election2021

img

மத்திய அரசுக்கு மண்டியிடாத அரசு தமிழகத்தில் அமையும்.... சென்னை கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு....

சென்னை:
தமிழகத்தில் மத்தியஅரசுக்கு மண்டியிடாத அரசு அமையும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறினார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் ஜே.எம்.எச்.ஹசன் மௌலானா (வேளச்சேரி), துரை.சந்திரசேகர் (பொன்னேரி), செல்வபெருந்தகை (திருபெரும்புதூர்), திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் (சைதாப்பேட்டை) ஆகியோருக்கு வாக்கு கேட்டு ஞாயிறன்று (மார்ச் 28) அடையாறில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராகுல்காந்தி பேசியதன் சுருக்கம் வருமாறு:

தொன்மையான பண்பாடு, பாரம்பரியம், மொழியை கொண்ட தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மோடி-அமித்ஷா காலில் வீழ்ந்து கிடக்கிறார்.பிரதமரின் காலில் ஒரு முதலமைச்சர் வீழ்ந்து கிடப்பதை ஏற்க முடியாது. நேர்மையற்றவர் என்பதால் பிரதமரின் காலில் விழுந்து கிடக்கிறார். எந்த மானமுள்ள தமிழனும் இன்னொருவர் காலில் விழமாட்டான்; அதை விரும்பவும் மாட்டான். எனவே, பாஜக ஆர்எஸ்எஸ் அணியை வீழ்த்த வேண்டும்.ஒரு மொழி, ஒரு பாரம்பரியம்தான் மற்றவற்றை விட உயர்ந்தது என்பதைஏற்க முடியாது. தமிழ், பெங்காலி, கன்னடம், பஞ்சாபி என அனைத்து மொழிகளின் பெருமையும் சேர்ந்ததுதான் இந்தியா.தமிழகம் பெரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. அரசியலில் பெரிய மாற்றம் தேவைப்படுகிறது. தொன்மை வாய்ந்த, அறிவார்ந்த சமுதாயம் வேலையின்மையால் தவிக்கிறது. தமிழகத்தின் பொருளாதாரம் அசாதாரண நிலையில் உள்ளது. எனவே, தமிழகத்திற்கு புதிய சிந்தனை, வழிமுறைகள், புதுமை தேவைப்படுகிறது. தமிழக மக்களின் மதிப்பை பெற்று புதிதாக அமைய உள்ளமதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அரசு இதனை செய்யும். தில்லியால் கட்டுப்படுத்தப்பட்ட அரசாக அது இருக்காது.

மண்டியிடாது தமிழகம்
தமிழக பண்பாட்டின் மீது முழு தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதை குறைத்து மதிப்பிட முடியாது. இதன்பின்னால் பணபலம் உள்ளது. இதன்துவக்கப்புள்ளி ஆர்எஸ்எஸ். அவர்களிடம் தமிழகம் ஒருபோதும் மண்டியிடாது. அவர்களுக்கு தமிழர்களை பற்றி புரியவில்லை. 3 ஆயிரம் வருட பாரம்பரி யத்தில் தமிழர்கள் யார் முன்பும் தலைகுனிந்தது கிடையாது. இந்த மண்ணுக்கு மரியாதை கொடுத்த எவரும் அவமானத்தோடு திரும்பிச் சென்றதில்லை. தமிழகத்தை அரவணைத்தால் அது உங்களை பலமடங்கு அரவணைக்கும்.

தமிழகம் இன்றி இந்தியா இல்லை. இந்தியா என்ற சிந்தனைக்கு பிற அடித்தளங்கள் இருந்தாலும், தமிழகம்தான் மையப்புள்ளி. பல சோதனைகளை சந்தித்த பாரம்பரியம் நம்முடையது. தமிழகத்தை காப்பதன் மூலமே இந்தியாவை காப்பற்ற முடியும்.ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டம், சுயேச்சையான அமைப்புகள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. இந்தியாவின் முதுகெலும்பாக சிறு- குறு தொழில்கள் உள்ளன. தொழில் முனைவோரின், உற்பத்தியின் தலைநகர மாக தமிழகம் உள்ளது. ஒரு கார் ஓடுகிறதென்றால் அது திருபெரும்புதூரில் உற்பத்தியாகிறது. இந்த கட்டமைப்பை பணமதிப்பிழப்பு மூலம் தாக்கினர். இந்தியாவிற்கு வேலை வாய்ப்பை கொடுக்கும் சிறுகுறு தொழில்களை நலிவடைய செய்ய வேண்டும் என்பதற்காகவே பணமதிப்பிழப்பு கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து உற்பத்தி துறை மீது ஜிஎஸ்டி தாக்குதல் தொடுக்கப்பட்டது.

சிறு-குறு தொழில்கள், உற்பத்தித் துறை மீது தாக்குதல் நடத்தியதன் தொடர்ச்சியாக, விவசாயத்தை அழிக்கும் வகையில் 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளனர். அது ஒவ்வொரு விவசாயியையும் பாதிக்கும். 2 அல்லது 3 கார்ப்பரேட்களின் நலனுக்காக விவசாய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த சட்டமன்றத் தேர்தல் அத்தகைய தாக்குதல்களையும் தடுத்து நிறுத்தும். இந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக-ஆர்எஸ்எஸ் தமிழகத்தில் வேரறுக்கப்படும். இதற்கு முன்பு வரை நடைபெற்ற தேர்தல்கள் திமுக-அதிமுக கட்சிகளுக்கிடையே நடைபெற்றவை. இந்த தேர்தல் அரசியல் கட்சிகளுக்குள் நடைபெறவில்லை. மாறாக, அதிமுக, ஆர்எஸ்எஸ்-பாஜக ஒருபுறமும், தமிழக மக்கள் அனைவரும் மறுபுறமும் நிற்கின்றனர். தேர்தலில் அதிமுக,ஆர்எஸ்எஸ்-பாஜக அணி நொறுக்கப்ப டும். அதை செய்யக்கூடிய ஒரு சக்திதான் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவார்.

இந்த சண்டை இதோடு நிற்காது. தமிழகத்தின் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டுமானால், பாஜக-ஆர்எஸ்எஸ் விரட்டியடிக்கப்பட வேண்டும். பாஜகவுடன் இந்த அணி எந்த சமரசமும் செய்து கொள்ளாது. தமிழக மும் அதனை ஏற்காது; நானும் ஒப்புக் கொள்ள மாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி., உள்ளிட்டோர் பேசினர்.