election2021

img

வங்கம் விரும்புவது காம் காஜ்... ராம் ராஜ் அல்ல.... மம்தா அரசையும் பாஜகவையும் வீதி வீதியாக அம்பலப்படுத்தும் சிபிஎம் வேட்பாளர் முகமது சலீம்....

கொல்கத்தா:
“வங்கம் விரும்புவது காம் காஜ் தானே தவிர, ராம் ராஜ் அல்ல (வங்கம் விரும்புவது வேலைவாய்ப்புதானே தவிர மதவெறியை அல்ல)” என்ற முழக்கத்துடன் தனது தொகுதியில் வாக்காளர்களை சந்திக்கும் சூறாவளிப் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் முகமது சலீம். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான முகமது சலீம், மேற்குவங்க இடது முன்னணி தலைமையிலான ஐக்கிய முன்னணி கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சாந்தி தலா தொகுதியில் போட்டியிடுகிறார்.

வங்கத்தில் பாஜக மற்றும் திரிணாமுல் கட்சிகளுக்கு எதிராக இடது முன்னணி - காங்கிரஸ் - இந்திய மதச்சார்பற்ற முன்னணி ஆகியவை இணைந்து “சஞ்யுக்தா மோர்ச்சா” - ஐக்கிய முன்னணியை உருவாக்கி, தேர்தல் களத்தில் தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளன. இந்த அணியின் சார்பில் போட்டியிடும் முக்கியத் தலைவர் முகமது சலீம் ஆவார். சாந்திதலா தொகுதியில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அவர், வங்கத்தில்இளைஞர்களின் முக்கியப் பிரச்சனை வேலைவாய்ப்புதானே தவிர, இங்கு பாஜகவினர் கூறுவது போல மதவெறியை பரப்புகிற ‘ராமராஜ்ஜியம்’ அல்ல; வங்கத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற முழக்கத்துடன் வாக்காளர்களை சந்திக்கும் இடது முன்னணியோடு இந்த முறை கைகோர்ப்பீர் என்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

ஒரு தொழிற்சாலைக்கு  அடிக்கல்கூட நாட்டவில்லை
“வங்கம் திரிணாமுல் ஆட்சியில் கடந்த பத்தாண்டு காலமாக மிகப்பெரும் துயரத்தின் பிடியில் சிக்கியுள்ளது. மிகப்பெரிய அளவிற்கு சரிவைச் சந்தித்துள்ளது. பிரதானமான தொழில்மையமாக விளங்குகிற ஹால்டியாவுடன் பின்தங்கியபகுதிகளை இணைப்பதற்கு இந்த பத்தாண்டு காலத்தில் ஒரே ஒரு புதிய பாலம்  கூட கட்டப்படவில்லை. மம்தா பானர்ஜிஆட்சிக்கு வரும் போது வங்கத்தை மிகப்பெரும் தொழில் மாநிலமாக மாற்றப்போவதாக கூறினார். ஆனால் அவரது ஆட்சியில் ஒரே ஒரு தொழிற்சாலைக்குக் கூட அடிக்கல் நாட்டப்படவில்லை. அனைத்தையும் அவர் கற்பனையில் மட்டுமே மக்களுக்கு காட்டியிருக்கிறார். இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் புதிதாக வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று மீண்டும் வாய்ப்பந்தல் போட்டு வருகிறார்” என்று முகமது சலீம் தனது பிரச்சாரத்தில், மம்தா ஆட்சியை அம்பலப் படுத்தி வருகிறார்.“அது மட்டுமல்ல, சிறுபான்மை மக்களின் வாக்குகளை முழுமையாக கைப் பற்றிவிட்டால் வெற்றிபெற்றுவிடலாம் என மனக்கணக்கு போட்டிருக்கிறார் மம்தா.

ஆனால் இந்த முறை அது நடக்காது. ஏனென்றால் சிறுபான்மை மக்களுக்கும் அவர் எதுவும் செய்யவில்லை. பத்தாயிரம் மதரசாக்களை உருவாக்குவேன் என்று இப்போது  வெற்று வாக்குறுதியை அளித்து வருகிறார். பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தது அவர்தான்; எத்தனை மதரசாக்களை உருவாக்கினார்? ஏற்கெனவே உள்ள மதரசாப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு என்ன செய்தார்?” என்றும் அவர் தனது பிரச்சாரத்தில் கேள்விக்கணை தொடுத்து வருகிறார்.

பாஜகவின் மோசடி வாக்குறுதி
முகமது சலீம் தனது பிரச்சாரக் கூட்டங்களில் பாரதிய ஜனதா கட்சியையும் அம்பலப்படுத்தி வருகிறார். “மோடி அரசு புதிய பாரதத்தை, வளமான பாரதத்தை உருவாக்கப்போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தது. ஆனால் அந்தப் புதிய பாரதத்தை நாடு தேடிக் கொண்டிருக்கிறது. இப்போது இவர்கள் புதிய வங்கத்தை, வளமான வங்கத்தை உருவாக்குவோம் என்று இங்கு வந்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். அருகில் உள்ள ஜார்க்கண்டைப் பாருங்கள், அங்கு பாஜக ஆட்சிக்கு வந்தபோது என்ன நடந்தது? வனங்களில் வாழும் பழங்குடி மக்களையெல்லாம் வெளியேற்றி, அவர்களது வாழ்வுரிமைகளைப் பறித்து, வன உரிமையையும் பறித்ததுதான் பாஜக அரசு செய்த சாதனை. 

அதுமட்டுமல்ல, மேற்குவங்கத்தில் பாஜக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச கல்வி அளிப்போம் என்று கூறியிருக்கிறது. இது புதிய வாக்குறுதி என்று நினைக்கிறீர்களா? 1999லேயே பிரதமராக இருந்த வாஜ்பாய் ஒட்டுமொத்த தேசத்திற்கும் இப்படி ஒரு வாக்குறுதியை அளித்தார். அதை நிறைவேற்றிவிட்டார்களா? 20 ஆண்டுகள் கழித்து இப்போது அதே வாக்குறுதியை வங்கத்திற்கு வந்து தந்து கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் பொய்யான, மக்களை ஏமாற்றி வாக்குகள் பெற்றுவிடலாம் என்ற கனவுடன் அளிக்கப்பட்டிருக்கிற தேர்தல் கால மோசடி வாக்குறுதியே” என்றும் முகமது சலீம் தனது பிரச்சாரத்தில் அம்பலப்படுத்தி வருகிறார்.சாந்திதலா தொகுதியில் ஏராளமான இளைய தோழர்கள் முகமது சலீமுக்காக பிரச்சாரக் களத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

;