games

img

டபிள்யுபிஎல் தொடரில் இன்று இலவச நுழைவு

மகளிருக்கான நாட்டின் முதல் பிரிமீயர் லீக் டி-20 தொடரான டபிள்யுபிஎல் தொடர் சுவாரஸ்யமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு டபிள்யுபிஎல் தொடரில் புதனன்று (மார்ச் 8) நடைபெறும் குஜராத் - பெங்களூரு லீக் ஆட்டத்தைக் காண ரசிகர்களுக்கு இலவச நுழைவை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ). திங்களன்று நடைபெற்ற பெங்களூரூ - மும்பை அணிகள் விளையாடிய ஆட்டத்தின் பொழுது டிஜிட்டல் ஸ்கோர் போர்டில் இலவச நுழைவு குறித்த விளம்பர அறிக்கை ஒளிபரப்பட்டது. மகளிருக்கும் மட்டுமல்ல இலவச நுழைவு மகளிருக்கு மட்டுமல்ல அனைத்து ரசிகர்களுக்கும் பொருந்தும். ஒரு பெரிய லீக் கிரிக்கெட் போட்டியில் மகளிர் தினத்திற்காக இலவச நுழைவு அளிப்பது இதுவே முதல் முறையாகும். இலவச நுழைவு அறிவிப்பு மூலம் வரும் காலங்களில் மகளிர் கிரிக்கெட் மற்றும் டபிள்யுபிஎல் பார்வையாளர் ரேட்டிங் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு உலகில் பெண்களுக்கு முழு ஆதரவு அளிக்கும் சீனா, அமெரிக்கா

விளையாட்டு உலகில் பெண்களுக்கு அதிக ஆதரவு அளிக்கும் நாடாக அமெரிக்கா உள்ளது. குளோபல் ஸ்போர்ட்டிங் நேசன் (GLOBAL SPORTING NATION) கணக்கீடு அறிக்கையின்படி அமெரிக்காவில் மொத்த மக்கள் தொகையில் (மகளிர் மட்டும்) 12.6% பெண்கள் விளையாட்டுக் களத்தில் உள்ளனர். அமெரிக்காவிற்கு அடுத்து சீனாவில் 6.3% பெண்கள் விளையாட்டு உலகில் சாதிக்கின்றனர். தொடர்ந்து  கனடா 6.2%, ஆஸ்திரேலியா 5.3%, பிரிட்டன் 4.4%, ஜப்பான் 4.4%, பிரான்ஸ்  4.2%, ஜெர்மனி 4.1%, இத்தாலி 3.5%, நெதர்லாந்து 3.2% ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளது. முதல் 10 இடங்களில் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் மட்டுமே ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவையாகும்.

இந்தியாவின் நிலை மோசம்

வயதுக்கு வந்தவுடன் திருமணம், படித்தவுடன் திருமணம், மூடநம்பிக்கை நிகழ்வுகளால் திருமணம் என்ற திருமண காரியங்களால் இந்தியாவில் விளையாட்டு நிலைமை மிக மோசமான அளவில் உள்ளது. உலக மக்கள் தொகையில்  இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா, விளையாட்டுக்கான குளோபல் தரவரிசையில் வெறும் 0.8% பெண்களை மட்டுமே விளையாட்டு உலகிற்கு அனுப்பி 48-வது இடத்தில்  உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் பாரபட்சமின்றி எவ்வித விளையாட்டாக இருந்தாலும், எந்தவித எதிர்ப்புகள் இன்றி பெண்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அப்படி அல்ல. திருமணம் உள்ளிட்ட காரணங்களால் படிப்புத்துறையை தேர்ந்தெடுக்கவே பெண்களுக்கு ஒருவித கிடுக்குப்பிடி அளிக்கப்படுகிறது. இதில் விளையாட்டுத் துறையில் பெண்கள் அனுமதியை பற்றி தனியாக விளக்கம் அளிக்கவா வேண்டும்.

டபிள்யுபிஎல் தொடரிலும் ஆதிக்கம் செலுத்தும் மும்பை

ஆடவருக்கான ஐபிஎல் தொடரைப் போல டபிள்யுபிஎல் தொடரிலும் மும்பை அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஒரே அணியின் பெயர், ஒரே  உரிமையாளர் (அம்பானி மனைவி), ஒரே மாதிரி கேப்டன் (இரு அணிகளிலும் இந்திய தேசிய கேப்டன்) இரு அணிகளுக்கும் பல்வேறு ஒற்றுமைகள் இருப்பதால் ஐபிஎல் மும்பை ரசிகர்கள், டபிள்யுபிஎல் மும்பை அணிக்கும் ரசிகர்களாக மாறி ஆதரவு அளித்து வருகின்றனர்.

இன்றைய டபிள்யுபிஎல் ஆட்டம்
குஜராத் - பெங்களூரு
நேரம் : இரவு 7:30 மணி
இடம் : பிராபோர்ன், மும்பை
இன்று கட்டணம் கிடையாது, அனுமதி இலவசம்.
சேனல் : ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா ஓடிடி (இலவசம்)