election-2019

img

மோடி அரசும் மென்பொருள் துறையும்

ஐடி துறையில் அன்றாடம் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஸ்மார்ட் போன், க்ளவுட் டெக்னாலஜி, மெஷின் லேர்னிங், செயற்கை நுண்ணறிவுத் திறன் என்று நவீன தொழில்நுட்பங்கள் நாலுகால் பாய்ச்சலில் வளர்ந்து வருகின்றன.

ஆனால் இந்தத் துறையில் வேலை பார்க்கும் ஊழியர்களோ, எப்போது வேலை போகும் என்ற அச்சத்திலேயே இருந்து வருகிற நிலைமை.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப ஊழியர்களுக்கு மறுதிறன் பயிற்சி எதுவும் வழங்காமல் வெறும் 10-15 வருட சர்வீஸில் ஊழியர்கள் கொத்துக்கொத்தாய் வெளியேற்றப்படும் அவலம்.

டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, மேக்கின் இந்தியா, 1 டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரம் என்று பகட்டான, படாடோபமான அறிவிப்புகள், எல்லாமே வெற்று முழக்கங்களாக மாறிப் போன கொடுமை.

தகவல் தொடர்பு சேவைத் துறைகளில் கொத்தடிமைகளாக இளம் கணினி வல்லுநர்கள், ரூ.8000- ரூ.12,000 சம்பளத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டு, மோசமான பணிச் சூழலில் உறிஞ்சப்படும் கொடூரம்.

அமெரிக்காவைச் சார்ந்து நிற்கும் மென்பொருள் சேவைத் துறையில் உள்நாட்டு சந்தை வளர்ச்சிக்கு ஒரு முனைப்பும் காட்டப்படாத நிலைமை.

அமெரிக்காவை அடிபிறழாமல் பின்பிற்றினாலும், எச்1பி விசா பிரச்சனையில் டிரம்ப்பின் அதிரடி முடிவைப் பற்றிக் கேட்பதற்குக் கூட துணிவு இல்லை. கனவுகளுடன் வெளிநாடு சென்ற இளம் இந்திய விஞ்ஞானிகளைப் பாதுகாப்பதற்கு மோடி அரசிடம் எந்தவித முயற்சியும் இல்லை.

எச்1பி விசா பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் 41 சதவீதம் வீழ்ந்திருப்பதும், பல்லாயிரக்கணக்கில் ஊழியர்கள் வேலையை இழந்திருப்பதும் மத்திய அரசின் செயலின்மைக்குச் சான்று.

ஐ.டி. துறையில் தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்தப்படுவதில்லை. ஐடி நிறுவனங்களுக்குத் தொழிலாளர் சட்டங்கள் பொருந்தாது என்று முதலாளிகள் சங்கமான நாஸ்காம் ஆணவத்தோடு அறிவிக்கிறது.

ஐடி இஎஸ் துறையை அரசின் மிக அவசியமான சேவைத் துறையாக அறிவித்து, தொழிற்சங்க உரிமை மறுப்பு. தமிழக அரசின் இ-சேவை மையங்களில் பணிபுரியும் ஊழியர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களாக, ரூ.7,675 மாத ஊதியத்திற்கு, பணிப் பாதுகாப்பு எதுவும் இல்லாமல் வேலை செய்து வரும் கொடுமை.

தரவு உள்ளீட்டாளர்களுக்கு (Data Entry Operators) குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று சிஐடியு மனு கொடுத்துள்ள போதிலும் அதைக் கண்டு கொள்ளாத அரசுகளின் இலட்சணம்.

ஐடி துறை சந்தித்துவரும் சவால்களை எதிர்கொண்டு நிலைமையை மாற்றிட, ஐடி துறை ஊழியர்களின் பிரச்சனைகளைத் தீர்த்திட மோடி தலைமையிலான பிஜேபி ஆட்சி அகற்றப்பட வேண்டும். இடதுசாரிக் கட்சிகள் இடம் பெற்றுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழகத்தில் முழுமையாக வெற்றி பெற வேண்டும். தங்கள் வாக்குகளை திமுக தலைமையிலான கூட்டணிக்கு முழுமையாக வழங்கிட ஐடி, ஐடிசிஎஸ், இ-சேவை மைய ஊழியர்களை சிஐடியு கேட்டுக் கொள்கிறது.

மோடி ஆட்சியை அகற்றுவோம்!

மாற்றத்தை ஏற்படுத்துவோம்!


கே.சி.கோபிகுமார்

;