புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து முதல்முறையாக சட்டப்பேரவைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவைக்கு செல்கிறது.ஓன்றுபட்ட திருச்சி மாவட்டத்தின் ஒருபகுதியாக இருந்த புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து இரண்டுமுறை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர் உமாநாத்நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட் டார். ஒருமுறை ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தும் இன்னொரு முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தும் உமாநாத் புதுக்கோட்டை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜனவரி 14, 1974-ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் உதயமானது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 1997-ல் நடைபெற்ற புதுக்கோட்டைத் தொகுதி இடைத்தேர்தலில் சிபிஎம் சார்பில் பெரி.குமாரவேல் தனியாகப்போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார்.கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள்நலக்கூட்டணி சார்பில் கந்தர்வகோட்டை தொகுதியில் சிபிஎம் சார்பில் எம்.சின்னத்துரை போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். வேறு எந்தத் தேர்தலிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு தொகுதியிலும் போட்டியிடவில்லை.
இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதி திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை வேட்பாளராகப் போட்டியிட் டார். கூட்டணிக் கட்சியினரின் ஒத்துழைப்பாலும், கட்சி அணியினரின் அயராத உழைப்பினாலும் எம்.சின்னத்துரை அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில் போட்டியிட்டு 12,721 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்ற எம்.சின்னத்துரைக்கு வாக்கு எண்ணிக்கை மையத்திலேயே திமுகமாவட்டப் பொறுப்பாளர் கே.கே.செல்லப்பாண்டியன் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கை மைய வாசலில் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உள்ளிட்ட தலைவர்கள் சால்வை அணிவித்து புதுக்கோட்டை கட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். கட்சி அலுவலகத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ கவிச்சுடர் கவிதைப்பித்தன், சிபிஎம் மாநிலசெயற்குழு உறுப்பினர் ஏ.லாசர், மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
மாநிலக்குழு பாராட்டு
கந்தர்வகோட்டை தொகுதி வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் கட்சியின் மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாநிலக்குழு சார்பில் வாழ்த்துத் தெரிவித்தார். மேலும்,அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், திரைக்கலைஞர் ரோகிணி, தமுஎக மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா உள்ளிட்ட தலைவர் கள், ஏராளமான தோழர்கள் தொலைபேசி வழியாக வாழ்த்துத் தெரிவித்தனர்.