election-2019

img

விவசாயியா? விஷ வாயுவா?

... இப்பொழுது நம்மை எதிர்த்துப் போட்டியிட கூடியவர்களான பி.ஜே.பி, குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஆளும்கட்சியான அ.தி.மு.க தேர்தல் களத்தில் பிரச்சாரத்திற்கு வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக எடப்பாடி செல்லக்கூடிய கூட்டங்கள் அனைத்தும் பெரிய பெரிய கூட்டங்கள். அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பது போல்.வேனில் கிளம்பி விட்டார். ஏதோ தன்னை எம்.ஜி.ஆர் போன்றே நினைத்துக் கொண்டு செல்கின்றார். தேர்தல் பிரச்சாரத்தில் தி.மு.க-வை விமர்சிக்கின்றார். விமர்சியுங்கள் ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் யாரையும் விமர்சிக்கலாம், அரசியல் நாகரீகத்தோடு. நான் கேட்கின்ற கேள்வி இது நாள் வரையில் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதனைத் தொடர்ந்து 8 வருடமாக உங்கள் ஆட்சி தான் நடக்கின்றது. ஆட்சியில் என்ன செய்து இருக்கின்றோம் என்று சொல்லுகின்ற அருகதை, தெம்பு, தைரியம், திராணி அவர்களுக்கு இருக்கின்றதா? சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.அதேபோல்தான் மத்தியில் பிரதமர் மோடி அவர்கள் ஐந்து வருடங்கள் பிரதமராக ஆட்சியில் இருக்கின்றார். நாங்கள் இதை இதை செய்திருக்கிறோம் என்று சொல்லுங்கள். அதற்குப் பிறகு இதையெல்லாம் செய்யப் போகின்றோம் என்று சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு நம்மை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் வேடிக்கை.இதைவிட பெரிய ஜோக் என்னவென்றால், எடப்பாடி எங்கு சென்றாலும் நான் ஒரு விவசாயி என்கின்றார். ஒரு விவசாயி நாட்டை ஆள்வது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை என்று சொல்லுகின்றார். விவசாயி நாட்டை ஆளலாம், அப்படி ஒரு விவசாயி நாட்டை ஆளும்பொழுது ஸ்டாலின் மனப்பூர்வமாக வரவேற்பான் - அதை ஆதரிப்பான். ஆனால், விஷவாயு இந்த நாட்டை ஆளக்கூடாது. எடப்பாடி விவசாயி அல்ல; விவசாயி என்று சொல்லுவதற்கு கூட அருகதை கிடையாது. அவர் விவசாயி அல்ல விஷவாயு.கஜா புயல் டெல்டா பகுதியில் அழித்து வாழ்வாதாரத்தை இழந்து இருந்த மக்களைச் சென்று இந்த விவசாயி சந்தித்தாரா? என்றால் இல்லை. அதன்பின்னர் நாடகம் நடத்த வானிலே பறந்தார்.தேர்தல் வருவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி அவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய மக்களுக்கு 2000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். அப்பொழுது, ஒரு நிருபர் கேட்கின்றார், இது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது.

நீங்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கின்றவர்கள் என்று சொல்கின்றீர்கள், எனவே வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டதா என்று கேட்கின்றார். அப்பொழுது எடப்பாடி அவர்கள் என்ன பதில் சொன்னார் என்றால், அதிகமாகி விட்டார்கள் என்பது தவறு. மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டது. அளவுக்கு மீறி ஆசைப்படுகிறார்கள் என்றார். மக்களை இவ்வளவு கொச்சைப்படுத்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இப்படி ஒரு பதில் சொல்லுகிறார். ஒரு முதலமைச்சர் இப்படி பேசலாமா? வழங்குவதாக சொன்னது அவரது பணம் அல்ல. மக்கள் பணத்தை. அரசின் பணத்தை எடுத்து தானம் தருவது போல மக்களை ஏமாற்ற தேர்தல் சமயத்தில் அறிவிப்பை வெளியிட்டு விட்டு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை ஆகிவிட்டதா என்று நிருபர் கேட்கின்ற நேரத்தில், மக்கள் அதிக அளவிற்கு ஆசைப்படுகின்றார்கள் என்று சொல்லுகிறார் என்று சொன்னால், அப்படிப்பட்ட முதலமைச்சரை தொடர்ந்து அந்தப் பதவியில் உட்கார வைப்பது நியாயமா? இந்த இலட்சணத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருக்கின்றது என்று அவார்டு எல்லாம் வாங்கி விட்டார்.

இன்று காலை தொலைக்காட்சியில் ஒரு செய்தி வந்தது, இன்று வந்தது போன்று ஐந்தாறு நாட்களுக்கு முன்பும் ஒரு செய்தி வந்தது. அதுஎன்னவென்றால், தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் ஒரு நபருக்கு பிறந்தநாள் கொண்டாடுகின்றார்கள், அது யார் என்று கேட்டால் போலீஸ் லிஸ்டில் முதல் இடத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய ரவுடி, எந்த நேரத்திலும் கைது செய்யப்படக்கூடிய நிலையில் காவல்துறையினர் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர் திடீரென்று ஒரு நாள் அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய ரவுடிகள் அனைவரையும் அழைத்து உட்காரவைத்து நன்றாக சாப்பிட்டுவிட்டு ஒரு பெரிய கேக்கில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, வீச்சரிவாளால் கேக்கை வெட்டுகின்றான். இதை சட்டமன்றத்தில் பேசினோம். பதில் சொல்ல முடியவில்லை அவர்களால். அதேபோல் இன்று சேலத்தில் முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் இன்று காலையில் ரவுடிகள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து கேக் வெட்டும் காட்சி வருகின்றது, எங்கு சட்டம்- ஒழுங்கு சரியாக இருக்கின்றது?பொள்ளாச்சி கொடுமை உங்களுக்கெல்லாம் தெரியும்.

இதைவிடக் கொடுமை நாட்டில் எங்காவது நடந்துள்ளதா சொல்லுங்கள். கடந்த 7 வருடமாக 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டு இருக்கின்றார்கள். இந்த நாட்டில் காவல்துறை, உளவுத்துறை, அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கின்றது? இந்த இலட்சணத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று சொல்கின்றார்.இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகத்தான் நான் உங்களை தேடி - நாடி வந்து இருக்கின்றேன். நேற்றைய தினம் பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் நான் பேசினேன். அப்பொழுது பேசுகின்ற பொழுது குறிப்பிட்டுச் சொன்னேன். ஒரு உறுதிமொழி ஒன்று கொடுத்தேன். பொள்ளாச்சி விவகாரத்தை எந்த காரணத்தைக் கொண்டும் அரசியலாக்க விரும்பவில்லை, காரணம் நமக்கும் பெண் பிள்ளைகள் இருக்கின்றார்கள். நானும் பெண் பிள்ளைக்கு தந்தை தான். இங்க வந்து இருக்கக்கூடியவர்கள் எத்தனையோ பேர் பெண் பிள்ளைகளை பெற்றிருக்கின்றார்கள். நமக்கு ஒரு சம்பவம் நடந்திருந்தால் துடி துடித்து மாண்டு போயிருப்போம்.எனவே, இந்த ஆட்சியில் நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை. அவர்களை தப்பிக்க வைக்கின்ற முயற்சியில்தான் இந்த ஆட்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வருகின்ற பொழுது உறுதியாக சொல்லுகின்றேன். பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய பெண்களுக்காக அவர்களுடைய பெற்றோருக்காக, உங்களுக்காக நான் சொல்லுகின்றேன். இதற்கு உரியவர்கள் யார்? பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் யார்? என்று கண்டுபிடித்து சிறையில் அடைப்பதுதான் தி.மு.கழகத்தின் முதல் வேலையாக இருக்கும். அதுதான் இந்த ஸ்டாலினின் முதல் வேலையாக இருக்கும்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் கவுதம சிகாமணிக்கு வாக்கு கேட்டு வெள்ளியன்று இரவு நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையிலிருந்து...


1; மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும்விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் முனைவர் ரவிக்குமாரை ஆதரித்து சனிக்கிழமை நடைபெற்றபிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

2.கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் கவுதம சிகாமணியை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.