“ஆணுக்கு பெண் சமம் என்று உரிமை பற்றி பேசுபவர்கள் ஆயிரம். ஆனால் அவை வீடுகளில் கூட கடைபிடிக்கப்படுவதில்லை என்பது அனுபவம். ஆனால், இன்றைய தலைமுறை பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று எல்லா துறையிலும் நிரூபித்து வருகின்றனர்” ஆண் ஆதிக்க மனநிலையும் பல ஆண்களிடம் மாறியுள்ளது. அவர்களின் எதிர்கால கனவை நினைவாக்குவது வரை ஆண்களும் தங்களால் முடிந்த அளவு ஆதரவு கொடுக்கின்றனர் அல்லது கொடுக்க முயற்சி செய்கின்றனர். முன்பெல்லாம் கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகள் ஆண்களுக்கான விளையாட்டாகவே பார்க்கப்பட்டது. 1980 களின் பிற்பகுதி வரை, இந்திய மகளிர் அணியினர் சர்வதேச போட்டிகளில் விளையாட ரயில்களில் அதுவும் இரண்டாம் வகுப்பில் பயணிக்க வேண்டியிருந்தது. சில நேரங்களில் முன்பதிவு செய்யாமல் கூட பயணம் மேற்கொண்டுள்ளனர். அதுமட்டுமல்ல, தங்குவதற்கு கூட ஓட்டல்களில் அறை கொடுப்பதில்லை. பள்ளிக்கூட தரையில் மெத்தைகளை விரித்து தங்க வைத்தனர். இரு அணிகளுக்கு நடுவே ஒரு கயிற்றை கட்டி அதில் போர்வையை தொங்கவிட்டு தடுப்புச் சுவர் எழுப்பினார்கள்.இதைஇன்றைக்கு நம்புவது கடினமாக இருக்கும்.
மகளிர் கிரிக்கெட் அத்தகைய காலக் கட்டத்தையும் தாண்டித் தான் வந்திருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் சாந்தா ரங்கசாமி, டயானா போன்ற ஜாம்பவான்கள் அணியில் இருந்தனர்.அதன்பிறகுதான் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகளில் மகளிர் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்க தொடங்கினர். இன்றைய காலகட்டத்தில் பெண்களும் ஆண்களுக்கு நிகராக ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர். பாதுகாப்பான தங்கும் இடம் முதல் ஊதியம் வரை, எதிலும் ஆண்களுக்கு நிகரான சலுகைகள் பெண்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. ஆண்களுடன் ஒப்பிடுகையில் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் வசதிகள் மிகவும் குறைவுதான். ஆனால், மகளிர் கிரிக்கெட்டில் உயரங்களை எட்டுவதும், ஆண் வீரர்களுக்கு இணையாக பெண் வீராங்கனைகள் புகழ், மரியாதை, நட்சத்திர அந்தஸ்தை அடைவதும் என வரலாற்றுப் பக்கத்தில் பெண்களின் பெயரும் இடம் பெற்று வருகிறது. இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் பல சந்தர்ப்பங்களில் தங்கள் வலுவான ஆட்டத்தால் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார்கள். ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த கிரிக்கெட் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ‘இரட்டைச் சதம்’ அடித்து சாதனை நிகழ்த்தி இருக்கிறார்கள். பெண்களும் புதிய வரலாறு படைத்து வருகின்றனர்.
சாதனையின் மைல்கல்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் யார்? என்று கேட்டால் எல்லோரும் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் என்று சொல்வார்கள். ஆனால் அது உண்மை அல்ல. சச்சின் இந்த சாதனையை அடைவதற்கு 13 ஆண்டுகளுக்கு முன்பே, அதுவும் சச்சின் பிறந்த மும்பை மாநகரில் டென்மார்க் அணிக்கு எதிராக மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதுவும் 155 பந்துகளில் 229 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார் ஆஸ்திரேலியா கேப்டன் பெலிண்டா கிளார்க். அன்றைக்கு வயது 26. நியூ சவுத் வேல்ஸில் பிறந்த பெலிண்டா ஜான் கிளார்க் ஆஸ்திரேலிய அணிக்கு இரண்டு முறை உலக கோப்பையை தனது தலைமையில் வென்று கொடுத்தவர். 118 ஒரு நாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 15 டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவர் 2005 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். பெண் பிராட்மேன் என்று அழைக்கப்பட்டவர் பெட்டி வில்சன். ஆஸ்திரேலியாவுக்கு 10 ஆண்டுகள் விளையாடிய இவர், இங்கிலாந்துக்கு எதிராக 1958 ஆம் ஆண்டு விளையாடி டெஸ்ட் போட்டிதான் அவரது கடைசி ஆட்டமாகும். அன்றைக்கு 11 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 100 ரன்கள் குவித்து முதன் முதலாக சாதனை படைத்தார். இவரது சாதனையை 21 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஆண்கள் அணியின் இயன் போத்தம் ஒரு டெஸ்ட்டில் இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து 100 ரன்கள் மற்றும் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சமன் செய்தார்.
கிரிக்கெட் வரலாற்றில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அதுவும் ஒரு இஸ்லாமியப் பெண் 242 ரன்களை குவித்து சாதனை படைத்திருக்கிறார். பாகிஸ்தானை சேர்ந்த கிரன் பலுச், டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராக தனது சொந்த மண்ணில் (கராச்சி தேசிய மைதானத்தில்) தொடக்க வீராங்கனையாக களமிறங்கி 9 மணி நேரம் 44 நிமிடங்கள் களத்தில் நின்று 488 பந்துகளை எதிர் கொண்டு இரட்டை சதம் அடித்த ஒரே பாகிஸ்தான் வீராங்கனை மட்டுமல்ல, பெண்கள் கிரிக்கெட் உலகில் அதிக ரன்கள் குவித்து இன்று வரைக்கும் முதலிடத்தில் தொடர்கிறார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 12 ஆண்டு காலம் இந்திய பெண்கள் அணியை கேப்டனாக வழிநடத்தியவர் மிதாலி ராஜ். சிறந்த பரதநாட்டிய கலைஞரான மிதாலி ராஜ் குடும்பம் ராஜஸ்தானை சேர்ந்தது என்றாலும் தெலுங்கானாவில் வசித்து வருகிறது. தனது 16ஆவது வயதில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தத்தளித்துக் கொண்டு போக இருந்த போது நான்காவது வீராங்கனையாக களம் இறங்கி இரட்டை சதம் விளாசி முத்திரை பதித்தவர். ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 7000 ரன்களையும் தொடர்ச்சியாக ஏழு அரை சதமும் அடித்து இன்று வரை முதலிடத்தில் உள்ளார்.
கால்பந்திலும் அசத்திய கிரிக்கெட் வீராங்கனை!
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியில் 16 வயதில் அறிமுகமானவர் எல்லீஸ் பெர்ரி. 115 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் வேங்கையான இவர், ரன் குவிப்பில் பீல்டிங் செய்வதில் வல்லவர். 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை குவித்ததோடு 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தமானவர் இவர், இளஞ்சிவப்பு பந்து டெஸ்ட் போட்டியில் ஆட்டம் இழக்காமல் 213 ரன்கள் குவித்து சாதனை படைத்திருக்கிறார். கிரிக்கெட் மட்டுமின்றி கால்பந்தில் கொடிகட்டி பறந்தார். மிக இளம் வயதில் ஆஸ்திரேலிய அணிக்காக ஃபிஃபா உலகக் கோப்பையிலும் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியிலும் விளையாடிய இளம் வீராங்கனையும் இவரே. கரேன் ரோல்டன், மிச்செல் கோஸ்கோ, பிராட் பென்ட் இந்த மூன்று வீராங்கனைகளும் ஆஸ்திரேலிய அணிக்கு விளையாடியவர்கள். இவர்கள் மூவரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் 1998, 2001 ஆம் ஆண்டுகளில் இரட்டை சதம் அடித்து சாதித்துக் காட்டினார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நியூசிலாந்து அணிக்கு இரட்டை சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர் கிறிஸ்டி ஃபிளாவெல். இவரைத் தொடர்ந்து, நியூசிலாந்து தொடக்க வீராங்கனையான அமெலியா கெர் பாரம்பரிய கிரிக்கெட் குடும்பத்தில் பிறந்தவர். அயர்லாந்து அணியை துவம்சம் செய்து 134 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்து அனைத்து வகையான வடிவங்களிலும் கிரிக்கெட் உலகில் மிக இளம் வயதில் (17) சாதனை படைத்தவர் என்ற பெருமைக்கு உரியவர். 232 ரன்களுடன் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறார். ஆண், பெண் வேறுபாடு இன்றி, விளையாட்டுத் துறையில் மாற்றங்கள் நடப்பது பாராட்டுக்குரியது. இது வருங்கால இந்தியாவை மட்டுமல்ல உலகையே முன்னோடியாக நிலைநிறுத்தும்.
- சி. ஸ்ரீராமுலு