மும்பை
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கொரோனா பரவல் காரணமாக மகாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் புனே நகரில் உள்ள மைதானங்களில் நடைபெற்று வருகிறது.
தொலைக்காட்சித் தரவரிசை விவரங்களை வெளியிடும் பார்க் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் நடப்பு சீசன் ஐபிஎல் போட்டியில் முதல் 8 ஆட்டங்களின் தொலைக்காட்சித் தரவரிசை 33% குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கடந்த வருடத்துடன் இதே 8 போட்டிகளின் முடிவில் ஐபிஎல் போட்டியின் தொலைக்காட்சித் தரவரிசையில் 33 சதவீதம் குறைந்துள்ளது.
தரவரிசை குறைந்ததற்கு முதல் வாரத்திலேயே பகலில் ஆட்டங்கள் நடத்தப்பட்டது தான் காரணம் என கூறப்படுகிறது. கடந்த வருடம் முதல் வாரத்தில் பகல் ஆட்டங்கள் நடைபெறவில்லை என்பது ஒரு சாட்சியாக உள்ளது.
மேலும் அதிக ரசிகர்களைக் கொண்ட சென்னை, மும்பை அணிகள் இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோற்றிருப்பதும் சரிவுக்கு ஒரு காரணமாகவும் கூறப்படுகிறது.
இம்முறை கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் தரவரிசையில் பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக சொல்லபடுகிறது. கடந்த 2020, 2021-ஆம் ஆண்டு சீசனில் கொரோனா கட்டுப்பாடுகளால் ஐபிஎல் போட்டிக்கு தொலைக்காட்சி மூலம் அதிகப் பார்வையாளர்கள் கிடைத்தார்கள்.
எது எப்படி இருந்தாலும் தொலைக்காட்சித் தரவரிசை 33% குறைவது சாதாரண விஷயம் அல்ல. இந்த தரவால் ஐபிஎல் போட்டி தனது சுவாரஸ்யத்தை இழக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.