facebook-round

img

அவர்கள் எல்லாம் இந்த ‘தாய்’ கருத்தாக்கத்தில் எப்படி பொருந்துவார்கள்?

”வங்கிக்கு எதிராக போஸ்டர்கள் அடிக்கிறார்கள். நோட்டீஸ் கொடுக்கிறார்கள். சோஷியல் நெட்வொர்க்கில் எழுதுகிறார்கள். நாம் பணிபுரியும் வங்கி நம் தாய் அல்லவா? தாயைப் பழித்து யாராவது இப்படி எல்லாம் செய்வார்களா? நீங்களே சொல்லுங்கள்!”

இப்படி கொஞ்சம் கூட பொருத்தமில்லாத ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறார் தமிழ்நாடு கிராம வங்கியின் சேர்மன் மிஸ்டர் செல்வராஜ். தொழிற்சங்கங்களின் ஜனநாயக உரிமைகளையும், அவர்களது சட்டரீதியான இயக்கங்களையும் சமீபத்தில் நடந்த வங்கியின் ஒரு கூட்டத்தில் இப்படி கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறார்அவர்.

பிறப்பிலிருந்து நம்மோடு கூடவே இணைந்திருக்கும் அனைத்தையும் ‘தாயோடு’ சேர்த்து பார்ப்பது ஒரு வழக்கமாகவும், மரபாகவும் இருக்கிறது. ‘தாய் மண்’, ‘தாய் மொழி, என்றெல்லாம் காலம் காலமாக அழைக்கப்படுவதை பார்க்கிறோம். அத்தகைய கருத்தாக்கங்களையும் கூட நவீன சிந்தனைகள் மறுபரிசீலனை செய்து வருகின்றன.

இந்த வேலையும், வேலை செய்யும் நிறுவனமும் நம்மோடு பிறப்பிலிருந்து ஒட்டியே வருவதுமல்ல. தொப்புள்கொடி உறவுமல்ல.

தமிழ்நாடு கிராம வங்கி என்பது ஒரு நிறுவனம். நாம் இங்கு வேலை பார்க்கிறோம். முதலாளி – தொழிலாளி என்னும் உறவே இங்கு நிலவுகிறது. இந்த உறவு எப்படி இருக்க வேண்டும், எப்படி பராமரிக்கப்பட வேண்டும் என்று பல சட்டங்களும் ஒப்பந்தங்களும், நியதிகளும் இருக்கின்றன. அதில் விரிசலோ, முரண்பாடோ வந்தால் அதைத் தீர்ப்பதற்கு தொழில் தகராறுச் சட்டம் என்று தனியே இருக்கிறது. அதை விசாரிப்பதற்கு தீர்ப்பாயங்களும், நீதிமன்றங்களும் இருக்கின்றன.

தொழிற்சங்கங்கள் அந்த சட்டங்களுக்கு உட்பட்டுத்தான் உரிமைகளை கேட்கிறோம். அந்த சட்டங்கள் அனுமதித்த ஜனநாயக வழியில்தான் போராடுகிறோம். ஜனநாயகம் அனுமதிக்கும் கருத்துரிமையையும், போராடும் உரிமையையும் தாங்கிக் கொள்ள முடியாமல் நிர்வாகங்கள்- இந்த ‘தாய்’ என்னும் கருத்தாக்கத்தை முன்வைக்கின்றன.

தாய் – குழந்தை உறவு குறித்து எந்த சட்டங்களும், நீதிகளும் கிடையாது. தாய் என்பது ஒரு புனிதமான உறவாக கற்பிக்கப்பட்டு இருக்கிறது. அதனை எதிர்த்து கேள்வி கேட்பதோ, மறுபேச்சு பேசுவதோ தவறு என்று காலம் காலமாக பழக்கப்பட்டு இருக்கிறது. எனவேதான், நிர்வாகமும், சேர்மனும் அந்த ‘தாய்’ என்னும் கருத்தாக்கத்தை எடுத்து நம்மீது ஒரே போடாக போட வருகிறார்கள். நமது வாயை அடைக்க துடிக்கிறார்கள்.

உண்மையில் தாயையும், தாய்மையையும் போற்றுகிற மதிக்கிற நிர்வாகமா இது?

பெண்களை மதிக்காத, அவர்களை துன்புறுத்துகிற மண்டல மேலாளர்களை விமர்சித்ததால்தானே இவ்வளவு பிரச்சினையும்! அதனால்தானே தோழர்கள் லஷ்மிநாராயணனும், ரகு கோபாலும் தமிழ்நாடு கிராம வங்கியில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள்.

தாய்மையடைந்திருக்கும் கப்பிணிப்பெண்களை பணிநியமனம் செய்ய மறுத்து நியதி பிறப்பித்த நிர்வாகம்தானே இது? மதுரை பாராளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் இதனைச் சுட்டிக்காட்டியவுடன் இந்தியன் வங்கி சரிசெய்து மறு நியதியை எழுத்துபூர்வமாக பிறப்பித்து விட்டது. இன்னும் தமிழ்நாடு கிராம வங்கியில் அந்த நியதி மாற்றப்படாமலேயே இருக்கிறது.

தாய்மையை மதிக்காத, பெண்களை மதிக்காத இந்த நிர்வாகம் , ஊழியர்கள் போராடினாலோ பேசினாலோ மட்டும் ‘தாயை’ தூக்கிக் கொண்டு வருவது எல்லாம் பித்தலாட்டமே.

இறுதியாக ஒன்று-

இந்த நாட்டில் வேலையே கிடைக்காமல் கோடிக்கணக்கானோர் இருக்கிறார்கள். தற்காலிக வேலையில் பல கோடி பேர் இருக்கிறர்கள். ஒரே வேலையில் நிரந்தரமாக இருக்க முடியாமல் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் சில கோடி பேர். அவர்கள் எல்லாம் இந்த ‘தாய்’ கருத்தாக்கத்தில் எப்படி பொருந்துவார்கள்?

-Mathavaraj

;