election2021

img

வேலைவாய்ப்புகளில் தமிழகத்திற்கே முன்னுரிமை... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு....

சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை திங்களன்று  (மார்ச் 22) மூத்த தலைவர் ஆர்.நல்லகண்னு வெளியிட்டார். அதன் முதல் பிரதியை மாநில துணைச் செயலாளர் கே.சுப்பராயன் பெற்றுக் கொண்டார்.

30 தலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ள  இந்த தேர்தல் அறிக்கையில், மத்திய அரசு உருவாக்கியுள்ள 4 தொழிலாளர் சட்டங்களால், தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் விதிகளை உருவாக்க வலியுறுத்துவோம்.மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வேளாண் சட்டங்களால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க அனைத்து விளை பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க போராடுவோம்.சாதி ஆணவப் படுகொலையை தடுக்க சிறப்புச்சட்டம் கொண்டு வருவதோடு, சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட  தம்பதியினரின் குழந்தைகளுக்கு கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.அனைத்துத் துறை வேலை வாய்ப்பிலும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு 80 விழுக்காடுமுன்னுரிமை வழங்கவேண்டும், ஓய்வுபெறும் வயதை 58 ஆககுறைக்க வேண்டும்,  வேலையில்லா கால நிவாரணமாக பட்டதாரிகளுக்கு 7ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். நிலத்தடி நீர் எடுப்பு விதிகள் கடுமையாக்கப்படும், மூடப்பட்ட சிறு, குறு தொழில்கள் மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இதன்பின்னர் செய்தியாளர்களி டம் கே.சுப்பராயன் கூறியதாவது:நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக அணியை எதிர்த்து எதிர்க்கட்சிகள் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றன. எனவே, அதிமுக -பாஜக அணி சட்டப்பேரவை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற முனைப்பு காட்டி வருகிறது. எனவே  பாஜக தலைமையிலான மத்திய அரசு தீய செல்வாக்கை பயன்படுத்துகிறது.

அதிமுக-பாஜகவிற்கு எதிரான வாக்குகள் திமுக கூட்டணிக்கு சென்று விடாமல் தடுக்க பலமுனை போட்டியை பாஜக உருவாக்கி யுள்ளது. நாம் தமிழர் கட்சி மற்றும் ஜாதிய அமைப்புகளை தூண்டிவிட்டு போட்டியிட வைத்துள்ளது. அரசியலில் மய்யம் என்று ஒன்றில்லை. பாஜக வளரக் கூடாது, அதிமுகஆட்சிக்கு வரக் கூடாது என்பதற்காக திமுக தலைமையில் உருவானஅணி, வெற்றியின் முகப்பில் நிற்கிறது. வெற்றிக்கான வாக்குகளை சிதறடிக்கும் வகையில் பாஜக ஏந்தியுள்ள ஆயுதம் தான் தமிழ் தேசியம். தமிழ் தேசியம் என்பது வேறு சீமான் கோஷம் என்பது வேறு. தமிழ்நாட்டில் தமிழ் தேசியத்தை முன்னிறுத்தும் கட்சிகள் அனைத்தும் திமுகவைதான் ஆதரிக் கின்றன. பாஜக தமிழ் தேசியத்திற்கு ஆதரவான கட்சி அல்ல. இந்த சதிகளையெல்லாம் முறியடித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிபெறும்.

மத்திய அரசோடு இணக்க மாக இருப்பதாக தமிழக அரசு கூறுகிறது. கர்நாடகாவில் பாஜகதான் ஆட்சி செய்கிறது. இருப்பினும் தமிழகத்தின் நீர் உரிமையை பெற சக்தியற்ற அதிமுக உள்ளது.  தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தி உள்ளோம். தொழில் வளர்ச்சி ஏற்பட வேண்டும்,கிராமப்புற மக்கள், நகர்ப்புறம் நோக்கி வராமல் இருக்க கிராமப்புறசிறு, குறு தொழிலுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். அதேபோல் விவசாய நலன் சார்ந்ததிட்டங்களுக்கும் அறிக்கையில் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.தமிழ்நாட்டின் தனித்துவத்தை யும், மாநில நலன்களையும் பாதுகாக்க, பாஜகவையும் அதனுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் சேர்ந்துள்ள இதர கட்சிகளையும்  தோற்கடிப்பதே இன்றைய அரசியலின் அறமாகும்: லட்சியமாகும். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி முழு வெற்றிபெற ஒவ்வொரு தொகுதி யிலும் முனைந்து களமாடுவோம்.   இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்வின் போது மாநில துணைச் செயலாளர் மூ.வீரபாண்டியன், செயற்குழு உறுப்பினர் ந.பெரியசாமி, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ஜி.ரவீந்திரநாத் ஆகியோர் உடனிருந்தனர்.

;