election2021

img

காற்றோடு காற்றாய் கரைந்த வாக்குறுதிகள்....

2016 ஆம் ஆண்டில் தேர்தல் அறிக்கையாக வெளியிட்ட அறிவிப்புகளை முழுமையாக நிறைவேற்றியிருக்கிறோம்” என்று அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவின்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்துள்ளார்.

இது உண்மையா...? 2016 தேர்தலின் போது அதிமுக அளித்த முக்கிய வாக்குறுதிகள் என்ன? என்பதை முதலில்தெரிந்து கொள்வோம்!

$ அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையின்றி கைபேசி (செல்போன்) வழங்கப்படும்

$ அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் பெற்று குறைந்த கட்டணத்தில்(70 ரூபாய்க்கு) தரமான சேவை வழங்கப்படும்.

$ தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் கட்டணமில்லா  வை-பை சேவை கொண்டு வரப்படும்.

$ வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு.

$ மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும்.

$  திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் மோனோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும்.

$ 10 லட்சம் வீடுகள் இலவசமாக கட்டிக் கொடுக்கப்படும்.

$ ஆவின் பால் லிட்டர் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

$ விவசாய நிலங்கள் வழியே எரிவாயு குழாய்கள் எடுத்துச் செல்வது அனுமதிக்கப்பட மாட்டாது. 

$ இயற்கை விவசாயம் ஊக்கப்படுத்தப்படும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.

$ மீத்தேன் எரிவாயு திட்டம், ஷேல் எரிவாயு திட்டம் போன்ற விவசாயிகளை பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டமும் அனுமதிக்கப்பட மாட்டாது.

$ நிதி நிலைமையை சீர்செய்து மாநிலத்தை முதலிடத்திற்கு கொண்டு வருவோம்.

இந்த அறிவிப்புகளை நிறைவேற்றினார்களா? அப்படி என்றால் பின் என்னதான் செய்தார்கள்? என்றுகேட்கத் தோன்றும் அல்லவா? '

இதோ பாருங்கள்;

கை பேசியிலும் பொய்பேசி...
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகும் அவரது ஆட்சியை நடத்தி வருவதாக மார்தட்டிக்கொள்ளும் எடப்பாடி, எத்தனைகுடும்ப அட்டைதாரர்களுக்கு கைபேசியை இலவசமாக கொடுத்தார்? என்பதை சொல்ல முடியுமா?இந்த லட்சணத்தில் பெண்களின் பணிச் சுமையைக் குறைக்க “வாஷிங் மெஷின்” வழங்குவோம் என்று இலவச அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

புருடாகி போன சேவை..
கட்டணமில்லா இலவச வை-பை, டிஜிட்டல் உரிமம்,குறைந்த கட்டணத்தில் தரமான சேவை என்ற ஜெயலலிதாவின் உறுதி மொழியை இன்று வரைக்கும் நிறைவேற்றாமல் ‘புருடா’வாகிப்போன நிலையில், கேபிள் டிவி இணைப்பு இலவசமாக வழங்கப்படும் என்பதை தண்ணீரில்தான் எழுதி வைக்க வேண்டும்.

ஒன்னுமில்ல...
வீட்டுக்கு ஒருவருக்கு வேலை, 10 லட்சம் வீடு, மோனோ ரயில் திட்டம் என்னவானது என்று அவர்களுக்கே வெளிச்சம்.உண்மையோ இப்படி இருக்க, ஆவின் பால் விலை குறைக்கப்படும், ரேசன் பொருட்கள் வீடு தேடி வந்து கொடுக்கப்படும், சோலார் அடுப்பு என்றெல்லாம் சொல்லியிருப்பது சின்ன கலைவாணர் விவேக் கூறிய “ஏற்கனவே உங்களுக்கு என்னத்த செஞ்சேன்... இப்ப செய்யப் போறேன்” என்ற நகைச்சுவை தான் ஞாபகத்திற்கு வருகிறது.

உள்ளதும் போச்சு...
இப்போது, கிராமப்புற 100 நாள் வேலை திட்டம் 150 ஆக உயர்த்தப்படும் எனக்கூறும் எடப்பாடி கடந்த 5 ஆண்டுகளில் 50 நாட்களுக்கும் குறைவாக கிடைத்ததுதான் மிச்சம். 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த உடன் மது விலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா வாக்குறுதி கொடுத்தார். இதையாவது கடந்த நான்காண்டு காலத்தில் நிறைவேற்றினார்களா ?என்றால் அதுவும் கிடையாது... நெடுஞ்சாலை கடைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டதை வேறு இடங்களில் வேறு வகைகளில் திறந்து, விற்பனையை அதிகப்படுத்தி அரசு கஜானாவை நிரப்பியது தான் நடந்தது.

திமுக ஆட்சி 2011ஆம் ஆண்டு சமர்ப்பித்த இடைக்காலபட்ஜெட்டில் உபரி வருவாய் ரூபாய் 430 கோடியாகும். அன்றைய காலகட்டத்தில் தமிழக அரசு வாங்கிய கடன் ரூ.1.18 லட்சம் கோடி தான்.பின்பு, ஆட்சிக்கு வந்த அதிமுக கடந்த பத்தாண்டு காலத்தில் வாங்கிய கடன் 5.7 லட்சம் கோடி ரூபாயாகும். இதில், வேதனையான வேடிக்கை என்னவென்றால் ரூ.35000 கோடிக்கு மேல் வட்டி மட்டுமே கட்ட வேண்டும். 

ரூ.57 ஆயிரம் கடனாளிகள்
இத்தகைய அபாய கட்டத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சமர்ப்பித்த இடைக்கால பட்ஜெட்டில் 41,417 கோடி ரூபாய் பற்றாக்குறையாகும். இதன் மூலம் ஒவ்வொருகுடிமகனையும் பிறக்கும் குழந்தையையும் சுமார் 57,500 ரூபாய் கடனாளிகளாக மாற்றியதே ‘‘தொடரட்டும் வெற்றி நடை என்றென்றும்’’ என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அதிமுக அரசின் லட்சணமாகும்.கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் காற்றோடு காற்றாய் பறந்து போனதை இந்தத் தேர்தல் அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

;