தமிழகத்தில் இதற்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களைக் காட்டிலும் இந்த தேர்தல் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த தேர்தலை பயன்படுத்தி தமிழகத்தில் பாஜக தடம் பதிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது. ஆளும் கட்சியாக உள்ள எடப்பாடி தலைமையிலான அதிமுக மிகமிக பலவீனமாக உள்ளது. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, பாஜக தனது அரசியலை நிலைநாட்ட முயற்சிக்கிறது.தமிழ்நாடு மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்டு நிற்கிறது. சமூக நீதியை கடைப்பிடிப்பதில் முன்னோடியாக உள்ளது. மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிராக, மத சாதிக்கலவரம் இல்லாத அமைதியான மாநிலமாக உள்ளது. இவற்றை சீர்குலைக்கும் வகையில் பாஜகவின் அனைத்து செயல்பாடுகளும் உள்ளன. அவற்றிற்கு அதிமுக அரசு துணைபோகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்தபோது அதை அதிமுக ஆதரித்தது. நாடாளுமன்றத்தில் வலுவான எதிர்ப்பை பதிவு செய்யவும், எதிர்த்து வாக்களிக்கவும் உள்ள உரிமையை பயன்படுத்தவில்லை. இஸ்லாமியர்களுக்கு எதிராக அவற்றை ஆதரித்து வாக்களித்தது. தற்போது வாக்குகளை பெற இஸ்லாமியர்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை என்று கூறுகிறது.
இலவச மின்சாரம் ரத்து
விவசாயம், விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் 3 சட்டங்களையும் அதிமுக ஆதரித்தது; ஆதரிக்கிறது. கேரள இடது முன்னணி அரசு அந்த சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து, காங்கிரஸ், பாஜக ஆதரவோடு நிறைவேற்றியது. அதிமுக அரசு எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற முடியாவிட்டால் கூட, விவசாயிகளை பாதிக்கும் எனவே, ஆட்சேபிக்கிறோம் என்று கூறியிருக்கலாம். அதனை செய்யாமல், அந்த சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்படமாட்டார்கள் என்று பொய்யை தெரிந்தே கூறி வருகிறது. மத்திய ஆட்சிக்கு அடிபணிந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி உள்ளது.வேளாண் சட்டங்களை செயல்படுத்தினால், அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வது, விளை பொருட்களை கொள்முதல், பொதுவிநியோகம் போன்றவை கைவிடப்படும். இதனால் விவசாயிகள், நுகர்வோர் என நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவார்கள். மின்சார திருத்த மசோதா நிறைவேறினால் மின்சாரம் தனியார்மயமாகும். தமிழகத்தில் வழங்கப்படும் வீடுகளுக்கு 100 யூனிட், கைத்தறிகளுக்கு 250 யூனிட், விசைத்தறிகளுக்கு 750யூனிட் வரையிலான கட்டணமில்லா மின்சாரம், விவசாயத்திற்கு முற்றிலும் இலவச மின்சாரம் போன்றவை ரத்தாகும்.
போருக்கு தயாராகும் ஆட்சியாளர்கள்
கூடுதல் அதிகாரம் கோரி மாநிலங்கள் போராடி வருகின்றன. இதற்கு மாறாக, மத்திய அரசு, மாநில உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்து வருகிறது. அதற்கும் தமிழக அரசு துணை போகிறது. மத்தியில் உள்ள பாஜக அரசு அபாயகரமானதாக உள்ளது. அந்த கட்சிக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. சர்வாதிகாரம், பாசிசத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே உணவு என கூறி வருகிறது. ஒரே நாடு; ஒரே கட்சி என்ற நிலைப்பாட்டிற்கு அடித்தளம் இட்டு வருகின்றனர்.
ஆர்எஸ்எஸ்-சின் கொள்கைகளில் ஒன்று அகண்ட பாரதம். அதுகுறித்து விவாதிப்பதற்கான காலம் வந்துவிட்டது என்றுஆர்எஸ்எஸ் தலைவர்கள் பகிரங்கமாக கூறுகிறார்கள். அப்படியென்றால், சீனா, பாகிஸ்தான்,பங்களாதேஷ், இலங்கையோடு போருக்கு ஆயத்தமாகிறார்கள் என்று பொருள். இதையெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஒரு பேரபாயத்தை எதிர்நோக்கி இருக்கிறோம்.
சிதைக்கப்படும் அரசியலமைப்புச் சட்டம்
நாட்டிற்கு வழிகாட்டுவது அரசியலமைப்புச் சட்டம்தான். அதை பிரதமரும் திரும்பத் திரும்பக்கூறுகிறார். ஆனால், அதற்கெதிராகச் செயல்படுகிறார். அரசியலமைப்புச் சட்டப்படி உருவாக்கியுள்ள தேர்தல் ஆணையம், நீதிமன்றம், ரிசர்வ்வங்கி, வருமான வரித்துறை போன்ற அமைப்புகள் நிலைகுலைந்துள்ளன. அவற்றின் மீதான மக்களின் நம்பகத் தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.தங்கள் கட்சிக்கு பெருந்தொகையை நன்கொடையாகக் கேட்கிறார்கள். அதை குறைத்துக் கொடுத்தால் வாங்காமல் செல்கிறார்கள். மறுநாள் அந்த நிறுவனத்தில் வருமானவரிச் சோதனை நடைபெறுகிறது. இப்படித்தான் வருமான வரித்துறையை பயன்படுத்துகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்களின் வீடுகளில் சோதனை போடுகின்றனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கனிமொழி வீட்டில் சோதனை நடத்தி அவதூறை உருவாக்கினர். அவர்கள் கூறியபடி நடக்காவிடில், அடிபணிய மறுத்தால் வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறார்கள். இதன்மூலம் ஜனநாயகம் கேள்விக் குறியாகி உள்ளது.
குலக்கல்வி
சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் மட்டும்தான் படிக்க முடியும் என்று இருந்த நிலையை மீண்டும் கொண்டு வரும் வகையில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்துள்ளனர். இதேபோன்று ஒரு கல்விக்கொள்கையை 1952 ஆம் ஆண்டு தமிழகத்தில் ராஜாஜி கொண்டு வந்தார். அதை குலக்கல்வி என்று கூறி, கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட இயக்கமும் கடுமையாக எதிர்த்தன.காமராஜரும் சேர்ந்து எதிர்த்தார். அந்த கல்விக் கொள்கையை கைவிட்டதோடு, ராஜாஜியும் பதவியை ராஜினாமா செய்தார். அந்த குலக்கல்வி முறையைத்தான் நாடு முழுவதும் அமலாக்க பிரதமர் முயற்சிக்கிறார். காலம்காலமாக ஒதுக்கப்பட்ட மக்கள் மெல்ல தலைநிமிர்ந்து எழுகிறார்கள். அவர்களை மீண்டும் ஒதுக்கி வைக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை உள்ளது. மக்களுக்கு விரோதமான மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் ஆதரிக்கிற கட்சியாக அதிமுக உள்ளது. எனவே, அதிமுக-பாஜக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்.
பின்னணியில் இருப்பது யார்?
தமிழக தேர்தல் களத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும் அதிமுக-பாஜக அணிக்கும் இடையேதான் நேரடிப் போட்டி உள்ளது. இதுதவிர்த்து பல அணிகள், மற்றவர்கள் நிற்கிறார்கள். இந்த இரு அணிகளை தவிர்த்து மற்றவர்களுக்கு வாக்களிப்பது செல்லாத வாக்குகளுக்கு சமமாகும். அவர்கள் ஒவ்வொருவருக்கு பின்னாலும் இன்னொரு பின்புலம் இருக்கிறது. மக்களைபிளவுபடுத்தி தங்களுடைய குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள பாஜக முயற்சிப்பது போன்றே, வாக்குகளையும் பிரிக்க முயற்சிக்கிறது.
உதாரணமாக, 7 சாதிகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அழைக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை வைக்கிறார். அதனை ஏற்று முதலமைச்சர் பரிந்துரைக்கிறார். மத்திய அரசு அதை நிறைவேற்றிவிட்டது. கோரிக்கை நிறைவேறிய பிறகும், கிருஷ்ணசாமி தனித்து போட்டியிடுவது ஏன்? மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு அந்த பகுதி மக்களின் ஆதரவு கிடைக்கக் கூடாது என்ற உள்நோக்கத்தோடு இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர். இதன் பின்னணியில் இருப்பது யார்?ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார், பிறகு விலகிக் கொண்டார். சசிகலா சிறைக்கு அனுப்பப்பட்டு விடுதலையானார். பெங்களூரில் இருந்து சென்னைக்கு வர அவருக்கு 23 மணி நேரம் ஆனது. தற்போது ஒதுங்கிக் கொள்கிறேன் என்கிறார். இவைகளுக்கு பின்னால் இருந்து இயக்குவது யார்? இதேபோன்றுதான் மாற்று என்று சொல்லிக் கொண்டுபல கட்சிகள் நிற்கின்றன. இதற்கு பின்புலம் யார்? இப்படிச் செய்வதன் மூலம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது. வகுப்புவாதத்திற்கு ஆதரவாக, துணையாக இருக்கக்கூடிய அமைப்புகளை நிராகரிக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித்தலைவர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் பெரும் எழுச்சியை காண்கின்றனர். இதன்மூலம் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அமோக ஆதரவளித்து 39ல் 38 இடங்களை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு அளித்தார்கள். அதே மக்களின் மகத்தான ஆதரவோடு சட்டமன்றத் தேர்தலிலும் 234 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெல்லும்.
கட்டுரையாளர் : இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
இந்த கட்டுரைத் தொகுப்பு 1-ஆம் பக்கம் 3-ஆம் பக்கம் என 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படிக்கவும் வசதிக்காக ஒரே தொகுப்பாக பதிவிடப்பட்டுள்ளது.