அகமதாபாத்
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகளை டெஸ்ட் தொடரின் முதல் மூன்று ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத் சர்வதேச மைதானத்தில் நேற்று (மார்ச் 5) தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. அஸ்வின் (3 விக்.,) - அக்சார் (4 விக்.,) சூழல் கூட்டணியில் சிக்கி சின்னாபின்னமான இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 55 ரன்கள் எடுத்தார்.
அடுத்த சில நிமிடங்களில் தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 12 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்துள்ளது.தொடர்ந்து இன்று 2-வது ஆட்டம் ஆட்டம் தொடங்கியது. ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் சற்று திணறிய இந்திய வீரர்கள் ரன் குவிப்பில் கடுமையாக போராடினர். தொடக்க வீரர் ரோஹித் சர்மா (49) நம்பிக்கை அளிக்க அதிக எதிர்பார்த்த விராட் கோலி (0) தங்க முட்டையுடன் வெளியேறினார்.
121 ரன்களில் மிடில் ஆர்டர் சரிந்ததால் இங்கிலாந்து அணியை போலவே இந்திய அணியும் சுருளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் இளஞ்சிங்கம் ரிசப் பண்ட் தனது வழக்கமான அதிரடியுடன் ரன் குவிக்க அணியின் ரன் விகிதம் தாறுமாறாக எகிறியது. அதிரடியுடன் சதமடித்த ரிசப் பண்ட் (101) ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சுழற்பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் (60) நிதானத்துடன் ரன் குவித்து விக்கெட்டுகள் சரியாமல் பார்த்துக்கொண்டார்.
2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 94 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 294 ரன்கள் குவித்துள்ளது. தொடரந்து நாளை காலை 9:30 மணிக்கு மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்குகிறது.