election2021

img

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்... துளிகள்...

எங்களோடு மோத முடியுமா?

“அவரிடம் இருக்கும் பணத்திற்கு அவரை எப்படி நீங்கள் தோற்கடிக்க முடியும்?”

“யார் பணக்காரர் என்பதற்கா தேர்தல் நடக்கிறது?”

“இல்லை, யார் மக்கள் சேவகர் என்பதற்குத்தான்!” 

“அப்ப அவரிடம்தான் இந்தக் கேள்வியை கேட்க வேண்டும், மக்கள் சேவகர்களான கம்யூனிஸ்ட்டுகளோடு நீங்கள் எப்படி போட்டியிடுகிறீர்கள் என்று!”

- கோவில்பட்டி  தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனோடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கே.சீனிவாசன் மோதமுடியுமா என்று கேள்வி எழுப்புவர்களுக்கு பதிலளித்து... மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் பதிவு.

                      ****************

சொல்லிவச்சா கிடக்கு!

தமிழ்நாட்டில் அமையவிருக்கும் நாம் தமிழர் ஆட்சியில் டென்மார்க் நாட்டைப் போன்ற ஊழல் இல்லாத வெளிப்படையான நிர்வாகம், தென்கொரியா நாட்டைப் போன்ற சரியான, சமமான, தரமான அனைவருக்குமான இலவச கல்வி என்று சொல்லியிருக்கிறார் சீமான். சுனா பானா... ம்..ம்.. கிரிப்பை மெயின்டெய்ன் பண்ணிட்டே இரு!

                      ****************

எடப்பாடி மைண்ட் வாய்ஸ்!

“தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க அதிமுக காலதாமதம் ஆக்கியது. ஜெயலலிதாவுக்கு இருந்த பக்குவம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. தேமுதிகவைத் தவிர்த்து பிற கட்சிகளுடன்தான் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியது” என்று கூறியிருக்கிறார் பிரேமலதா.கழற்றிவிட்டதே பக்குவமான செயல்தான் என்று எடப்பாடி பழனிசாமி மனதிற்குள் கூறிக்கொண்டிருக்கக்கூடும்.

                      ****************

அவர்களால் சிந்திக்க முடியாது

அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு எதிராக அநேகக் கட்சிகள் எதிர்ப்பைத் தெரிவித்துவிட்டன. ஆளும் அதிமுக, பாஜக மட்டும் அதானியின் திட்டங்களுக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிகிறது.  பாஜகவால் ஒருபோதும் தமிழக நலன்களுக்காக சிந்திக்க முடியாது என்பது மீண்டும் நிரூபிக்கப்படுகிறது என கண்டனம் தெரிவித்திருக்கிறார், “பூவுலகின் நண்பர்கள்” ஜி.சுந்தரராஜன்.

                      ****************

‘மீட்க’ முடியாது போலும்!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா மற்றும் டிடிவி தினகரன் வழக்கு தொடுத்திருந்தனர். இந்நிலையில் அந்த வழக்கிலிருந்து விலகிக் கொள்வதாக திங்களன்று தினகரன் அறிவித்துள்ளார். அதிமுகவை மீட்பது என்ற நோக்கத்திலிருந்துதான் இந்த வழக்கே தொடரப்பட்டது. அதிலிருந்து விலகிக்கொள்கிறார் என்றால் அதிமுகவை “மீட்க”முடியாது என்று முடிவு செய்துவிட்டார் போலும்.

                      ****************

இதுவரை என்ன செய்தீர்கள்?

பெட்ரோல், டீசல் விலையை குறைத்திட மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீட்டின்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். “மோடி, எடப்பாடி ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை ஏறக்குறைய 100 ரூபாய்க்கு வந்துவிட்டது. விலையைக் குறைப்பதற்கு இதுவரை எடுக்காத நடவடிக்கையை இனிமேலா எடுக்கப்போகிறீர்கள்” என்று எதிர்கேள்வி கேட்டிருக்கிறார் கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி.

                      ****************

ஆமா, பொய்  சொல்லமாட்டாங்க!

“தேர்தலுக்காக பொய் சொல்லமாட்டோம்” என்று கூறியிருக்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் நடிகை குஷ்பு. இதுவே மிகப்பெரிய பொய் என்று சமூக ஊடகத்தில் ஒருவர் பதிவிட, “அட நீங்க வேற... அவங்க சொன்னது, தேர்தலுக்காக தனியா பொய் சொல்லமாட்டோம், நாங்க சொல்றது எப்பவுமே பொய் மட்டும்தான்” என்று பதில் பதிவிட்டு கலாய்த்திருக்கிறார்.

                      ****************

காவல்துறையினர் எதிர்பார்ப்பு

திமுக தேர்தல் அறிக்கை சட்டமன்றத் தேர்தலின் “கதாநாயகன்”  என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த அறிக்கை  காவல்துறையினர் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், தங்களுக்கு எட்டு மணி நேர வேலை வழங்கினால் நன்றாக இருக்கும். வாரவிடுமுறையை உறுதிப்படுத்த வேண்டும். எங்கள் கோரிக்கையையும் தேர்தல் அறிக்கையில் இணைத்தால் காவல்துறையினரின்  குடும்பங்கள் மகிழ்ச்சி அடைவர் என்கின்றனர்.

;