இந்த கூரை வீட்டு வாசலில் உக்காந்திருக்கும் வயதான பெண்மணி சொல்கிறார்: எப்பா தம்பி, அண்ணனை மின்னேரத்திலேயே வரசொல்லுங்கப்பா... எப்ப வருது போகுதுனே தெரியல...
அம்மா, அண்ணன் எலெக்சனில் நிற்கிறார்.பிரசரண்டுக்கு ஓட்டு போடுறது தான் முடிஞ்சிட்டே இப்ப என்ன?
அம்மா , இது பிரசிடன்ட் கவுன்சிலர் தேர்தல் இல்ல; இது எம்.எல்.ஏ தேர்தல் ஜெயிச்சி கோட்டைக்கு போக போராரு...
என்னப்பா இப்டி சொல்றிய, கோட்டூரு கச்சி ஆப்பிசுக்கு போறதே வீட்டுக்கு நேரத்துக்கு வராது, ஒழுங்கா சாப்பிடாது.. இப்ப திருவாரூர் கச்சி ஆபிசுக்கு போயிட்டா வீட்டுக்கு வருமா? நேரத்துக்கு சாப்பிடுமா? விடியகாலம்பர திருத்துறமுண்டிக்கு புள்ளய டிமிசனுக்கு கொண்ட உடனும்...
அம்மா..! எம்எல்ஏ ஆகி கோட்டைக்கு போறது என்றால் திருவாரூர் கட்சி ஆபிசுக்கு போறது இல்ல.. காமராஜர், அண்ணா, கலைஞர் எம்ஜியார் எல்லாம் சட்டம் போட்டு ஆட்சி ஆண்ட கோட்டை...
என்னமோப்பா... தலவரு தலவருன்னு மாரிமுத்த பாக்க காரு போட்டுக்கிட்டு பாக்க வராங்க... அண்ணனை பாத்தியல்ன்னா வரச்சொல்லுங்க..
- தனது மகன் எம்எல்ஏ ஆகி கோட்டை போகப் போற விஷயம் கொஞ்சம் கூட தெரியாமல், அந்தத் தாய் வேறு யாருமல்ல,
திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தோழர் மாரிமுத்துவின் தாயார்தான்.