தமிழகத்தில் விடுபட்ட 4 சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தல் மே 19ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த மாதம் 10 தேதி நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது தமிழகத்தில் உள்ள 18 சட்டபேரவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீதமுள்ள அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இந்த 4 தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் 22ம் தேதி தொடங்கி ஏப்ரல் 29ம் தேதி முடிவடையும். வேட்புமனுக்களை வாபஸ் பெற மே 2ம் தேதி கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23ம் தேதி இந்த 4 இடைத்தேர்தல்களில் பதிவாகும் வாக்குகளும் எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.