திமுக பொருளாளர் துரை முருகன் வீடு உள்ளிட்ட பல பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பணம் உள்ளிட்ட பல பொருட்களை வைத்திருப்பதாக கூறி வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதிகாரிகளின் அடையாள அட்டைகளில் முரண்பட்ட தகவல்கள் இருந்ததால் 4 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குவாதம் நடைபெற்றது. பின்னர் துரைமுருகனின் வீடு, கார் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் ஆவணங்களோ பணமோ கைப்பற்றப்படவில்லை.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன்,
வருமான வரித்துறை சோதனை செய்வதற்கு இது காலம் அல்ல. இந்த நேரத்தில் வீட்டிற்குள் நுழைய வேண்டிய அவசியம் என்ன? வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்தின் வெற்றி பிரகாசமாக இருக்கிறது, அதை திசைதிருப்ப வேண்டும் என்பதற்கே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
களத்தில் எங்களை எதிர்க்க திராணியற்ற கடைந்தெடுத்த அரசியல்வாதிகள் செய்த சூழ்ச்சி. நேருக்கு நேர் எதிர்க்க முடியாமல் எங்கள் முதுகில் குத்த பார்க்கின்றனர். மத்திய, மாநில அரசோடு கூட்டணி வைத்துள்ள சில அரசியல்வாதிகள் வருமான வரித்துறை சோதனை மூலம் சூழ்ச்சி செய்கின்றனர்.
மிரட்டுவதன் மூலம் எங்களை பணியவைக்க முடியாது. நாங்கள் மிசாவை பார்த்தவர்கள், அடக்குமுறையை பார்த்தவர்கள். மத்திய அரசு காலில் விழுந்து வருமான வரித்துறையை வைத்து மிரட்டி பார்க்கின்றனர். பொய் வழக்கு போடுவது, பூச்சாண்டி காட்டுவது இதற்கெல்லாம் பயந்தவன் திமுகவின் கடைமட்டத் தொண்டர்களில் கூட கிடையாது.
COMMENT
எங்களை எதிர்ப்பவர்கள் நேரடியாக எதிர்க்க வேண்டும், இதையெல்லாம் பொருட்படுத்த மாட்டோம். மோடியின் இந்த வருமான வரித்துறையை ஏவி விடும் தத்துவம், அரசியலில் வெற்றியை தராது, பகையை கொண்டு வந்து சேர்க்கும் என்று அவர் பாஜகவை நேரடியாக சாடியுள்ளார்.