election2021

img

தீப்பெட்டி தொழிலை முடக்கிய ஜிஎஸ்டி; மத்திய அரசுக்கு துணைபோன அதிமுக....

கோவில்பட்டி
மத்திய அரசு விதித்த ஜிஎஸ்டி வரி இங்கிருந்த தீப்பெட்டி தொழிலை அழித்தது. கடம்பூர் ராஜுவும் அதிமுக அரசும் மத்திய அரசுக்கு  ஆதரவாக இருந்துகொண்டு தமிழக மக்களை பெரும் துயரத்திற்கு ஆளாக்கி வருகிறார்கள். அப்படிப்பட்ட அதிமுக- பாஜக
கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க ஓட்டு கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கு நோ சொல்லுங்கள் என்றார் பிருந்தா காரத்.சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், சனியன்று கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் கே.சீனிவாசனை ஆதரித்து கோவில்பட்டி அருகில் உள்ள புதுக்கிராமத்திலும், கயத்தாறிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறுஇடங்களில் இன்று மழை பெய்து குளுகுளுவென உள்ளது. மழை பெய்தால் மரங்கள் எல்லாம் புத்துணர்ச்சி பெறும், மழை வெள்ளத்தில் கட்டிடங்கள், மரங்களில் படிந்த தூசிகளும் குப்பைகளும்  அடித்துச் செல்லப்பட்டு ஒரு தூய்மையான சூழல் ஏற்படும். ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் என்கிற மழை பெய்யவிருக்கிறது. அது தமிழ்நாடு அரசியல் மாற்றத்துக்கான மழை. கடந்த பத்தாண்டு காலமாக அதிமுக ஆட்சியில் படிந்துள்ள அழுக்கும் குப்பைகளும் அதில் அடித்துச் செல்லப்பட்டு தமிழகத்தில் ஒரு புதிய ஆட்சி மலரும். இங்கே சீனிவாசன் வெற்றி பெறுவார்.

தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையால் சூற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரத்துக்காக போராடினார்கள். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த அமைச்சர் அப்போது எங்கே இருந்தார்.அந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறினாரா? பக்கத்தில் உள்ள சாத்தான் குளத்தில் தந்தை மகன் கொடூரமாக காவல்நிலையத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்கள். நாங்கள் தில்லியில் இருந்தாலும் தகவல் தெரிந்து துடித்துப்போனோம். அப்போது ஓடோடி வந்தவர் இந்த பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி. இங்கே வெற்றிபெற்று அமைச்சரானவர் சென்று பார்க்கவில்லை. அப்படிப்பட்டவர்களை மீண்டும் வெற்றிபெற அனுமதிக்கலாமா? ஓட்டு கேட்டு வரும் இவர்களுக்கு நோ சொல்லுங்கள்.

அதேபோல் ஜென்டில்மேன் ஒருவர் இத்தொகுதியில் நிற்கிறார். அவரிடம் நீங்கள் யாராவது ஏன் அவர் ஆர்.கே.நகர் தொகுதியிலிருந்து இங்கே வந்திருக் கிறீர்கள் என்று கேட்டீர்களா? அங்குள்ள மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களா என்று  கேட்டீர்களா? அதுகூட பரவாயில்லை. சட்டமன்றத்துக்காவது போனீர்களா என்று கேட்டீர்களா? கோவில்பட்டி தொகுதியில் பிரச்சனைகள் ஏராளம். அவற்றை தீர்ப்பதற்கு தினகரன் சென்னையிலிருந்து ஓடிஓடி வருவாரா?

சீனிவாசன்  24 மணி நேரமும் வாரத்தில் 7 நாட்களும் உங்களோடு இருப்பார். தினகரன் அதுபோல் ஓடி வருவாரா? இதுகுறித்து பத்திரிகையாளர்கள் அவரிடம் கேட்டபோது நண்பர் பார்த்துக் கொள்வார் என தெரி வித்துள்ளார். இதுபோல் கோவில்பட்டி மக்களை அவமதிக்கும் ஒருவர் வேண்டுமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். எங்களால் ஒரு உறுதியை உங்களுக்கு தர முடியும். இரவு பகல் என்று பாராமல் சீனிவாசன் உங்களோடு இருப்பார். நீங்கள் முன்வைக்கும் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் எதிரொலித்து தீர்வு காண உதவுவார் என்று கூறினார்.பிருந்தா காரத்தின் ஆங்கில உரையை சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தமிழாக்கம் செய்தார். கோவில்பட்டியில் வேட்பாளர் சீனிவாசன் உடனிருந்தார். ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

கோவில்பட்டி வீதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், கட்சியின் வேட்பாளர் கே.சீனிவாசனின் கைகளை உயர்த்தி வாழ்த்து தெரிவித்து வாக்கு கேட்டு உரையாற்றினார்.

;