election2021

img

திமுக அணி மாபெரும் வெற்றி பெறும்.... சிபிஐ பொதுச்செயலாளர் து.ராஜா பேட்டி....

சென்னை:
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை என்பதே மக்களின் மனநிலையாக உள்ளது.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்அகில இந்திய பொதுச் செயலாளர் து.ராஜாகூறினார்.சென்னையில் ஞாயிறன்று (ஏப்.4)நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் து.ராஜா கூறியதாவது:திமுக அணிக்கு ஆதரவாக மக்களிடத்தில் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிமுக-பாஜக அணி படுதோல்வி அடையும். திமுக அணியின் வெற்றி உறுதியாகிவிட்டதால், பாஜக தலைவர்கள் வந்து பிரச்சாரம் செய்கின்றனர். பிரதமராக இருக்கக்கூடிய மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தரம் தாழ்ந்து பேசுகின்றனர். அவதூறு, அபவாதங்களை முன்வைக்கின்றனர்.அரசியலமைப்பு வகுத்துள்ள மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு, மக்கள் நல அரசு, கூட்டாட்சி ஆகிய மூன்று அம்சங்களையும் பாஜக தகர்த்து வருகிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஆர்எஸ்எஸ் அரசியல் களத்தில் மூர்க்கமாக செயல்படுகிறது. மதம்,மொழி, சாதியின் பெயரால் தமிழக மக்களைபிளவுபடுத்துகிறது. தமிழகத்தில் அது நடைபெறாததால் ஆத்திரமடைந்து, நிதானம் இழந்து பாஜக தலைவர்கள் பேசுகின்றனர்.

மோடி ஆட்சியில் உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), ரூபாய் மதிப்பு வீழ்ந்துள்ளது. பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளது. வேலையின்மை அதிகரித்துள்ளது. ஏழைகள் மேலும் ஏழைகளாக மாறி பட்டினிச்சாவுகள் அதிகரித்துள்ளது. சில கார்ப்பரேட்டுகள் மட்டும் வளர்ந்து உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். கார்ப்பரேட்டுகளின் அரசாக, பாஜக அரசு உள்ளது.கூட்டாட்சி நெறிமுறைகளை தகர்த்து, வேளாண் சட்டங்கள், புதிய கல்விக் கொள்கை போன்றவற்றை கொண்டு வந்து மாநிலங்கள் மீது திணிக்கிறது. பாஜக கொண்டு வந்த அத்தனை சட்டங்களையும் அதிமுக ஆதரிக்கிறது. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து ஒன்றையும் சாதிக்கவில்லை. அதிமுக-பாஜக அம்பலப்பட்டு நிற்கிறது. எனவே, மக்கள் ஆட்சி மாற்றத்தைவிரும்புகின்றனர். தமிழக தேர்தல் முடிவு மோடி ஆட்சியின் வீழ்ச்சிக்கு தொடக்கமாக இருக்கும்.

வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற தன்னிச்சையான அமைப்புகளை மத்திய அரசு, அரசியல் ரீதியாக பழிவாங்க பயன்படுத்துகிறது. அதன்வெளிப்பாடாகவே எதிர்க்கட்சி வேட்பாளர்கள், தலைவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை செய்கின்றனர். கண்துடைப்பிற்காக அதிமுக வேட்பாளர்களின் சில இடங்களில் சோதனை செய்கின்றனர். தேர்தல் ஆணையம் சுயச்சார்போடு, தன்னிச்சையாக, நேர்மையாக செயல்பட வேண்டும்.தமிழகத்தில் திமுக அணி, புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் அணி, கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெறும். அராஜகத்தை அரங்கேற்றி வரும் பாஜக மேற்குவங்கத்தில் வெல்ல முடியாது. அசாமில் கடும் போட்டி நிலவுகிறது. மக்கள்ஆட்சி மாற்றம் நிகழும் என மக்கள் நம்புகின்றனர். மாநில உரிமைகளை பறித்த பாஜக, பறிகொடுத்த அதிமுக அணியை தமிழக மக்கள் வீழ்த்துவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

;