கோவை, மார்ச் 30– கோவை நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வெற்றியை உறுதி செய்ய தீவிர பிரச்சாரம் மேற்கொள்வது என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் வழக்கறிஞர்கள் அணிகள் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளராக பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து பிரச்சாரம்மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள், ஆதரிக்கும் அமைப்புகளின் வழக்கறிஞர்கள் அணியின் ஆலோசனை கூட்டம் வெள்ளியன்று கோவை சரோஜ்பவனில் நடைபெற்றது. அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகி மு.ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தபெதிக நிர்வாகி சாஜித் வரவேற்புரையாற்றினார். இதில் திமுக, காங்கிரஸ்,மதிமுக, சிபிஐ, சிபிஎம், விசிக,மமக, கொமுதேக உள்ளிட்ட கட்சிகள், தமிழர் திராவிடகட்சி, சமத்துவக் கழகம், புரட்சிகர இளைஞர்முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர்.
இதில் ஐந்தாண்டு கால பாஜக ஆட்சிஇந்திய நாட்டின் அரசியல் சட்ட அடிப்படைஉரிமைகளை தகர்த்தும், மாநிலத்தில் உரிமைகளை பறித்தும், அரசியல், பொருளாதாரம், ஜனநாயகம், கருத்துரிமை, சிறுபான்மையின மக்கள், தலித் மக்கள் என அனைத்தின் மீதும் கடும் தாக்குதலை தொடுத்துள்ளது. எடப்பாடி அரசு மாநில உரிமைகளை பதவி சுகத்திற்காக பறிகொடுத்து அடிமை அரசாக இருக்கிறது. இந்நிலையில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுகதலைமையிலான அணியை அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வைப்பதுஜனநாயகத்தை நேசிக்கிற ஒவ்வொருவரின் கடமையாக உள்ளது.
இதன்தொடர்ச்சியாக கோவை நாடாளுமன்ற தொகுதியில் நமது அணியின் சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளராக பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். இவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். இதற்காக வழக்கறிஞர்கள் தீவிர பிரச்சார இயக்கத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது. இதன்ஒருபகுதியாக வழக்கறிஞர்கள், பொதுமக்களிடம் ஏன் மோடிக்கு வாக்களிக்க கூடாது, பி.ஆர்.நடராஜனுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்கிற துண்டு பிரசுரத்தை அச்சடித்து விநியோகிப்பது. மேலும், கோவை மாநகரத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியில் வழக்கறிஞர்கள் சார்பில்வாகன பிரச்சாரம் மேற்கொள்வது, பணபலத்தை மட்டுமே நம்பி தேர்தல் களத்தை எதிர்கொள்ளும் அதிமுக, பாஜக அணியினர் சட்டவிரோதமாக வாக்காளர்களிடம் பணம்கொடுப்பதை தடுப்பதற்கான குழுவை அமைப்பது. தொகுதிக்கு பத்து வழக்கறிஞர்கள் என்கிற வகையில் ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் வழக்கறிஞர்கள் குழுவை நியமிப்பது. தேர்தல் நேரத்தில் எதிர்கொள்ளும் சட்டரீதியான உதவிகளை இந்த குழுவினர் மேற்கொள்வது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, இக்கூட்டத்தில் திமுகவின் கே.எம்.தண்டபாணி, அருள்மொழி, காங்கிரஸ் ஜெயபிரகாஷ், சிபிஐ ராதாகிருஷ்ணன், மதிமுக நந்தகோபால், திராவிடர் தமிழர் கட்சி வெண்மணி, புரட்சிகரஇளைஞர் முன்னணி ஆர்தர், சமத்துவ கழகம் கார்க்கி உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, மசேதுங், கோபால் சங்கர், ஜோதிக்குமார் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். முடிவில் ஆறுச்சாமி நன்றி கூறினார்.