election-2019

img

நாம் ஏன் பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது?

கடந்த ஆட்சி காலங்களில் குஜராத் கலவரம், பாபர் மசூதி இடிப்பு, கார்கில் போர் என இந்து தேசியத்தை நிலைநாட்டுவதற்காக பா.ஜ.க நிகழ்த்திய அத்தனை வன்முறைகளையும் மறந்து ‘ஊழல் ஒழிப்பு’ என்ற அற்ப அஸ்திரத்தில் வீழ்ந்தோம். மதக் கலவரங்களோ சாதிய ஒடுக்குமுறைகளோ போரோ ஆணாதிக்கமோ இவையெல்லாம் ஒரு பொருட்டில்லை. ஊழல் தான் இச்சமூகத்தின் ஆகப் பெரிய பிரச்சனை என அதற்கு வாக்களித்தோம். ஆனால் ஊழல் ஒழியவில்லை.மாறாக கடந்த ஐந்தாண்டுகளில் அது பார்ப்பனியம், சாதியம், பெண் வெறுப்பு,இந்துத்துவம், காவிமயமாக்கல் என அதன் அத்தனை அடிப்படைவாதக் கொள்கைகளையும் சமூகத்தின் எல்லா மட்டத்திலும் நிகழ்த்திக் காட்டிவிட்டது. தலித்களும் சிறுபான்மையினரும் நூற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். காதலர்கள் நடுவீதியில் அடித்து நொறுக்கப்பட்டனர். தலித்கள், பழங்குடியினர் சிறுபான்மையினர், பெண்களை கண்காணிக்கபண்பாட்டுக் காவலர்களை அரசே நியமிக்கும் கொடுமை நடந்தது. ஆனால் ‘கோடிக் கணக்கில் ஊழல்’ என்ற செய்திஉண்டாக்கும் அதிர்வையும் அதிர்ச்சியையும் வன்முறைகளும் வன்கொடுமை களும் நம்மிடையே உருவாக்குவ தில்லை. 


இப்போதும் நாம் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, ரபேல் ஊழல் போன்றவற்றையே மையப்படுத்துகிறோம். ஆனால் தனது ஊழலை நாளை நிகழப் போகும் மற்றொரு ஊழலை வைத்து பா.ஜ.க எளிதாக வீழ்த்தி விட்டு அடுத்த முறை எளிதாக ஆட்சியைப் பிடிக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. உண்மையில் பா.ஜ.கவை வெறுக்க, புறக்கணிக்க, விரட்டியடிக்க, ஒழிக்க நமக்கு ரத்தமும் சதையுமான வலுவான காரணங்கள் இருக்கின்றன.இந்திய மக்களாகிய நம்மை எது கோபப்படுத்த வேண்டுமெனில் நமதுஅரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்து வத்திற்கு எதிரான பா.ஜ.கவின் கொள்கைகளும் செயல்பாடுகளும்! இந்தியா சாதிப்பாகுபாடுகள் நிறைந்த நாடு.இங்கே நாள்தோறும் நடந்தேறும் சாதிக்கொடுமைகள் ஒரு பண்பாட்டுச் செயல்பாடாகவே கருதப்படுகின்றன. ஆனால் நமது அரசமைப்புச் சட்டம் அதைஎதிர்க்கிறது. அது ஒவ்வொரு தனிநபருக்கும் மாண்புரிமைகளை வலியுறுத்துகின்றது. தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் எல்லோரும் சட்டம், நீதி மற்றும் உரிமைகளின் முன் சமமானவர்களே! சமூகம் எவ்வாறானதாக இருந்தாலும் அரசுக்குஅரசமைப்புச் சட்டத்தின் விதிகளை பாதுகாத்தாக வேண்டிய, நடைமுறைப் படுத்தியாக வேண்டிய பெரும் பொறுப்பு இருக்கிறது. 


ஆனால் கடந்த ஐந்தாண்டுகளில் பா.ஜ.கவின் ஒவ்வொரு செயல்பாடும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகவே இருந்தது. சமூகத்தின் சாதி மதப் பிளவுகளை அது மேலும் கூர்மைப்படுத்தியது. படித்தவர்களும் தம்மை இந்து என்றும் இன்ன சாதி என்றும் வெளிப்படை யாக பெருமிதமாக பேசிக் கொள்ளும் அவலம் உரு வானது. கல்வி, அரசு நிர்வாகம், நீதி அமைப்புஎல்லாமே இந்துமயமானது. ஆர்.எஸ்.எஸ் பட்டறையில் பயிற்சி எடுத்தவர்கள் அரசின் பல்வேறு துறைகளுள் சுதந்திரமாக பதவியேற்றனர். அதன் வழியே ஒவ்வொரு துறைக்கும் இருக்கும் அரசு அமைப்புகளுக்கு எதிராக பா.ஜ.க நிழல் அமைப்புகளை உருவாக்கி இருக்கிறது.உதாரணத்திற்கு கல்வித்துறையை மாநிலப் பட்டியலில் இருந்து நீக்குவதோடு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவை செயலற்றதாக்கி ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிய ‘பாரதிய ஷிக்‌ஷா போர்ட்’ பாடத் திட்டம் தயாராக இருக்கிறது. இதன் முக்கிய நோக்கம் குலக்கல்வித் திட்டம். மணியடிப்பவர்கள் மணியடிக்கவும் மலமள்ளுவோர் தொடர்ந்து மலமள்ளவுமே இத்திட்டம். மகாரிஷி சண்டிபனி ராஷ்டி ரிய வேதவித்யா பிரதிஷ்தான் என்ற அமைப்பு தான் இனி இந்தியாவின் கல்வித்துறையை நிர்வகிக்கப் போகிறது. இதுவொரு சிறிய எடுத்துக்காட்டுதான்.


அடுத்தடுத்து ஆட்சியைப் பிடித்து அரசமைப்புச் சட்டத்தை மொத்தமாக ஒழித்துவிட்டு மநு நீதியை அரசமைப்புச் சட்டமாக நடைமுறைப்படுத்துவதுதான் பா.ஜ.கவின் திட்டம். அந்த பேராபத்து நடக்குமானால் இந்நாட்டின் பெரும்பான்மைமக்கள் பஞ்சமர்களாகவும் சூத்திரர்களாக வும் மீண்டும் வதைபட வேண்டிய காலம் வெகுதொலைவில் இல்லை எனலாம். இவர்களுக்கு இன்னொரு முறை வாக்களித்தோமானால் நாம் நமது அரசமைப்புச் சட்டத்தை இழப்போம். சாதியம், இந்துமதம், பார்ப்பனியம் ஆகிய மூர்க்கங்களிலிருந்து நம்மை காப்பாற்றும் அரணாகிய அரசமைப்புச் சட்டத்தை நேர்ந்திருக்கும் ஆபத்தை தடுக்கவும் அது வலியுறுத்தும் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய மாண்புகளை மீட்டெடுக்கவும் இனி ஒருபோதும் பா.ஜ.கவிற்கு வாக்களிக்கக் கூடாது. ஒரு மனிதர், ஒரு வாக்கு என ஜனநாயகத்தில் எல்லோரும் சமம் என்றாக்கிய சமத்துவத்தை வலியுறுத்தும் நமது வாக்குரிமையை எதிர்காலத்தில் இழந்துவிடாமல் இருக்க இந்திய மக்களாகிய நாம் பா.ஜ.கவிற்கு வாக்களிக்கக் கூடாது.

;