எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் டிடிவி தினகரனுக்கு பெரும்தலைவலியாக ஜோல்னா பை அணிந்திருக்கும் அந்த வேட்பாளர் இருப்பார் என்கிறது கள நிலவரம். தனக்கென்று தனி செல்வாக்கு உள்ள டெல்டா பகுதிகளில் போட்டியிடாமல், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதாக டிடிவி அறிவித்த போது, அமமுக தொண்டர்களே அதிர்ச்சியடைந்தனர். இங்கு டிடிவி போட்டியிடுவதற்கு முக்கிய காரணம் மட்டுமல்ல.. ஒரே காரணமும் அமமுக தென் மண்டல அமைப்புச் செயலாளர் எஸ்.பி.மாணிக்க ராஜா தான். எனினும், இங்கு பக்காவாக வியூகம் அமைத்தே டிடிவி களமிறங்கியுள்ளார்.
கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலைப் பொறுத்தவரை, அதிமுகவின் கடம்பூர் ராஜு 64,514 வாக்குகள் பெற்ற நிலையில், திமுக வேட்பாளர் சுப்பிரமணியன் 64,086 வாக்குகள் பெற்று, வெறும் 429 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மக்கள் நலக் கூட்டணியில் மதிமுக 28,512 வாக்குகள் பெற்றது. இம்முறை மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக தினகரனுடன் கூட்டணி வைத்துள்ளது.
குறிப்பிட்ட ஒரு சமூக மக்களின் வாக்குகள் தான் டிடிவியின் டார்கெட். எஸ்.பி.மாணிக்க ராஜாவின் உள்ளூர் செல்வாக்கு பெரியளவில் கைக்கொடுக்கும். தவிர, தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வந்ததன் மூலம் கூடுதல் வாக்குகளைப் பெற முடியும் என கணக்கு போட்டு வைத்திருக்கிறார் டிடிவி. ஆனால், இப்போது கள நிலவரம் டிடிவிக்கு கடும் சவால் அளிக்கக் கூடிய நிலையில் உருவாகியுள்ளதாம். அதிமுக வேட்பாளராக கடம்பூர் ராஜு களத்தில் இருந்தாலும், டிடிவிக்கு பெரும் தலைவலியாக அமைந்திருப்பது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.சீனிவாசன் தான். மக்களின் பிரதிநிதியாக இல்லாவிட்டாலும், பல வருடங்களாக இத்தொகுதி மக்களின் தேவைகளுக்காக பணியாற்றியவர் சீனிவாசன் என்கின்றனர் உள்ளூர்வாசிகள்.
அதுமட்டுமின்றி, அங்கு பல இடங்களில் சாலை விளக்குகள் கூட இல்லை என்கின்றனர். அதிமுக தொடர்ந்து இங்கு வெற்றி பெற்றிருந்தாலும், சொல்லிக் கொள்ளும்படி எந்த திட்டங்களும், அடிப்படை வசதிகளும் நிறைவேற்றித் தரப்படவில்லை என்கின்றனர். ஜெயலலிதா இறந்த பிறகு, இனியாவது இங்கு மாற்றம் வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பெரும்பாலான மக்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆகையால், திமுக கூட்டணி என்பதை விட, தனிப்பட்ட விதத்தில் உள்ளூர் மக்களுக்காக இத்தனை ஆண்டுகள் வேலை செய்த சீனிவாசனுக்கு வாக்களிக்க பலர் ஆர்வமுடன் இருப்பதாக கூறுகின்றனர். சமூக வாக்குகள் செல்லாது மேலும், இம்முறை இங்கு சாதி வாக்குகளோ, நட்சத்திர அந்தஸ்தோ எதுவும் செல்லாது என்றும், தெருவுக்கு ஒரு எழுத்தாளரைக் கொண்டிருக்கும் கோவில்பட்டி தொகுதியில் பல வாக்குகள் சீனிவாசனுக்கு விழ வாய்ப்புள்ளது என்கின்றனர்.
மதுரகவி பாஸ்கர தாஸ், பாரதியார் போன்ற கவி ஆளுமைகள் இந்த மண்ணில் இருந்து வந்தவர்களே. அதேபோல், கி ராஜநாராயணன் எனும் கி.ரா, சோ.தர்மன் போன்ற எழுத்தாளர்களும் இந்த கோவில்பட்டி மண்ணில் இருந்து தருவித்தவர்கள் தான் என்று பெருமை பொங்க கூறுகின்றனர். தினகரனை விட்டு விலகி நிற்கும் சசிகலா, அவருக்கு ஆதரவாக எந்த பிரச்சாரமும் மேற்கொள்ளவில்லை. அவர் ஆன்மீக பயணம், தரிசனம் என்று வேறு ரூட்டில் சென்று கொண்டிருக்கிறார். அமைச்சர் கடம்பூர் ராஜூவை பொறுத்தவரை, சாத்தான்குளம் லாக்கப்பில் தந்தை, மகன் இறந்த சம்பவத்தில், போலீசார் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதித்ததாகவும், குறிப்பாக தூத்துக்குடி எஸ்.பி.யை பாதுகாக்கும் நோக்கில் செயல்பட்டதாகவும் அவர் மீது அங்கு அதிருப்தி நிலவுகிறது. ஆகவே, தொகுதியில் பெரியளவு வளர்ச்சி இல்லாத நேரத்தில் மீண்டும் அதிமுகவுக்கோ, ஒரு குறிப்பிட்ட சமூக வாக்குகளை மட்டும் டார்கெட் செய்து களமிறங்கும் தினகரனுக்கோ வாக்களிப்பதைவிட, பல வருடங்களாக மாட்டியிருக்கும் ‘ஜோல்னா’ பையை கூட மாற்றாமல் உழைக்கும் சீனிவாசனுக்கு இம்முறை வாக்களிக்கலாம் என்பதே பரவலான கோவில்பட்டி தொகுதி மக்களின் குரலாக உள்ளது.
நன்றி : ஒன் இந்தியா தமிழ் இணைய இதழ்