election2021

img

சீர்மரபினரா? சீர்மரபு பழங்குடியினரா?

தென் மாவட்டத்திலிருக்கும் சீர்மரபு பழங்குடியினர் - டி.என்.டி. என அழைக்கப்பட்டார்கள். ஆனால் 1979ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அவர்களை டி.என்.சி. என்று மாற்றிவிட்டார்கள். அவ்வாறு மாற்றிய காரணத்தினால் மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் பல்வேறு சலுகைகள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இது சமீபகாலமாக அவர்களிடத்தில் இருக்கும் கோரிக்கை. அதற்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொள்வதைப் போல, அ.தி.மு.க. அரசு ஒரு கபட நாடகத்தை நடத்தியது.

அது என்னவென்றால், 26.08.2019 அன்று அ.தி.மு.க அரசு ஒரு அரசாணையை வெளியிட்டது. அதில், தமிழக அரசில் டி.என்.சி. என்று இருப்பவர்களை மத்திய அரசின் உரிமைகளைப் பெறும்போது மட்டும் டி.என்.டி. என்று மாற்றி அழைக்கப்படுவார்கள் என்று ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது பழனிசாமி தலைமையில் இருக்கும் அ.தி.மு.க. அரசு.

இது சீர்மரபு பழங்குடியினருக்கு இந்தப் பழனிசாமி அரசு செய்திருக்கும் பெரிய துரோகமாக அமைந்திருக்கிறது. அதனால் உறுதியோடு சொல்கிறேன், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் இந்த இரட்டைச் சான்றிதழ் முறையை நிச்சயமாக ஒழிப்போம். அதில் எந்த மாற்றமும் இல்லை. சீர்மரபு பழங்குடியினர் என்று அவர்கள் அழைக்கப்படும் வகையில் ஒரே அரசாணை வெளியிடப்படும் என்கிற வாக்குறுதியை இதன் மூலமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அதே போல அவர்களது கோரிக்கைகளைப் பரிசீலிக்க சீர்மரபினர் ஆணையமும் நிச்சயமாக அமைக்கப்படும். மேலும் சீர்மரபு பழங்குடியினர் சமூக, பொருளாதார கணக்கெடுப்பு எடுக்கும் உத்தரவை மத்திய அரசு கடந்த 18.08.2020 பிறப்பித்திருக்கிறது.
அதன்படி மாநில அரசு ஒரு தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். ஆனால் இந்த ஆட்சி நியமித்து இருக்கிறதா? இல்லை. அவ்வாறு நியமிக்கின்றபோது அதனுடைய செலவை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் என்று மத்திய அரசு சொல்லி இருக்கிறது. ஆனால் பழனிசாமியின் அரசு அப்படி ஒரு தொடர்பு அதிகாரியை இதுவரையில் நியமிக்காமல் துரோகம் செய்து கொண்டிருக்கிறது. அதனால் நான் உறுதியோடு சொல்கிறேன், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் உடனே ஒரு தொடர்பு அதிகாரியை நாங்கள் உறுதியாக நியமிப்போம். எனவே பழனிசாமியின் இந்த அலட்சியமான செயல்பாட்டிற்குக் காரணம், பன்னீர்செல்வத்தின் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சி. எனவே இவர்களது நாற்காலிச் சண்டைக்காக ஒரு சமூகத்தின் உண்மையான கோரிக்கையைப் புறக்கணிக்கலாமா?

அவ்வாறு புறக்கணிக்கின்ற காரணத்தால் மக்கள் உங்களை நிச்சயமாகப் புறக்கணிக்கப் போகிறார்கள். அதுதான் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

;