election-2019

img

வட்டாட்சியர் சம்பூரணம் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி சு. வெங்கடேசன் மனு

வாக்குப்பதிவு எந்திரங்கள் இருந்த அறைக்குள் நுழைந்த வட்டாட்சியர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மதுரை மக்களவை தொகுதியில் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டது. இதற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, அறை முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு அடையாளம் தெரியாம நபர் ஒருவர் நுழைந்து சில ஆவணங்களை நகல் எடுத்து சென்றதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்த தகவல் பரவியதை அடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து விளக்கம் அளிக்கும் வரை தர்ணா போராட்டம் நடைபெறும் என கூறினார். அறைக்குள் சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் நடராஜன் செய்தியாளர்களிடம் கூறினார். 

இதன்பின் வாக்குப்பதிவு ஆவண அறையில் நுழைந்ததாக கலால் வட்டாட்சியர் சம்பூர்ணத்திடம், மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டார். அவர் 2 மணிநேரம் ஆவண அறையில் இருந்துள்ளார். ஆனால், வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு அறைக்குள் நுழையவில்லை என தகவல் தெரிவிக்கின்றது. மேலும் இதுகுறித்த அறிக்கை தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து 

வாக்குபதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் வட்டாட்சியரிடம் நடத்தப்படும் விசாரணை நிறைவு தரவில்லை. சம்பூரணத்தை பணி இடைநீக்கம் செய்தது போதாது அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். 


;