புதுக்கோட்டை;
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் பேட்டியிடும் கந்தர்வக்கோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக எம்.சின்னத்துரை போட்டியிடுகிறார். அவரது வேட்புமனுத் தாக்கல் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. வேட்புமனுத் தாக்கலை முன்னிட்டு கந்தர்வகோட்டை காந்தி சிலையில் இருந்துதிமுக கூட்டணிக் கட்சியினர் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோருடன் ஊர்வலமாகச் சென்று வீதிகள்தோறும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் வாக்கு சேகரித்தார்.
ஊர்வலத்தில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கே.செல்லப்பாண்டின், முன்னாள் எம்எல்ஏ கவிச்சுடர் கவிதைப்பித்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் கீரை.தமிழ்ராஜா, காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவர் முருகேசன், சிபிஐ மாவட்டச் செயலாளர் மு.மாதவன், மதிமுக மாவட்டப் பொருளாளர் மாத்தூர் கலியமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதிப் பொறுப்பாளர் பாரிவேந்தர், முஸ்லீம் லீக் அஸ்ரப்அலி, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
பேரணி நிறைவாக கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கே.கருணாகரனிடம் எம்.சின்னத்துரை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். வேட்புமனுவை திமுக மாவட்டப் பொறுப்பாளர் கே.கே.செல்லப் பாண்டியன் முன்மொழிய, காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் முருகேசன் வழிமொழிந் தார். மாற்று வேட்பாளராக சிபிஎம் கறம்பக்குடி வடக்கு ஒன்றியச் செயலாளர் த.அன்பழகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.