games

img

கனவுகள் மெய்ப்பட.. இந்திய ஹாக்கி அணியின் 40 ஆண்டு ஒலிம்பிக் சோக நிகழ்வுக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைப்போம்... கேப்டன் மன்பிரீத் சிங்....

கால்பந்து ஜாம்பவான்கள் மரடோனா, கிறிஸ்டினோ ரொனால்டோ, டேவிட் பெக்காம் ஆகியோரின் தீவிர ரசிகராக இருந்தாலும்  ஹாக்கியில் சர்தார் சிங்தான் ‘ரோல் மாடல்’. ஏராளமான நட்சத்திரங்களை உருவாக்கிய புகழுக்கு சொந்தமான ஜலந்தர் சுஜித் அகாடமியே  மன்பிரீத் சிங்கையும் பட்டை தீட்டியது. 12 வயதில் பயிற்சியில் சேர்ந்தாலும் மிகக்குறுகிய காலத்திலேயே இந்திய ஜூனியர் அணிக்காக சர்வதேச அளவில் அறிமுகமானார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஜூனியர் உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி மலேசியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி கோப்பையை வென்று கொடுத்த மன்பிரீத் சிங்குக்கு ‘சிறந்த ஜூனியர்’ விருது வழங்கப்பட்டது.

வெற்றி மேல் வெற்றி
முதன் முதலாக காமன்வெல்த் விளையாட்டில் பதக்கம் வென்று கொடுத்து இந்திய அணியில் இடத்தை தக்க வைத்துக் கொண்ட இவரது தலைமையின் கீழ் சுல்தான் கோப்பையையும் வென்றது ஜூனியர் அணி.2017 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு சிறந்த ஆட்டத்தால் வெள்ளிப் பதக்கம் வென்று 38 ஆண்டுகால சோக நிகழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.2014ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தட்டி வந்தார். கிளாஸ்கோ நகர் காமன்வெல்த்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெள்ளிப்பதக்கம்  வெல்வதற்கு துணை நின்றார். முத்தரப்பு தொடர், உலக லீக், சாம்பியன்ஸ் கோப்பை, ஆசிய சாம்பியன் கோப்பை, ஆசிய விளையாட்டுப் போட்டி என வரிசையாக பதக்கங்களை வென்று வெளி நாடுகளிலும் எழுச்சிக்கு வித்திட்டவர் மன்பிரீத் சிங்.

மன உறுதி
கடந்த 2014ஆம் ஆண்டு  சுல்தான் அஸ்லான் ஷா கோப்பையில் ஜப்பானை எதிர்த்து விளையாடிக் கொண்டிருந்த மன்பிரீத் சிங்கிற்கு கிடைத்த தகவல் பேரதிர்ச்சியாகும். அது தந்தையின் மரணம். ஆனாலும் மனம் தளரவில்லை. ஆட்டத்தை தொடர்ந்தார். வெற்றியும் கிடைத்தது. அடுத்த வினாடியே தாயகம் திரும்பினார்.மன்பிரீத் சிங் விளையாடாத அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதனால் மனவேதனை அடைந்த அவர், உடனடியாக அணியில் இணைந்து கனடா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளை தொடர்ச்சியாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.தேசத்தின் பெருமையை நிலைநாட்டவும் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றவும் மலேசியாவுக்கு வழியனுப்பி வைத்த தாய் மன்ஜித் சிங்கின் நம்பிக்கை வீண் போகவில்லை. 18 கோல்கள் அடித்து பரவசப்படுத்திய மன்பிரீத் சிங் ‘சிறந்த ஆட்டக்காரர்’ விருதையும் தட்டி வந்தார்.

சம்மேளன விருது வென்ற முதல் இந்தியர்
2019 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவை வீழ்த்தி, டோக்கியோ போட்டிக்கு தகுதி பெற முக்கிய பங்காற்றி 35.2 சதவீதம் வாக்குகள் பெற்று சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின், ஆண்டின் ‘சிறந்த வீரர்’ விருதை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தவர் இந்திய கேப்டனும் மிட்பீல்டருமான மன்பிரீத் சிங்.

விவசாயக் குடும்பம்
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகே உள்ள மிதாப்பூர் கிராமத்தின் விவசாயக் குடும்பத்தில் 1992 ஆம் ஆண்டு பிறந்தவர் மன்பிரீத் சிங். மூத்த சகோதரர்கள் அமந்தீப், சுக்ராஜ் சிங் இருவரும் ஹாக்கி வீரர்கள். விளையாட்டில் சகோதரர்கள் வாங்கிய விருதுகளை பார்த்து தானும் இது போன்று விருதுகளை பெற வேண்டுமென்றும் ஆசைப்பட்டார். அத்தோடு நின்றுவிடவில்லை. 9 வயதில் ஹாக்கி மட்டையை கையில் பிடித்து, முன்னாள் கேப்டன் பர்கத் சிங்கிடம் பயிற்சி எடுத்தார். மைதானத்திற்கு சென்று திரும்பும் பொழுது ஒவ்வொரு முறையும் காயத்துடன் வருவதைப் பார்த்து தாய் பதறி போவார். இந்த விளையாட்டு உனக்கு தேவை இல்லை என வீட்டிற்குள் பூட்டி வைத்தும் பார்த்தார். ஆனாலும் அவர் பின்வாங்கவில்லை. சகோதரர்கள் வென்ற விருதுகள் உத்வேகம் அளித்தன. 29 வயதாகும் அவரது பிடிவாத குணம் வெற்றிபெற்றது. பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த மலேசியரான இல்லி நஜ்வா சாதிக் என்ற பெண்ணை மணந்தார்.

தலைமைப் பொறுப்பு
பள்ளி பருவத்தில் சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருந்த மன்பிரீத் சிங், ஹாக்கி விளையாட்டில் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்த எப்போதும் தயக்கம் காட்டியதில்லை. தொழில்முறை வீரராக மாறியதும் தனக்கென்று தனி ‘ஸ்டைலை’ உருவாக்கிக் கொண்டது தேர்வுக் குழுவினரை வெகுவாகக் கவர்ந்தது. 2017 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையின்போது இந்திய கேப்டன் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் காயமடைய, அந்தப் பொறுப்பை மன்பிரீத் சிங்கிடம் தற்காலிகமாக கொடுத்தனர். 25 வயதான இளம் மன்பிரீத் சிங் தலைமையின் கீழ், இந்திய அணி லீக் ஆட்டங்கள் முடிவில் முதலிடம் பிடித்து, கோப்பையையும் வென்று கொடுக்க, அணியின் கேப்டன் பொறுப்பு அவரை தேடி வந்தது. இவரது சேவையைப் பாராட்டி அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.

ஆரம்பமே அசத்தல்!
ஒலிம்பிக்கில் வெற்றிகரமான ஹாக்கி அணி என்றால் அது இந்திய அணிதான். வரலாற்றில் 1928, 1932, 1936, 1948, 1952, 1956, 1964, 1980 ஆம் ஆண்டுகளில் 8 முறை தங்கம் வென்று சாதித்து முடிசூடா மன்னர்களாக வலம் வந்தவர்கள் இந்திய வீரர்கள். 1980 மாஸ்கோவில் தங்கப் பதக்கம் வென்றதே கடைசியாகும். அதன் பிறகு, ஒரு வெண்கலப் பதக்கம்கூட வென்றது இல்லை. இவ்வளவு ஏன்? தகுதி போட்டியிலும் பங்கேற்க தகுதி இல்லை என்ற நிலை உருவானது.இந்தப் பின்னணியில் 40 ஆண்டுகளுக்கு பிறகு, ஒலிம்பிக்கில் விளையாடும் இந்திய அணியின் ஆட்டத்தில் மெருகேறி இருப்பதை பார்க்க முடிந்தது. தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கியிருக்கிறது. அடுத்தடுத்த ஆட்டங்களில் ஸ்பெயின், நடப்புச் சாம்பியன் அர்ஜெண்டினா, போட்டியை நடத்தும் ஜப்பான் ஆகிய அணிகளை எதிர் கொள்கிறது. 

சர்வதேச அளவில் தலைகுனிந்திருந்த இந்திய அணி, ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற தூணாக நின்று  அணியை சிறப்பாக வழிநடத்திச் செல்லும் இளம் கேப்டன் மன்பிரீத் சிங், ஒலிம்பிக் சோகத்தை இம்முறை மாற்றுவார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். 

===சி. ஸ்ரீராமுலு===

;