45 நாடுகள் பங்கேற்றுள்ள 19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. அக்., 8 வரை இந்த தொடரில் போட்டியை நடத்தும் சீனா அனைத்து பிரிவுகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2022இல் நடக்க வேண்டிய 19-ஆவது சீசன் ஆசிய விளையாட்டுப் போட்டி தாமதமாக 2023இல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கு 6வது தங்கம்
வியாழனன்று நடைபெற்ற ஆடவர் 10 மீ பிஸ்டல் துப்பாக்கிச்சுடுதல் அணி பிரிவில் அர்ஜுன் சிங், சரபோஜித் சிங், நர்வால் ஷிவா ஆகியோர் அடங்கிய இந்திய அணி கடும் போராட்டத்துக்கு இடையே 1,734 (50x) புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றது. சீன அணி 1,733 (62x) புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், வியட்நாம் அணி 1,730 (59x) புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் வென்றனர். ஆடவர் 10 மீ பிஸ்டல் பிரிவில் தங்கப்பதக்கம் மூலம் இந்தியாவின் மொத்த தங்கப்பதக்க எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது. 6 தங்கப்பதக்கத்தில் துப்பாக்கிச் சுடுதலில் மட்டும் இந்தியாவிற்கு 4 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. குறிப்பாக மொத்த பதக்க எண்ணிக்கையில் இந்தியா துப்பாக்கிச்சுடுதலில் மட்டும் 13 பதக்கங்களை (4 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம்) வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குதிரையேற்றம் பிரிவில் மேலும் ஒரு பதக்கம்
குதிரையேற்றம் ஆடவர் தனிநபர் (dressage) பிரிவில் இந்தியாவின் அனுஷ் அகர்வல்லா 73.030 புள்ளிகளுடன் நூலிழையில் வெள்ளிப்பதக்கத்தை இழந்து வெண்கலப்பதக்கம் வென்றார். மலேசியாவின் முகமது 75.780 புள்ளிகளுடன் தங்கப்பதக்கமும், ஹாங்காங்கின் ஜாக்குலின் 73.450 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும் வென்றனர். நடப்பு சீசன் ஆசிய விளையாட்டு குதிரையேற்றம் பிரிவில் இந்தியாவுக்கு இது 2-வது பதக்கமாகும். ஏற்கெனவே அணி பிரிவில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்ற நிலையில், அனுஷ் அகர்வல்லா தங்கப்பதக்கம் வென்ற அணி பிரிவில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதக்கப் பட்டியல்
தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1.சீனா 88 50 26 164
2.தென்கொரியா 22 22 38 82
3.ஜப்பான் 18 29 29 76
5.இந்தியா 6 8 11 25
வெள்ளிப்பதக்கம் வென்ற “மணிப்பூர்” வீராங்கனை
சீனாவின் தற்காப்புக்கலை விளையாட்டு பிரிவான வுஷூ (WUSHU) பிரிவின் மகளிர் 60 கிலோ எடை பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவை சேர்ந்த ரோஷிவினா தேவி நௌரெம் - சீனாவின் ஸியோவெய்யை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சீனாவின் ஸியோவெய் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வெல்ல, இறுதி வரை போராடிய ரோஷிவினா தேவி வெள்ளிப்பதக்கம் வென்றார். இதில் மிக மிக முக்கியமான விஷயம் என்ன வென்றால் ரோஷிவினா தேவி மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த 5 மாதங்களாக மணிப்பூரில் நடந்து வரும் இனக்கலவரம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலை களை ஏற்படுத்தி வரும் நிலையில், மணிப்பூரை சேர்ந்த ரோஷிவினா தேவி ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்றிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
“மணிப்பூர் மக்களுக்கு” சமர்ப்பிக்கிறேன் ரோஷிவினா தேவி உருக்கம்
வெள்ளிப்பதக்கம் வென்ற பின் ரோஷிவினா தேவி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “வெள்ளிப் பதக்கம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், தங்கப்பதக்கத் தைப் பெற முடியாமல் போன தில் கொஞ்சம் வருத்தம் இருக் கிறது. இருப்பினும் இந்த வெள்ளிப் பதக்கத்தை “மணிப்பூர் மக்களுக்கு” அர்ப்பணிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
நெருங்க முடியாத உயரத்தில் சீனா
நடப்பு சீசன் ஆசிய விளையாட்டு தொடரை நடத்தும் சீனா வழக்கம் போல பதக்கப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. வியாழனன்று மாலை 5 மணி நிலவரப்படி சீனா 88 தங்கம், 50 வெள்ளி, 26 வெண்கலம் என மொத்தம் 164 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் பதக்கப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள தென் கொரியா வின் மொத்த பதக்க எண்ணிக்கை 82 பதக்கங்கள் (22 தங்கம், 22 வெள்ளி, 38 வெண்கலம்) என்ற நிலையில், சீனாவின் தங்கப்பதக்கத்துடன் (88 பதக்கம்) மொத்த பதக்க எண்ணிக்கையை ஒப்பிட முடியாத நிலையில் தென் கொரியா உள்ளது.