ஹாங்சோ, அக்.03- ஆசிய விளையாட்டு தொடரில் மகளிர் பிரிவில் மட்டும் ஒரே நாளில் இந்தியாவிற்கு 2 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. பாருல் சௌத்ரி 19-வது சீசன் ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடை பெற்று வருகிறது. செவ்வாயன்று நடை பெற்ற மகளிர் 5,000 மீட்டர் ஓட்டப்பந்த யத்தில் இந்திய வீராங்கனை பாருல் சௌத்ரி பந்தைய தூரத்தை 15:14.75 நிமிடத்தில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். இப்பிரிவில் ஜப்பான் வீராங்கனை (15:15.34 நிமிடம்) ரிரிகா வெள்ளிப்பதக்கமும், கஜகஸ்தான் வீராங்கனை கரோலின் (15:23.12 நிமிடம்) வெண்கலப்பதக்கமும் வென்றனர். ஏற்கனவே திங்களன்று நடைபெற்ற மகளிர் 3,000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் பாருல் சௌத்ரி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஈட்டி எறிதல் இதேபோல மகளிர் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீராங்கனை அன்னு ராணி 62.92 மீ தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். இலங்கை வீராங்கனை நதீஷா (61.57 மீ) வெள்ளிப்பதக்கமும், சீன வீராங் கனை லியு (61.29 மீ) வெண்கலப்பதக்கமும் வென்றனர்.