள் மோதும் ஆட்டங்களை மட்டும் 1 கோடி ரசிகர்கள் ஜியோ சினிமாவில் பார்க்கின்றனர். மற்ற ஆட்டங்களை 30 முதல் 40 லட்சம் பேர் மட்டுமே ஜியோ சினிமாவில் காணுகின்றனர். சந்தா தொகை பிடித்தும் டாப் கியரில் இருந்த ஹாட் ஸ்டார் கடந்த ஐபிஎல் சீசன்களில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஓடிடி பிரிவான ஹாட் ஸ்டார் நிறுவனம் ஐபிஎல் தொடரை சந்தா தொகையுடன் ஒளிபரப்பியது. சந்தா தொகை செலுத்த வேண்டிய கட்டாயம் இருந்தாலும் ஒவ்வொரு ஐபிஎல் ஆட்டங்களையும் சராசரியாக 50 லட்சம் பேர் பார்த்தனர். சென்னை, மும்பை, பெங்களூரு ஆண்கள் மோதும் ஆட்டங்களை 1 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் ஹாட் ஸ்டாரில் பார்த்த வரலாறும் உள்ளது. ஆனால் ஜியோ சினிமா இலவசம் அளித்தும் 1 கோடிக்கு திக்கு திணறி வருகிறது.
இன்றைய ஆட்டம்
பஞ்சாப் - குஜராத்
இடம்: மொஹாலி, பஞ்சாப் நேரம் : இரவு 7:30
(சேனல் : தொலைக்காட்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஒடிடி - ஜியோ சினிமா)