games

img

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து முகமது ஷமி நீக்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளரான முகமது ஷமி நீக்கப்பட்டார். இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

அது மட்டுமின்றி, தீபக் சாஹர் ஒருநாள் அணியில் இருந்து நீக்கபட்டார். ஸ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் பங்கேற்க மாட்டார் எனவும் பிசிசிஐ அறிவித்து இருக்கிறது.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை விட டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக நடைபெறும் டெஸ்ட் தொடர் இது என்பதால் இந்திய அணி இரண்டு போட்டிகளையும் வென்றாக வேண்டும். இந்த நிலையில், டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் வேகப் பந்துவீச்சாளரான முகமது ஷமி காயம் காரணமாக நீக்கப்பட்டு இருக்கிறார்.

முகமது ஷமிக்கு கணுக்காலில் காயம் உள்ளது. 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரிலேயே அவர் வலியுடன் தான் ஆடினார் என கூறப்படுகிறது.

உலகக்கோப்பை தொடர் முடிந்த உடன் தன் காயத்துக்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், முகமது ஷமி பெயர் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இடம் பெற்றது. அப்போதே பிசிசிஐ முகமது ஷமி காயம் சரியானால் மட்டுமே அவர் டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என கூறி இருந்தது.

இந்த நிலையில், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் இப்போது பந்து வீசுவது நல்லதல்ல என கூறியதை அடுத்து பிசிசிஐ முகமது ஷமியை டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து நீக்கி இருக்கிறது. மாற்று வேகப் பந்துவீச்சாளராக யாரையும் பிசிசிஐ அறிவிக்கவில்லை.

அது குறித்து பின்னர் முடிவு செய்யப்படலாம். தீபக் சாஹர் தன் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து ஆஸ்திரேலிய டி20 தொடரின் கடைசி போட்டியில் இருந்து விலகி சென்றார். அவர் மனதளவில் போட்டிகளில் ஆட தயார் ஆகவில்லை என்பதால் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் பங்கேற்கவில்லை. அந்த தொடர் முடியும் வரை அவர் இந்தியாவில் தான் இருந்தார்.
ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதில் இருந்தும் அவர் நீக்கப்பட்டு இருக்கிறார். ஸ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருப்பதால், அவர் கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டு இருக்கிறார். டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் வகையில் அவருக்கு அப்போது ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக பிசிசிஐ அறிவித்து இருக்கிறது.

 

;