ஐபிஎல் தொடரின் 2022 சீசனில் கூடுதலாக 2 அணிகள் (அகமதாபாத், லக்னோ) களமிறக்கப்படுகின்றன. இதில் லக்னோ அணி நிர்வாகம் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும் அதிரடி பேட்டருமான கே.எல்.ராகுல் மற்றும் ஆப்கானிஸ்தானின் நட்சத்திர வீரர் ரஷீத் கான் ஆகியோரிடம் மறைமுகமாக ஒப்பந்தம் பற்றி பேசியதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு வாய்மொழி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் காரணமாகத்தான் பஞ்சாப் அணி கடந்த சீசனில் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுலை தக்க வைக்காமல் மாயங் அகர்வால், அர்ஷ்தீப் சிங் ஆகியோரை தக்கவைத்தது. இதே போல ரஷீத் கானையும் ஹைதராபாத் அணி தக்கவைக்கவில்லை. இந்நிலையில் விதிகளுக்கு புறம்பாக கே.எல்.ராகுல் மற்றும் ரஷீத் கான் ஆகியோர் லக்னோ அணி நிர்வாகத்தில் தொடர்பு வைத்திருப்பது நிரூபிக்கப்பட்டால் பிசிசிஐ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டால் குறைந்தப்பட்சம் இருவருக்கும் ஐபிஎல் தொடரில் ஒருவருட தடை விதிக்கப்படலாம்.