games

img

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா 2022

விளையாட்டு உலகில் முதன்மையான திருவிழாவான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 22-வது சீசன் அரபு நாடான கத்தாரில் நடைபெற்று வருகிறது.

லீக் ஆட்டங்களிலேயே நாக் அவுட் பிரச்சனை-2 

 

சிக்கலை சமாளிக்குமா உருகுவே?

ஒரு தோல்வி, ஒரு டிரா என வெறும் ஒரு புள்ளிகளுடன் குரூப் “எச்” பிரிவில் கடைசி இடத்தில் உள்ளது உருகுவே. டிசம்பர் 2-ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு குரூப் “எச்” பிரிவின் கடைசி லீக் ஆட்டங்கள் (கானா - உருகுவே, போர்ச்சுக்கல் - தென்கொரியா) நடைபெறுகிறது. இந்த 2 ஆட்டங்களில் கானாவை உருகுவே கண்டிப்பாக வீழ்த்த வேண்டும். போர்ச்சுக்கல், தென் கொரியாவை வீழ்த்த வேண்டும். இப்படி நடந்தால் உருகுவே நாக் அவுட் சுற்றுக்கு எளிதாக முன்னேறும். கானாவை உருகுவே வீழ்த்தி, போர்ச்சுக்கல் - தென் கொரியா ஆட்டம் டிரா ஆனாலும் உருகுவே நாக் அவுட்டுக்கு தகுதி பெறும். கானா - உருகுவே ஆட்டம் டிரா ஆனால் உருகுவே மூட்டை முடிச்சுக்களை கட்டி விமான நிலையம் செல்ல வேண்டியதுதான்.

 குரூப் “எச்” பிரிவு (புள்ளிப்பட்டியல்)

   நாடு                ஆட்டம்        வெற்றி     டிரா        தோல்வி    புள்ளிகள்

போர்ச்சுக்கல்            2                2              0                0                     6
கானா                          2                1               0                1                      3
தென்கொரியா        2                0              1                 1                       1
உருகுவே                    2                0               1                1                       1        

வெற்றி கணிப்பு

கானா-உருகுவே: பலம், பார்ம் அடிப்படையில் -  உருகுவே வெல்லலாம் போர்ச்சுக்கல்-தென்கொரியா: பலம், பார்ம் அடிப்படையில் - போர்ச்சுக்கல் வெல்லலாம்

போர்ச்சுக்கல்: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிவிட்டது.  இந்த ஆட்டம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. தென்கொரியா: வென்றால் நாக் அவுட் வாய்ப்புள்ளது (அதிர்ஷ்டத்தில் கிடைக்கலாம்). தோற்றால் கத்தார் ஏர்வேஸ் விமானம்தான். கானா: வென்றால் நாக் அவுட் சுற்று. தோற்றால் அவுட்

நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுமா பெல்ஜியம்?

கடந்த சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அபாயகரமான அணியாக வலம் வந்த பெல்ஜியம் அணி நடப்பு சீசனில் பார்ம் பிரச்சனை காரணமாக குரூப் “எப்” பிரிவில் கானல் நீரைப் போன்று காணாத இடத்தில் உள்ளது. டிசம்பர் 1-ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு குரூப் “எப்” பிரிவில் குரோஷியா - பெல்ஜியம், கனடா - மொரோக்கோ 2 ஆட்டங்கள் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. இந்த 2 ஆட்டங்களில் குரோஷியாவை பெல்ஜியம் வீழ்த்த வேண்டும். மேலும் கனடா - மொரோக்கோவை வீழ்த்த வேண்டும் அல்லது ஆட்டம் டிரா ஆக வேண்டும். இவ்வாறு நடந்தால் பெல்ஜியம் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும்.  குரோஷியா பெல்ஜியத்தை வீழ்த்தினாலோ,  மொரோக்கோ கனடாவை வீழ்த்தினாலோ, குரோஷியா பெல்ஜியத்தை வீழ்த்தி கனடா - மொரோக்கோ ஆட்டம் டிரா ஆனாலோ மொரோக்கோ அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். முக்கியமாக இந்த இரு ஆட்டங்கள் டிரா ஆனாலும் மொரோக்கோ தான் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். பெல்ஜியத்தின் நாக் அவுட் வாய்ப்பு ஆப் சைட் கோல் போன்றுதான்.

 குரூப் “எப்” பிரிவு (புள்ளிப்பட்டியல்)

   நாடு                ஆட்டம்       வெற்றி   டிரா        தோல்வி       புள்ளிகள்
குரோசியா               2                1               1                  0                     4
மொரோக்கோ         2                1               1                  0                     4
பெல்ஜியம்               2                1               0                 1                      3
கனடா                        2                0              0                 2                     0        

வெற்றி கணிப்பு

குரோஷியா- பெல்ஜியம் : பலம், பார்ம் அடிப்படையில் - குரோஷியா வெல்லலாம் கனடா- மொரோக்கோ : பலம், பார்ம் அடிப்படையில் - மொரோக்கோ வெல்லலாம்

குரோஷியாவிற்கும் சிக்கல்

பெல்ஜியத்துடனான கடைசி ஆட்டத்தில் வெற்றி அல்லது டிரா செய்தால் குரோஷியா அணி எளிதாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். தோல்வி அடைந்தால் கோல் பிரச்சனையில் சிக்க வேண்டி இருக்கும். மொரோக்கோ: வென்றால், டிரா செய்தால் நாக் அவுட் சுற்று. தோற்றால் அவுட் கனடா: ஏற்கெனவே வெளியேறிவிட்டது. இந்த ஆட்டம் வெறும் சம்பிரதாயம்தான்

கத்தாரில் ஒட்டக காய்ச்சல் பரவல் கலக்கத்தில் கால்பந்து ரசிகர்கள்

கத்தார் உலகக் கோப்பை தொடரில் இளம் அணிகளின் அதிரடி ஆட்டத்தால் லீக் சுற்று முதலே ஒவ்வொரு ஆட்டமும் பரபரப்பாக   நடைபெற்று வரும் நிலையில் கத்தார் செல்லும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், 2 நாட்களுக்கு முன் உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்தனர். அது யாதெனில் மத்திய கிழக்கு நாடுகளில் மெர்ஸ் (ஒட்டக காய்ச்சல்) எனப்படும் சுவாச பாதிப்பு நோய் பரவல் தற்போது வேகமாக பரவி வருகிறது எனவும் கொரோனாவை விட கொடியது என எச்சரித்து உள்ளனர். கொரோனா, எம்-பாக்ஸ் (குரங்கம்மை) உள்ளிட்ட அதிக ஆற்றல் வாய்ந்த தொற்று ஆபத்துகளை ஏற்படுத்தக் கூடிய 8 வகையான பாதிப்பு வகைகளில் ஒட்டக காய்ச்சலும் ஒன்று என சமீபத்திய ஆய்வு அறிக்கை தெரிவித்து உள்ளது. கத்தாரில் 28 பேருக்கு மெர்ஸ் பாதிப்பு (10 லட்சம் பேரில் 1.7 பேருக்கு பாதிப்பு) ஏற்பட்டு உள்ளது என நோய்த்தொற்று அறிவியல் தரவுகளும் வெளியாகியுள்ளது. உலகக்கோப்பை கால்பந்து போட்டியை காண சென்றுள்ள லட்சக்கணக்கான ரசிகர்கள் கவனமுடன் இருக்கும்படியும் உலக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இன்றைய ஆட்டங்கள்

குரூப் “எப்”

குரோஷியா - பெல்ஜியம்

நேரம்: இரவு 8:30 மணி
இடம்: அஹமத் பின் அலி

குரூப் “எப்”

மொரோக்கோ - கனடா

நேரம்: இரவு 8:30 மணி
இடம்: அல் துமமா

குரூப் “இ”

ஜப்பான் - ஸ்பெயின்

நேரம்: நள்ளிரவு 12:30 மணி (வெள்ளியன்று அதிகாலை)

குரூப் “இ”

ஜெர்மனி - கோஸ்டாரிகா

நேரம்: நள்ளிரவு 12:30 மணி (வெள்ளியன்று அதிகாலை) இடம்: அல் பாயித்

 

சேனல் : ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா (ஓடிடி) இலவசமாக காணலாம்

நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய அணிகள்

குரூப் “ஏ” - நெதர்லாந்து, செனகல்
குரூப் “பி” - இங்கிலாந்து, அமெரிக்கா
குரூப் “டி”  - பிரான்ஸ்
குரூப் “ஜி” - பிரேசில்
குரூப் “எச்” - போர்ச்சுக்கல்

மாலை 5 மணி நிலவரப்படி மொத்தம் 7 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

 

 



 


 

 


 

;