மதுரை வாக்குப்பதிவு ஆவணங்கள் இருக்கும் அறைக்குள் சென்ற பெண் அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் நடந்த மக்களவை, இடைத்தோ்தலின் போது மதுரை மண்டலத்தில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் மூன்று அடுக்கு பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த சனிக் கிழமை மாலை சம்பூரணம் என்ற வட்டாட்சியா் வாக்குப்பதிவு ஆவணங்கள் இருந்த அறைக்குள் சென்றார். மேலும் அவா் அங்கு இருந்து ஆவணங்கள் சிலவற்றை நகல் எடுத்துச் சென்றுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு அந்த தொகுதி வேட்பாளா்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடா்ந்து பெண் அதிகாரி சம்பூரணம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதனைத் தொடா்ந்து, சம்பூர்ணத்துடன் உதவியாக சென்ற மேலும் 3 அலுவலர்களான கலால் வரியின் ஆவணப்பதிவு எழுத்தாளர் சீனிவாசன், மதுரை மாநகராட்சி மண்டல அதிகாரிகள், ராஜ பிரகாஷ், சூரிய பிரகாஷ் ஆகிய மூவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான நடராஜன் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த நால்வரும் அனுமதியின்றி சென்றது தொடர்பாக கலால்வரி இணை ஆணையரும் மேற்கு தொகுதியின் உதவி தேர்தல் அலுவலருமான குருசந்திரனிடம் விளக்கம் கேட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் நடராஜன் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.