election2021

img

திமுக கூட்டணிக்கு ஆதரவு... பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அறிவிப்பு...

சென்னை:
மாநிலத்திற்கென்று தனிக் கல்விக் கொள்கையை உருவாக்குவோம் என்று திமுக உறுதிமொழி  அளித்துள்ளது. அதனடிப்படையில் சட்டமன்றத் தேர்தலில்  மதச்சார்பற்ற  முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக பொதுப்  பள்ளிக்கான மாநில மேடையின்  பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்தார்.

இது தொடர்பாக திங்களன்று (மார்ச் 29) சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி முறையை நாடு முழுவதும் கொண்டு வரும் வகையில் புதிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது. புதிய கல்விக் கொள்கை மாநில அரசின் உரிமைகளை பறிக்கிறது. அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக புதிய கல்விக் கொள்கை உள்ளது. அதனை தமிழக அரசு எதிர்க்க மறுக்கிறது.ஒன்றிய அரசின் புதியக் கல்விக்கொள்கை, தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படும் சமூக நீதி மற்றும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு கூறுகளை அழித்தொழிப்பதாக உள்ளது. எனவே அதனை திமுக நிராகரிக்கிறது. கல்வியாளர்களை கொண்ட வல்லுநர் குழு அமைத்து அதன் பரிந்துரை அடிப்படையில் தமிழகத்திற்கென்று தனிக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளிடமும் கல்வி விவகாரத்தில் கருத்தொற்றுமை உள்ளது. எனவே, தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்கிறோம்.நீட் தேர்வுக்கு மாற்றாக கமலஹாசன் சீட் என்று கூறுவதெல்லாம் ஏமாற்று வேலை. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை தவிர்த்து வேறு யாருக்கு வாக்களித்தாலும் அது சமூக நீதியுடன் கூடிய தமிழக கல்வி கட்டமைப்பை சீர்குலைப்பதற்கு சமம்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த செய்தியாளர் சந்திப்பின்போது மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் தலைவர்  மருத்துவர்  ரெக்ஸ் சற்குணம், பொதுப் பள்ளிக்கான  மாநில மேடையின்  நிர்வாகி முருகையன் பக்கிரிசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

;