election2021

img

அதிமுக - பாஜக அணியை வீழ்த்துவது அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் போராட்டம்..... திண்டுக்கல் பிரச்சாரத்தில் டி.கே.ரங்கராஜன் பேச்சு.....

திண்டுக்கல்:
அதிமுக - பாஜக அணியைவீழ்த்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் மாபெரும் போராட்டமாகும் என்றுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி-கே.ரங்கராஜன் கூறினார்.

திண்டுக்கல்லில் சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டிக்கு வாக்குச் சேகரிக்க வேணு பிரியாணி ஹோட்டல்அருகிலும், பூச்சிநாயக்கன்பட்டியிலும்  நடைபெற்ற தெருமுனைபிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நமது நாட்டின் அரசியல் சாசனத்தின் அப்படி என்ன சிறப்பம்சம் இருக்கிறது என்று நாம் கவனிக்க வேண்டும். இந்த நாட்டில் இந்துக்கள் இருக்கிறார்கள், கிறிஸ்துவர்கள் இருக்கிறார்கள், இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள், ஜைனர்கள் இருக்கிறார்கள். பார்சிகள் இருக்கிறார்கள். மக்கள்பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இந்திய அரசியல் சாசனத்திற்கு மதம் கிடையாது. அதனால் தான் நமது பிரதமரோ,ஜனாதிபதியோ சங்கராச்சாரியாரைப் போய் பார்த்தால் அது தவறுஎன்று சொல்கிறோம். ஜனாதிபதியும், பிரதமரும்  இந்த நாட்டின் அரசியல் சாசனத்தின் பாதுகாவலர்கள். நீங்கள் ஜனாதிபதியாக இல்லைஎன்றால் எங்கு வேண்டுமானாலும் செல்வதை யாரும் கேட்கமாட்டார்கள். எனவே நமது நாட்டின் மக்களுக்கு மதம் உண்டு, பக்தி உண்டு. அரசியல் சாசனத்திற்கு மதம் கிடையாது. அது அனைத்து மக்களுக்குமானது. இந்த அரசியல் சாசனத்தையொட்டித்தான் உச்சநீதிமன்றத்தில் ஆயிரக்கணக்கான தீர்ப்புகளும் வந்துள்ளன. இந்த சாசனத்திற்குத் தான் இப்போது மிகப்பெரிய ஆபத்து பாஜக வடிவில் வருகிறது. இந்த பாஜகவைத்தான் அதிமுக தமிழகத்திற்குள் சுமந்து வருகிறது.இந்திய நாடு, ஆர்எஸ்எஸ்-பாஜக திட்டப்படி இந்து நாடு என்று அமைக்க்கப்பட்டால், 4 இந்துக்கள் தான் இருப்பார்கள். பிராமணர்கள், வைசியர்கள், சத்திரியர்கள், சூத்திரர்கள்தான் இருப்பார்கள். தலித், பழங்குடிகள் இந்த வர்ணாசிரமத்திற்குள் வருவதில்லை. இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், கம்யூனிஸ்ட்டுகளை இவர்கள் ஏற்பது இல்லை. இதனைஎதிர்த்து போராட வேண்டும் என்றால்நீங்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறுகிறோம். திமுக அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவு அரசியல் ரீதியானது. எங்களது முடிவை அமலாக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் தீவிரமாக வேலை செய்கிறோம்.

பாஜகவை புரிந்தவர் ஜெயலலிதா 
 இது வாழ்வா சாவா என்கிற தேர்தல். திமுக அணி வெற்றி பெறாவிட்டால் நமது நாட்டுக்கு, ஜனநாயகத்திற்கு ஆபத்து. இந்த ஆபத்தை அன்றைக்கு ஜெயலலிதா புரிந்துகொண்டார். எடப்பாடி பழனிசாமி புரிந்துகொள்ளவில்லை. இந்த ஆபத்தை ஏன் அவர் புரிந்து கொள்ளவில்லை என்றால் அவருக்கு சொந்தகால் இல்லை. நாற்காலிக்கு உள்ளநான்கு காலில் ஒரு கால் இல்லை என்றால் சாய்ந்துவிடும் என்பது போல எடப்பாடியின் இரண்டு கால்களும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். கால்கள்ஆகும். இன்றைக்கு அதிமுக என்ற பெரிய கட்சியோடு பாஜக கூட்டணி வைத்துள்ளது. 20 சீட்டுக்களில் போட்டியிடுகிறது. ஆனால் யார் முதலமைச்சர் என்பதை நான் தான் முடிவு செய்வேன் என்று பாஜக சொல்கிறது. இது என்ன நியாயம்? இந்த ஆபத்துக்களை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நினைக்கிறது. 

ஏன் திமுக அணிக்கு வாக்களிக்க வேண்டும்? 
சனிக்கிழமை தேதிய  தினமலர் நாளிதழிலும், சில நாளிதழ்களிலும்  ஏன் திமுகவிற்கு வாக்களிக்கக் கூடாது என்று 2 பக்கத்திற்கு செய்தி வந்துள்ளது. ஏன் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம் என்றால், 1967 ஆம் ஆண்டுக்கு முன்பு தமிழ்நாட்டில் போக்குவரத்துத் துறை தனியார் வசம் இருந்தது; கும்பகோணத்தில் ராமன் அண்ட் ராமன் என்ற பேருந்து, மதுரையில் டி.வி.எஸ்நிர்வாகம், கோயம்புத்தூர் பகுதியில்ஆனைமலை டிரான்ஸ்போர்ட், இந்ததனியார் பேருந்து நிர்வாகங்கள் லாபம் தரும் வழித்தடங்களில் மட்டும்பேருந்துகளை இயக்கி வந்தார்கள். கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தான் தனியார் போக்குவரத்து அரசுபோக்குவரத்துத் துறையாக மாற்றப்பட்டது. அரசு போக்குவரத்துத் துறை கிராமத்திற்கும் நகரத்திற்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாகத்தான் கிராமப்புறத்தில் உள்ள குழந்தைகள் நகரத்திற்கு வந்து படிக்கத் துவங்கினர். கிராமங்களில் உள்ள விவசாயிகள் நகரத்திற்குச் சென்று தங்களது விளை பொருட்களை வியாபாரம் செய்ய முடிந்தது. தமிழ்நாட்டில் கல்வித்தரம் 90 சதவீதமாக உயர்ந்தது. எனவே தான் நாங்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறுகிறோம்.

தேசம் காக்க வாக்களியுங்கள் 
பாஜக ஆட்சியில் மாநில அரசுஎன்பது ஒரு ஊராட்சியைப் போலத்தான் இருக்கும். முதலமைச்சருக்கு மரியாதை இருக்காது. அரசாங்கத்திற்கான அதிகாரம் இருக்காது.அப்படிப்பட்ட பாஜகவை அதிமுக அழைத்து வருகிறது. எனவே இந்தஅதிமுக அரசு ஒழிக்கப்பட வேண்டியது அவசியம். அதிமுக வாக்காளர்களும் தயவுசெய்து சற்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த ஆபத்தை கடந்து செல்வதற்கு, மதச்சார்ப்பற்ற இந்தியாவை பாதுகாப்பதற்கு நாம் சிபிஎம் மற்றும் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பிரச்சாரக் கூட்டங்களில் சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.கண்ணன், வி.மாரியப்பன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர் வ.கல்யாணசுந்தரம், நகர்க்குழு உறுப்பினர் அரபுமுகமது,  திமுக நகரச் செயலாளர் ராஜப்பா, திமுக அவைத்தலைவர் பசீர்அகமது, அக்பர், காங்கிரஸ் சார்பாக மணிகண்டன், துரை சம்பத் (பெரியார் திராவிடர் கழகம்) இந்தியயூனியன்
முஸ்லீம் லீக், காங்கிரஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். (நநி)

;