பாஜக தலைவர் அமித்ஷாவின் சொத்து மதிப்பு கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 3 மடங்காக அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக தலைவர் அமித்ஷா கடந்த சனியன்று காந்திநகர் மக்களவை தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தார். அப்போது அவர் தனது சொத்து பட்டியலையும் தாக்கல் செய்தார் இதிலிருந்து அமித்ஷாவின் சொத்து மதிப்பு கடந்த 7 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
அமித் ஷா தாக்கல் செய்த வேட்புமனுவில் அளித்த விவரங்களின் படி 2012-ம் ஆண்டு 11.79 கோடி ரூபாயாக இருந்த இவரது குடும்பத்தின் மொத்த அசையும் மற்றும் அசையா சொத்து மதிப்பு தற்போது 38.81 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அவரது 20,633 ரூபாய் ரொக்க பணமும், அவரது மனைவியின் கையில் 72,578 ரூபாய் ரொக்க பணம் உள்ளது. அமித்ஷா மற்றும் அவரது மனைவி என இருவரின் பல்வேறு வங்கிக் கணக்குகளில் 27.80 லட்சம் ரூபாய் இருப்புத் தொகையும், ஃபிக்சட் டெபாசிட்டாக 9.80 லட்சம் ரூபாயும் உள்ளது. இருவருக்கும் சென்ற ஆண்டு 2.84 கோடி ரூபாய் வருமான வந்தது என வருமான வரி தாக்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
அமித் ஷாவுக்கு மாநிலங்களவை உறுப்பினராக இருந்ததற்குப் பெற்று வந்த சம்பளம், வாடகை மற்றும் விவசாயம் போன்றவற்றிலிருந்து வருமானம் வந்துள்ளது. 2017-ம் ஆண்டு குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் அமித் ஷா போட்டியிட்ட போது 34.31 கோடி என்று குறிப்பிட்டு இருந்தார், அது இப்போது 4.5 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. 2012-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் போட்டியிட்ட போது அமித் ஷா, அவரது மனைவி மற்றும் மகன் என அனைவருக்கும் சேர்த்து மொத்தமாகவே 11.79 கோடி ரூபாய் சொத்து இருந்ததாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மேற்கு வங்கம் மற்றும் பீகாரில் அமித்ஷா மீது 4 குற்றவியல் வழக்குகள் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.