election-2019

1.64 கோடிப் பேர் வாக்களிக்கவில்லை

புதுதில்லி, ஏப்.20-தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 1.64 கோடிப் பேர் வாக்களிக்கவில்லை என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.17 ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. ஏப்ரல் 18 அன்று தமிழகத்தில் வேலூர்தொகுதியை தவிர்த்து 38 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் 71.90 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது கடந்த தேர்தலைக் காட்டிலும் குறைவான வாக்குப் பதிவாகும். கடந்த தேர்தலில் 73.68 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர நடந்து முடிந்த 18 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் 75.56 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.வேலூரைத் தவிர்த்து 38 மக்களவைத் தொகுதிகளில் மொத்தம் 5 கோடியே 84 லட்சத்து 42 ஆயிரத்து 767 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் 2 கோடியே 88 லட்சத்து 96 ஆயிரத்து 279 பேர். பெண்கள் 2 கோடியே 95 லட்சத்து 40 ஆயிரத்து 800 பேர் ஆவர். 5,688 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.ஆனால், இவர்களில் 4 கோடியே 20 லட்சத்து 24 ஆயிரத்து784 பேர் மட்டுமே வாக்களித்திருக்கின்றனர் என்றும் 1 கோடியே 64 லட்சத்து 17 ஆயிரத்து 983 பேர் வாக்களிக்கவில்லை என்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இடைத்தேர்தலைப் பொறுத்தவரை 47 லட்சத்து 32 ஆயிரத்து 775 வாக்காளர்கள் உள்ளனர். 23 லட்சத்து 40 ஆயிரத்து 553 ஆண்களும் 23 லட்சத்து 91 ஆயிரத்து 706 பெண்களும் அடங்குவர். 516 பேர் மூன்றாம் பாலினத்தவர். இவர்களில் 11 லட்சத்து 56 ஆயிரத்து 730 பேர் வாக்களிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.போதிய பேருந்து வசதி இல்லாதது, வாக்குச் சாவடிகளில் போதிய ஏற்பாடுகள் இல்லாதது போன்ற சிரமங்களுக்கு மத்தியில் மக்கள் வாக்களித்துள்ளனர்.

;