election-2019

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு


நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கையை சென்னையில் மாநிலக்குழு அலுவலகத்தில் இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

 

விடுதலைப் போராட்ட களத்தில் உருவான இந்திய கம்யூனிச இயக்கம் தேச விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஒடுக்குமுறை, சிறைவாசம், சித்தரவதை அனைத்தையும் நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொண்டது. விடுதலைக்குப் பிறகும், 1964ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது முதல் இன்று வரை மக்கள் நலன் என்ற மைய புள்ளியிலிருந்து வழுவாமல் செயலாற்றி வருகிறது. எண்ணற்ற தோழர்களின் தியாகம், அர்ப்பணிப்பு, நேர்மையான அரசியல் நெறிகள், மனித குல விடுதலைக்கான மார்க்சிய தத்துவம், இந்திய முன்னேற்றத்துக்கான மாற்றுத் திட்டத்தோடு, இந்திய அரசியலில் இருள் அகற்றும் ஒளி விளக்குகளாக சுடர்விட்டு வருகிறது.

இடதுசாரிகளின் வலிமையைப் பொறுத்தே இந்திய அரசியலின் திசை வழி தீர்மானிக்கப்படும். வலதுசாரிகளின் வல்லாதிக்கத்தால், இந்திய மக்கள் அனைவரது வாழ்வும் சின்னாபின்னமாக சிதைக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது அவசியமாகிறது. காலத்தின் குரலாகவும், களப்பணியின் நாயகர்களாகவும் செயல்பட்டு வருகிற கம்யூனிஸ்ட்டுகள் சட்டங்களை உருவாக்குகிற மன்றங்களில் கணிசமாக இருப்பதன் மூலமே தேசத்தை பாதுகாக்க முடியும்.

17வது நாடாளுமன்ற தேர்தலை நாடு சந்திக்க உள்ளது. தேசத்தை இருண்ட காலம் நோக்கி அழைத்து செல்லும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணியைத் தோற்கடித்து, மதச்சார்பற்ற மாற்று அரசாங்கத்தை ஆட்சியில் அமர வைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சூளுரைத்துள்ளது. இத்தேர்தலில் நாடு முழுவதும் 71 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழமைக் கட்சிகளுடன் இணைந்து களம் காணுகிறது.

தேர்தலின் இரண்டாவது கட்டமான ஏப்ரல் 18ம் தேதி, தமிழகமும், புதுவையும் தேசத்தின் திசைவழியை தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றப் போகின்றன. கடந்த 5 ஆண்டு கால பாஜக ஆட்சியின் வேதனைகளை எண்ணிப் பார்த்து, தமிழகத்தை அவர்கள் தொடர்ந்து வஞ்சித்த வரலாற்றைக் நெஞ்சில் நிறுத்தி, மாற்றத்தை நோக்கி அடி எடுத்து வைக்க கிடைத்திட்ட வாய்ப்பாக இந்தத் தேர்தலை பயன்படுத்திட வேண்டும்.

தமிழக ஆட்சி அதிகாரத்தில் நூலிழையில் ஒட்டிக் கொண்டிருக்கும் அதிமுக, அதற்கு விலையாக மாநில உரிமைகளையும், மக்கள் நலன்களையும் காவுக் கொடுத்து, மத்திய ஆட்சியாளர்களிடம் சரணாகதி அடைந்து கிடக்கிறது. அதிமுக-பாஜக-பாமக-தேமுதிக என்ற இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணியை முறியடித்து, மத்தியில் மதச்சார்பற்ற அரசாங்கத்தை நிறுவி, இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இந்த உயரிய நோக்கோடும், தமிழக நலன் காக்கவும், திமுக, இடதுசாரிகள், மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியாக கம்பீரமாக உருவெடுத்து தேர்தல் களத்தில் மக்களின் ஆதரவு கோரி நிற்கின்றன.

மத்திய பாஜக அரசு கடந்த தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம், விலைவாசியைக் குறைப்போம், கருப்புப் பணத்தை கண்டுபிடித்து ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவோம், வேளாண் விளைபொருட்களுக்கு உற்பத்திச் செலவை விட ஒன்றரை மடங்கு தருவோம் என அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் தண்ணீர் மேல் கோலமாக தடம் அழிந்து விட்டன. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி போன்ற நடவடிக்கைகள் மூலம் முறைசாரா துறை, சிறு குறு நடுத்தர தொழில்கள் அனைத்தும் நொறுங்கியுள்ளன.

தலித்துகள், இசுலாமியர் மீதான கொலை வெறித்தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை அதிர்ச்சியளிக்கும் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக பெருமளவில் விவசாய நிலங்கள் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்படுகின்றன. விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்து வாடுகின்றனர். அனைவருக்கும் கல்வியும், ஆரோக்கியமும் என்பது வெற்று வார்த்தைகளாக நிறமிழந்து நிற்கின்றன. ரஃபேல் போர் விமான ஊழல் சந்தி சிரிக்கிறது. மொத்தத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளைத் தேர்தல் ஜூம்லா என்று கூச்சமில்லாமல் கூறி திரிகிறார்கள். ராணுவ வீரர்களின் தியாகத்தையும், விஞ்ஞானிகளின் சாதனைகளையும் வாக்குகளாக்கும் மோசமான நடைமுறையைப் பின்பற்றுகின்றனர்.

தமிழகத்தில் நீட் தேர்வை திணித்தன் மூலம், மாணவர்களின் மருத்துவ கனவுக்கு உலை வைத்தனர். வர்தா, ஒக்கி, கஜா புயல் நிவாரணமாக கேட்ட தொகையில் 5 சதவீதம் கூட கொடுக்க மறுத்தனர். தமிழகத்துக்குத் தர வேண்டிய பல நிதிகள் நிலுவையில் நிற்கின்றன. பின்னலாடை, கைத்தறி, விசைத்தறி முதல் பட்டாசு, தீப்பெட்டி தொழில் வரை மத்திய அரசின் கொள்கைகளால், பாராமுகத்தால் நலிந்து கொண்டிருக்கின்றன. தொழிலாளர்களும், சிறு தொழில் முனைவோரும் கடும் பாதிப்புக்குள்ளாகி தத்தளிக்கின்றனர். நடுத்தர மக்களும் கூட சங்கடங்களை சந்திக்க வேண்டியுள்ளது. காவிரி பாசனப் பகுதியை பாலைவனமாக்க திட்டமிட்ட சதி வேலைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

2004ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில், இடதுசாரி கட்சிகளின் சார்பில் 61 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். குறைந்தபட்ச பொது திட்டத்தின் அடிப்படையில் வெளியிலிருந்து இடதுசாரிகள் அளித்த ஆதரவுடன்தான் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது, இந்த வாய்ப்பை மக்களுக்கு சாதகமான சட்டங்களை இயற்ற பயன்படுத்தினர் இடதுசாரிகள் என்பது நேற்றைய நிஜமாகும். கிராமப்புற வேலை உறுதிச்சட்டம், வனஉரிமைச்சட்டம் 2006, தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005, குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க தனது பலத்தைக் கம்யூனிஸ்டுகள் பயன்படுத்தியது நினைவு கூரத்தக்கது.

தமிழக நிலை

2011-லிருந்து தமிழகத்தின் ஆளும் கட்சியாக அதிமுக இருந்து வருகிறது. மத்திய அரசின் கொள்கையோடு ஒத்திசைந்து மாநிலத்தில் அதிமுக அரசு பின்பற்றும் மக்கள் விரோத கொள்கையினால் தமிழக பொருளாதாரம் நிலைகுலைந்து போயிருக்கிறது. தொட்ட துறை அத்தனையிலும் லஞ்ச ஊழல் தலை விரித்தாடுகிறது. விளை நிலங்கள் வரைமுறையற்று கையகப்படுத்தப்படுகின்றன. வேறு வழியின்றி வீதிக்கு வந்து மக்கள் நடத்தும் நியாயமான போராட்டங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுகின்றன. நாசகர ஸ்டெர்லைட்டை ஆலையை மூடுவதற்குப் போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி, தடி கொண்டு தாக்கி 15 பேர் உயிரைப் பறித்திருக்கின்றனர் பொல்லாத ஆட்சியாளர்கள். பொள்ளாச்சி, துடியலூர் உட்பட பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளும், தலித், பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளும் எல்லையற்று நடந்து கொண்டிருக்கின்றன. காவல்துறையை தங்களது ஏவல் துறையாக அதிமுக அரசு பயன்படுத்துகிறது. சாக்கடையிலும், மலக்குழியிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் சிக்கி உயிரிழப்பது தமிழகத்தின் அவமானமாய் தொடர்கிறது. முதலீட்டாளர் மாநாடு என்ற சரிகை சுற்றிய ஜிகினா காகிதத்தைக் காட்டி, வேலையின்மையில் வெப்பத்தை மறைக்க முயல்கின்றனர். குடிநீர் விநியோகத்தையும் வெளிநாட்டு முதலாளிகளின் கொள்ளை லாப தாகத்திற்கு தாரை வார்க்கின்றனர். இயற்கை பேரிடர்களை எதிர்கொள்வதில் முழு தோல்வி அடைந்து நிற்கிறது அதிமுக அரசு. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு முற்றாக முடங்கிவிட்டது.

மக்களின் போர் வாளாகச் சுழன்று கேடயமாக காத்து நிற்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், ஆட்சியாளர்களின் அழிவுக் கொள்கைகளை முறியடிக்கவும் களத்தில் நின்று களைப்பில்லாமல் போராடி வருகிறது. தேசிய அளவிலும் தமிழக அளவிலும் முன்னுக்கு வந்த பிரச்சனைகள் அனைத்திலும் முன்கை எடுத்து போராடியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். மதுரை, கோவை தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஏனைய தொகுதிகளில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து களப்பணியாற்றுகிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

மக்கள் நலன் காக்க, தேசத்தின் நலம் காக்க மாற்றுத் திட்டத்தின் அடிப்படையில் அனைத்து முயற்சிகளும் எடுப்போம் என உறுதி கூறுகிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அகில இந்திய தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை இணைத்து தேர்தல் அறிக்கையாக மக்கள் முன் படைக்கிறோம்.

மக்கள் நலனையே உயிர் மூச்சாகக் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாற்றத்துக்கான மாற்றுக் கொள்கைகளின் அடிப்படையில மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் முழங்கும். 

·        ஜனநாயகம், கருத்துரிமை, மதச் சார்பின்மை, கூட்டாட்சி, பாலின சமத்துவம், பகுத்தறிவு சார்ந்த அறிவியல் அணுகுமுறை உள்ளிட்ட மாண்புகளுக்கு முக்கியத்துவம், மூட நம்பிக்கைகள் சார்ந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிரான சட்டம் இயற்றுதல்

·        மாநில சுயாட்சியை மையப்படுத்தி, அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்க மத்திய மாநில உறவுகள் சீரமைப்பு, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் மற்றும் நிதி ஆதாரம்; கலைக்கப்பட்ட திட்டக்குழு, முடக்கப்பட்ட மாநிலங்களிடை மன்றம், தேசிய வளர்ச்சி கவுன்சில் ஆகிய அமைப்புகளை மீட்டெடுத்தல்

·        வேலை செய்யும் உரிமையை அடிப்படை உரிமையாக்குதல்; வேலை கிடைக்கும் வரை வேலையில்லா கால நிவாரணத் தொகை வழங்குதல், மத்திய, மாநில அரசுகளில் அனைத்துத்துறை அலுவலகங்களிலும் உள்ள காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய வற்புறுத்துவது.

·        கார்ப்பரேட்டுகள், பில்லியன் கோடீஸ்வரர்கள் மீது கூடுதல் வரி விதிப்பு (நேர்முக வரி அதிகரிப்பு) என்கிற முறையில் மாற்றம்; செல்வ வரியை மீண்டும் கொணர்தல்

·        புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கக் கூடிய வளர்ச்சிப் பாதை, உள்நாட்டு தொழிலைப் பாதுகாத்து, உள்நாட்டு சந்தையை பலப்படுத்தி, மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பது

·        கல்விக்கு ஜிடிபியில் 6 சதவிகிதம் ஒதுக்கீடு, ஆரோக்கியம் (Health) என்பதை அடிப்படை உரிமையாக்கி  5 சதவிகிதம் ஒதுக்கீடு;

·        அத்தியாவசிய பொருட்களின் முன்பேர வர்த்தகத்தைத் தடை செய்தல், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்தல் 

·        கல்வி, ஆரோக்கியம், குடியிருப்பு போன்ற அடிப்படை வசதிகள் அனைவருக்கும் கிடைப்பதற்கு ஏற்பாடு,

·        நீட் தேர்வு முற்றாக ரத்து

·        அனைத்து விவசாயக் கடன்களையும் ரத்து செய்வது, வேளாண் துறைக்குக் கூடுதல் அரசு முதலீடு, நியாய விலை, அரசு கொள்முதல், விவசாய கடன் எளிதில் கிடைத்தல், எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தல்

·        தொழிலாளர் நல சட்டங்களை பலப்படுத்துதல், சிறு குறு நடுத்தர தொழில்கள் பாதுகாப்பு, பொதுத்துறையை வலுப்படுத்துதல், பன்னாட்டு நிறுவனங்கள் இந்நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவதை உறுதி செய்தல்

·        இயற்கை வளங்களை அரசின் கட்டுப்பாட்டில் வைத்தல், கார்ப்பரேட்டுகளின் வாரா கடன் பட்டியலை வெளியிடுதல், கடன்களை வசூலித்தல், தேர்தல் பத்திர முறையை ரத்து செய்தல், ஊழல் தடுப்பு நடவடிக்கைகள், ரஃபேல் போர் விமான ஊழல் பிரச்னையில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு உத்தரவிடுதல்

·        அயல்நாடுகளிலும் அண்டை மாநிலங்களிலும் உள்ள தமிழர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளின் தலையீடு செய்ய தனி துறை தமிழகத்தில் உருவாக்குதல்

·        ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் பெறக் கூடிய விதத்தில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தத்தை அமலாக்குதல், அரசியல் கட்சிகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் மக்களுக்கு பதில் சொல்லும் பொறுப்பை வலுப்படுத்துதல்

·        ஆளுநர், மத்திய புலனாய்வு துறை, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அரசியல் சாசன படி நிறுவப்பட்ட அமைப்புகளின் சுயேச்சை தன்மையை மீட்டெடுத்தல், அரசியல் சாசனம் சார்ந்த பல்வேறு நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உள்ள மதவெறியாளர்களை அகற்றி தகுதியானவர்களை நியமித்தல்

·        பெண்கள், குழந்தைகள், தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சமூக, பொருளாதார தளங்களில் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டவர்களின் நலனைப் பேணுதல்; முதியோர் பாதுகாப்புக்கு மாதம் ரூ.6000 உதவித் தொகை உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடு, இயற்கை மரணங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கும் காப்பீடு திட்டத்தை நிறைவேற்றுவது.

·        நிலங்களை வரைமுறையற்று கையகப்படுத்தும் கொடுமைக்கும், குடியிருப்புகளை விட்டு மக்களை வெளியேற்றும் அவல நிலைக்கும் முற்றுப்புள்ளி வைத்து, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட மக்கள் திரளைப் பாதுகாக்கும் விதத்தில் நிலம் குறித்த கொள்கையும், சுற்றுச்சூழல் கொள்கையும் உருவாக்குதல்

·        சாதி ஒழிப்பு, சமூக ஒடுக்குமுறை ஒழிப்பு போன்ற நடவடிக்கைகளுக்கான புறச்சூழலை ஏற்படுத்துதல், சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவித்தல், இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்துதல்

·        கிராமப்புற உழைப்பாளி மக்களின் நலனைப் பாதுகாத்தல், ஊரக வேலை உறுதி சட்டத்தை விரிவுபடுத்தி உறுதியாக அமல்படுத்துதல், நிலச்சீர்திருத்தத்தை அமல்படுத்தி நிலமற்ற கிராமப்புற வேளாண் குடும்பங்களுக்கு நில விநியோகம்

·        அனைத்து மக்களுக்கும் அரசு நலத் திட்ட பலன்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் சென்று சேர, நடவடிக்கை, குடிமை சாசனத்தை சட்டபூர்வமாக்குதல் 

·        ஆசிரியர் – அரசு ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தைக் கொண்டு வருதல்

·        இ.பி.கோ உள்ளிட்ட சட்டங்களில் திருத்தம் செய்து மரண தண்டனையை ரத்து செய்தல்

·        ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்ய வற்புறுத்துவது.

கீழ்க்கண்ட கோரிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

வலுவாக முன்னெடுக்கும்.

மாநில உரிமைகள்

·        ஆளுநர் நியமன முறை, ஆளுநர்களின் தற்போதைய செயல்பாட்டை பரிசீலிப்பது; மாநில அரசு அனுப்பும் 3 பெயர்களில் ஒருவரை ஆளுநராகக் குடியரசு தலைவர் நியமிக்க வழிவகை செய்வது

·        திட்டக்குழுவை மீண்டும் அமைப்பது, திட்டக்குழு அமைப்பில் மாநிலங்களுக்கு உரிய பங்கை உறுதிப்படுத்துவது; தேசிய வளர்ச்சி கழகத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து அளித்து, திட்டக்குழுவை அதன் நிர்வாக அங்கமாக மாற்றுதல்

·        கல்வித் துறையை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்குக் கொண்டு வருவது; பொதுப்பட்டியல், மாநிலப்பட்டியல் இரண்டிலும் இல்லாத எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தையும் மாநிலங்களுக்கு வழங்குவது.

·        15ம் நிதி ஆணையத்தின் பணி வரம்புகளும், வரையறைகளும் மாற்றி அமைக்கப்படுவது; மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து, மத்திய அரசு பெறுகின்ற செஸ், சர்சார்ஜ் உள்ளிட்ட வரி வருவாயில் 50 விழுக்காடு மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்வது, மத்திய அரசு முன்மொழியும் திட்டங்களின் முழுச்செலவையும் மத்திய அரசே ஏற்பது.

·        தமிழகத்துக்குத் வர வேண்டிய நிலுவை தொகைகளை உடனடியாக வழங்க வற்புறுத்துவது

·        சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) சட்டத்தை மறு பரிசீலனைக்கு உட்படுத்துவது அந்தந்த மாநிலங்களின் வரி கொள்கைக்கான வாய்ப்பை விரிவுபடுத்தப்படுவது

·        மத்திய அரசின் வரி கொள்கையில் கூடுதலான நிதி திரட்டல், வருமான வரி, சொத்துவரி, வாரிசு வரி போன்ற நேர்முக வரியினங்கள் மூலம் திரட்டுவதற்கு நிர்ப்பந்தங்கள் செய்வது; கார்ப்பரேட்டுகளுக்கும், பெரும் தொழில் நிறுவனங்களிடமிருந்து வரியும், வங்கிக் கடனும் உறுதியாக வசூல் செய்யப்படுவது; வரி ஏய்ப்பு செய்யும் பெரு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது

·        ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள், பெட்ரோல் - டீசலுக்கான கலால் வரி விகிதங்கள் ஏழை எளிய மக்களை அதிகம் பாதிக்கும் மறைமுக வரிகளாக இருப்பதால், இவற்றின் சுமையைக் குறைப்பது 

தமிழ்மொழி வளர்ச்சி

·        தாய்மொழிக் கல்வியை கட்டாயமாக்குவது 

·        தமிழை பயிற்று மொழியாகவும், வழக்காடு, வழிபாட்டு மொழியாகவும் நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுப்பது; தமிழ் வழியில் பயில்வோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது; தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் அலுவல்மொழியாக இருக்க நடவடிக்கை எடுப்பது

·        கணினி தமிழ் முன்னெடுப்புகளை வலுவாக்குவது, தமிழக அரசின் அதிகாரபூர்வ இணைய தள செய்திகள் தமிழில் இருப்பதை உறுதி செய்வது

·        மாநிலங்கள் மீது இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பைத் தடுப்பது, அனைத்து மொழிகளுக்கும் சம அந்தஸ்தை வலியுறுத்துவது

·        மத்திய திட்டங்களை தமிழ்நாட்டில் தமிழ்பெயரில் அமலாக்குவது.

ஊழல் ஒழிப்பு

·        உயர்மட்ட ஊழலை ஒழிக்க வலுப்படுத்தப்பட்ட லோக்பால், லோக் ஆயுக்தா சட்டம் அமல்படுத்துவது; அரசுக்கும் தனியாருக்கும் இடையே ஏற்படும் அனைத்து ஒப்பந்தகளையும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் இதன் வரையறைக்குள் கொண்டு வருவது; தனியார் நிதி நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களையும், அரசு-தனியார் கூட்டுத் திட்டங்களையும் லோக்பால் சட்ட வரம்புக்குள் கொண்டு வருவது மற்றும் ஒரு நிறுவனத்தின் உள்ளிருந்தே ஊழலை அம்பலப்படுத்துபவர்களைப் பாதுகாக்கும் சட்டம் (Whistleblowers Protection Act) போன்ற சட்டங்களின் கீழ் கொண்டு வருவது;

·        அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சேர்க்கப்பட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய்வதோடு, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் தங்களது சொத்து விபரத்தை ஒவ்வொரு ஆண்டும் பகிரங்கமாக வெளியிடுவது

·        ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட விதம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடல்

·        இயற்கை வளங்களை அரசின் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது, கனிம வளக்கொள்ளையில் ஈடுபட்டவர்களின் சொத்தை முடக்கி, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, ககன்தீப் சிங் பேடி மற்றும் சகாயம் ஐ.ஏ.எஸ். அறிக்கையை வெளியிட்டு, மேல் நடவடிக்கை எடுப்பது

·        தமிழக அமைச்சர்கள் மீது உள்ள ஊழல் வழக்குகள், ரெய்டுகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்வது

·        அரசுப்பணி நியமனங்கள், ஊழியர்கள் பணியிட மாற்றம் உள்ளிட்ட அனைத்தும் ஊழலற்று நடைபெறுவது

நதிநீர் பிரச்சனைகள் மற்றும் பாசனம்

·        தமிழ்நாட்டின் வாழ்வாதாரமாக விளங்கும் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித்தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது, காவிரியின் குறுக்கே மேகதாட்டு, இராசிமணல் ஆகிய இடங்களில் தடுப்பு அணை கட்ட திட்டமிடும் கர்நாடக அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்துவது

·        முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி உயரத்திற்கு தண்ணீரைத் தேக்கலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுப்பது; பேபி அணையை கட்டும் பணியை துவக்குவது; நெல்லை மாவட்டம் செண்பகவல்லி அணையை புனரமைப்பது.

·        அனைத்துக் கட்சியினர் ஒருங்கிணைப்போடு நதிநீர் உள்ளிட்ட பிரச்சனைகளில் தமிழகத்தின் உரிமைகளைப் பெற்றிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே நேரத்தில், அண்டை மாநிலங்களோடும், மக்களோடும் பரஸ்பர நல்லுறவைப் பேணுவது

·        காவிரி டெல்டா பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஷேல் எரிவாயு, பெட்ரோலிய ரசாயன மண்டலம் உள்ளிட்ட திட்டங்களை ரத்து செய்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வைப்பது

·        அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை விரைந்து முடிப்பது, காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு திட்டம், தாமிரபரணி - கருமேனியாறு இணைப்பு போன்ற திட்டங்களை குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்றுவது

·        நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதைத் தடுத்திட மழை நீர் சேகரிப்பு, குளங்கள், குட்டைகள் வெட்டுவது, பாசன, வடிகால் உள்ளிட்ட நீர்நிலைகளைத் தூர் வாருவது போன்ற பல்முனை நடவடிக்கைகளை மேற்கொள்வது, இதற்கு உரிய நிதியை மத்திய அரசிடம் கோரி பெறுவது.

இலங்கை தமிழர்கள் பிரச்சனை

·        இலங்கையில் தமிழ் மக்களுக்கு சம உரிமைகள், தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து, இலங்கை தமிழ் மக்களிடம் பறிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் நிலம் மீள் ஒப்படைப்பு செய்திட மத்திய அரசு ராஜிய ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது

·        இலங்கை உள்நாட்டு போரின் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களை விசாரிக்க இலங்கை அரசு சுயேச்சையான நம்பகத்தன்மையுடனான உயர்மட்ட விசாரணை நடத்த வலியுறுத்துவது

·        தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த்துவது

ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு

·        மக்கள் இயக்கங்கள், வெகுமக்கள் போராட்டங்களுக்கு முறையாகவும், பாகுபாடு இன்றியும் அனுமதி கிடைத்திட, மாற்றுக் கருத்துக்களை, படைப்பு சுதந்திரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது, காலனிய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தேச துரோக சட்டத்தை மாற்றி அமைத்து, அரசாங்கத்தின் மீதான விமர்சனத்தை தேச விரோத, தேசத் துரோக செயல்போல சித்தரிப்பதைத் தடுப்பது

·        ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட, அரசின் முடிவுகளை விமர்சிக்கும், ஊழல்களை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்கள் பழிவாங்கப்படாமல் தடுத்திட, ஊடகத்துறையினரின் வாழ்வாதாரக் கோரிக்கைகள் நிறைவேறிட நடவடிக்கைகள் எடுப்பது

·        அரசியல் கட்சியினர், பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு மக்கள் உரிமை போராட்டங்களில் பங்கேற்றோர் மீது புனையப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய்வது

·        தகவல் உரிமை சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வருவதை உறுதி செய்வது

சட்டம் - ஒழுங்கு

·        தமிழகத்தில் கொலை, கொள்ளை, பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், மாற்றுப்பாலினத்தவர் உள்ளிட்டோர் மீதான பாலியல் குற்றங்கள், உரிமை மீறல், வழிப்பறி, நகைப் பறிப்பு போன்றவற்றைத் தடுக்கவும், சீரான சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்தவும் உறுதியான நடவடிக்கைகள், சமூக விரோத சக்திகளை ஒடுக்குவது, கட்டப் பஞ்சாயத்து, கந்துவட்டி, கடத்தல் போன்ற குற்ற நடவடிக்கைகளை முற்றாக ஒழித்து பொதுமக்கள் அச்சமின்றி கண்ணியமாக வாழ்வதை உறுதி செய்வது

·        காவல்நிலைய சித்ரவதைகள், லாக்கப் மரணங்கள், மனித உரிமை மீறல் மற்றும் அரசியல் தலையீடுகளைத் தடுத்து நிறுத்துவது, அத்துமீறல்களில் ஈடுபடும், தவறிழைக்கும் காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை துரிதமாக மேற்கொள்வது 

·        பெண்கள் மீதான பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில் அத்தகைய காவலர்கள் மீது ஐ.பி.சி. 166 ஏ பிரிவின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வது

·        காவல்துறையினருக்கு சங்கம் வைக்கும் உரிமை மற்றும் 8 மணி நேரம் மட்டுமே பணி என்பதை உறுதி செய்வது

தேர்தல் சீர்திருத்தம்

·        ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கும் பண ஆதிக்கம் தேர்தலை கேலிக்கூத்தாக்குவதை தடுத்து, ஜனநாயக அடிப்படையில் மக்கள் வாக்களிப்பதை உறுதி செய்வது, அனைத்து வாக்காளர்களது வாக்குகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தத்தை வலியுறுத்துவது

·        நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு குறைந்தபட்சம் 33 சதவிகித இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நிறைவேற்றுவது

·        உயர்மட்ட ஊழலுக்கு வழி வகுக்கும் தேர்தல் பத்திரம் மூலமான நன்கொடையைத் தடுக்க விதி உருவாக்குவது, அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட்டுகள் நன்கொடை அளிப்பதைத் தடை செய்வது

·        அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவினங்களுக்கு உச்சவரம்பு விதிப்பது

·        தேர்தல் ஆணையர்கள், ஓய்வு பெற்ற பின், அரசு பொறுப்புகளுக்கோ, ஆளுநர், சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினராகவோ தேர்வு செய்யப்படுவதை சட்ட ரீதியாகத் தடுப்பது

நீதித்துறை

·        நீதித்துறையில் நடக்கும் நியமனம், இடமாறுதல், நீதிபதிகள் மீது எழும் குற்றச்சாட்டுகளை விசாரித்தல் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கவனிக்க சுயேச்சையான தேசிய நீதித்துறை ஆணையத்தை உருவாக்குதல்

·        நீதிமன்ற அவமதிப்பு என்பதன் வரையறையைப் பொருத்தமாக மாற்றுவது; மாற்றுக்கருத்துக்களையும், விமர்சனங்களையும் அவமதிப்பு என்ற பெயரால் ஒடுக்குவதைத் தவிர்ப்பது

·        நீதித்துறையின் அனைத்து மட்டங்களிலும் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஏற்ப உரிய பிரதிநிதித்துவம் இருப்பதை உறுதி செய்வது

·        சாமானிய மக்களும் செலவழிக்கக் கூடிய கட்டணத்தில் விரைவான நீதி கிடைப்பதை உறுதி செய்வது

பொதுத்துறை

·        நவரத்தின பொதுத் துறை நிறுவனங்கள் முழுமையாக அரசின் கட்டுப்பாட்டிலேயே நீடிப்பது, அந்நிறுவனங்களை பலப்படுத்தப்படுவது; லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையை தடுப்பது, நட்டத்தில் இயங்குகின்ற, சமூக நோக்கோடு செயல்படுகிற பொதுத் துறை நிறுவனங்கள் லாபகரமாக இயங்குவதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவது; ரயில்வே தனியார்மயத்தை ரத்து செய்வது

·        வங்கிகளில் வராக்கடன் வைத்துள்ள கார்ப்பரேட்டுகளின் பட்டியலை வெளியிடுவது, அவர்களது பாக்கியை முழுமையாக வசூல் செய்து பொதுத்துறை வங்கிகளைப் பாதுகாப்பது

·        வங்கி குறைந்தபட்ச கையிருப்பிற்கான தண்டத் தொகையை ரத்து செய்வது

·        அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்கு விற்பனை தடுத்து நிறுத்தப்படுவது, அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நான்கும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே கழகமாக செயல்பட ஆவன செய்வது

·        எல்.ஐ.சி பிரிமியங்கள், உடல் நல காப்பீடு மற்றும் மூன்றாம் நபர் காப்பீடு பிரிமியங்கள் மீதான ஜி.எஸ்.டி ரத்து செய்யப்பட வலியுறுத்துவது

·        பி.எஸ்.என்.எல் நிறுவனம் முழுமையான அரசு நிறுவனமாக தொடர்வது, பி.எஸ்.என்.எல் க்கு 4 ஜி சேவை, கட்டமைப்பு வளர்ச்சிக்கான அனுமதிகளில் உள்ள உள்நோக்கத்துடனான தாமதங்கள் முற்றிலுமாக களையப்பட்டு அதன் வளர்ச்சி முழுமையாக உறுதி செய்யப்படுவது

இயற்கை பேரிடர்

·        தொடர்ந்து ஏற்பட்டு வரும் இயற்கை இடர்பாடுகளால், இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் இழப்பை முழுமையாக ஈடு செய்யும் வகையில் நிவாரண உதவிகள் வழங்கிட “இயற்கை பேரிடர் நிவாரண உதவித் திட்டம்” வகுப்பது, நிரந்தர பேரிடர் தடுப்பு திட்டம் உருவாக்கப்படுவது, நிவாரணப் பணிகளில் பெண்கள், குழந்தைகளின் சிறப்புத் தேவைகளை கருத்தில் கொள்வது

·        பேரிடரைத் தடுக்கும் நோக்குடன் பெரு நகரத்தின் உள் கட்டமைப்பு வசதிகளை முறையாகப் பராமரித்தல், ஏரி போன்ற நீர்நிலைகளைத் தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துவது நீர்நிலைகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பது, இதனால் பாதிக்கப்படும் ஏழை-எளிய மக்களுக்குப் பொருத்தமான மாற்று இடம் வழங்குதல், பேரிடர் மீட்பில் நகர பகுதிகளுக்கு கிடைக்கும் அதே மீட்பு பணிகள் கிராமப் புறங்களையும் உடனே சென்றடைய நடவடிக்கை எடுத்தல்

·        பேரிடர் மேலாண்மையில் மீட்பு (rescue), நிவாரணம் (relief), மறுவாழ்வு (rehabilitation) ஆகியவை முதன்மை படுத்தப்படுவதோடு, மட்டுப்படுத்துதல் (mitigation) முயற்சிகளுக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பது. முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்து தரப்பு-பகுதி மக்களை சென்றடைய வேண்டும். பாராபட்சமற்ற அணுகுமுறை மிக அவசியம்.

·        பேரிடர்களை எதிர்கொள்ள தற்போது உள்ள (National Disaster Management Fund) தேசிய பேரிடர் மீட்பு குழுவின் செயல்பாடுகளை, உள்ளூர் மக்களின் இணைப்புடன் சீர்படுத்துவது, மாநில அளவில் அதற்கான தனி துறையும், நிதிஒதுக்கீடும் உருவாக்குவது, பேரிடர் மேலாண்மையை மேற்கொள்ள அனைத்து கட்சிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளடக்கிய குழு ஒன்றினை உருவாக்குவது

தொழில் வளர்ச்சி

·        தமிழகத் தொழில் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் சிறு குறு நடுத்தர தொழில்களை வளர்ப்பதும், பாதுகாப்பதும் அத்தியாவசியமானது. உயர் பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி.யினால் இவை நலிந்து கிடக்கின்றன. சிறு குறு தொழிலுக்கு முன்னுரிமை அளித்தல், கடந்த காலத்தைப் போலவே சில குறிப்பிட்ட தொழில்களின் உற்பத்தியை சிறு தொழில்களுக்காக ஒதுக்குதல், தடையற்ற மின்சாரம், இத்தொழில்களுக்கு நிரந்தரமாக உள்நாட்டு, வெளிநாட்டு சந்தைகளை பெற்றுத் தருவது, அரசு மற்றும் அரசுசார் நிறுவனங்கள் 25 சதவிகிதம் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விதியை உறுதியாக அமலாக்குவது 

·        குறுந்தொழில் பேட்டைகள், மூலப்பொருள் வங்கி அமைத்தல், சொத்துப் பிணையம் இன்றி கடன் உதவி வழங்குதல் மற்றும் வங்கிக் கடனைத் திருப்பி செலுத்தும் கால அவகாசத்தை நீட்டித் தர நடவடிக்கைகள் எடுப்பது

·        பெருந்தொழில் முதலீட்டாளர்களிடம் செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இங்குள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்வதற்கான திட்டத்தை கட்டாயமாக்கி செயல்படுத்துவது

·        உள்நாட்டு, வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வது

·        விவசாயத்திற்கு அடுத்த இடத்தைப் பெற்றுள்ள ஜவுளி தொழில் நெருக்கடிகளுக்கு தீர்வு காணுதல், பட்டாசு, தீப்பெட்டி, பின்னலாடை, கைத்தறி, விசைத்தறி, ரப்பர், முந்திரி, தோல் பதனிடுதல் உள்ளிட்ட தொழில்கள் நசிவைத் தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது, ஜி.எஸ்.டி.யைக் குறைத்து, சிறு குறு நடுத்தர தொழில்களைப் பாதுகாப்பதற்கு குரல் கொடுப்பது

·        சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை ரத்து செய்தல்; உள்நாட்டு கார்ப்பரேட் சில்லரை வர்த்தகத்தை முறைப்படுத்துதல்

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன்

·        விவசாயத்தை மேம்படுத்தவும், அதை லாபகரமான தொழிலாக மாற்றவும், கிராமப்புறங்களில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவும், கிராமப்புறங்களில் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்குமான கட்டமைப்புகளை உருவாக்கவும் நடவடிக்கைகள் எடுப்பது

·        அனைத்து விளைபொருட்களுக்கும் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில் அடக்க விலையோடு 50 விழுக்காடு சேர்த்து விலை தீர்மானிப்பது, விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் மற்றும் தானியங்களை அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் முழுமையாகக் கொள்முதல் செய்வது

·        கரும்பு விவசாயிகளுக்கு தனியார் ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை சுமார் ரூ. 1200 கோடியை வட்டியுடன் வழங்கிட உறுதியான நடவடிக்கை மேற்கொள்வது

·        உயர் அழுத்த மின் கோபுரங்கள் விளை நிலங்களில் அமைப்பதை நிறுத்தி, மாற்று வழியான புதை வடங்கள் கொண்டு, சாலையோரங்களில் பதித்து நிறைவேற்றுவது, ஏற்கனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலத்தின் மதிப்பு குறைந்ததற்கான இழப்பீடும், வருட வாடகையும் வழங்க வலியுறுத்துவது

·

·        இயற்கை முறை விவசாயத்திற்கு உரிய மானியம் வழங்கி ஊக்கமளிப்பது, மரபணு மாற்ற பயிர்களுக்கும், அதன் சோதனைக்கும் தடை விதிப்பது

·        தற்போதைய வேளாண் நெருக்கடியில் கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்வது, தனியாரிடம் பெற்ற கடன்களைத் தீர்க்க ஆணையம் அமைத்து நடவடிக்கை எடுப்பது.

·        அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பம் மற்றும் அதை பயன்படுத்துவதற்கான பயிற்சி ஆகியவற்றை விவசாயிகள் பெறுவதற்கு உரிய நிதி ஏற்பாடுகளை அரசு செய்யக் கோருவது  

·        விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை மாற்றியமைக்க வலியுறுத்துவது

·        பால் கொள்முதல்விலையை தீவன விலை உயர்வுக்கு ஏற்றவாறு உயர்த்தி அறிவிப்பது, கறிக்கோழி உற்பத்தியாளர்களுக்கு கோழி வளர்ப்பு கூலியை உயர்த்திக் கொடுப்பது

இதர கிராமப்புறத் தொழில்கள்

·        கால்நடை, கோழி வளர்ப்பு, கைவினைப்பொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட அனைத்து கிராமப்புறத் தொழில்களுக்கும் உரிய நிதி, கடன் மற்றும் மானியங்களை அரசு அளித்திடுவதை உறுதிப்படுத்துவது

நிலம்

·        விவசாய விளைநிலங்கள் வரைமுறையற்று வீட்டு மனைகளாகவும், விவசாயம் அல்லாத பணிகளுக்கும் மாற்றப்படுவதை ஒழுங்குபடுத்த தேவையான சட்டம் இயற்றுவது

·        2013 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மீள்பார்வைக்கு உட்படுத்தி விவசாயிகளின் ஒப்புதல் இன்றி நிலம் கையகப்படுத்தப்படுவதைத் தடுப்பது, ஒப்புதலுடன் கையகப்படுத்தும் போது விவசாயிகள், விவசாய தொழிலாளர் நலன் பாதுகாக்கப்படுவது, உரிய இழப்பீடு வழங்குவது, அங்கு அமைக்கப்படும் தொழிற்சாலையில் 10 விழுக்காடு பங்குகளை அவர்களுக்கு வழங்குவது, அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வேலையும், நிலத்தை நம்பி வாழ்ந்த விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் குத்தகை விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அளித்திடவும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்வது, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கடந்த காலத்தில் கொடுத்த இத்தகைய வாக்குறுதிகளை நிறைவேற்ற தகுந்த நடவடிக்கைகள் எடுப்பது

·        தமிழகத்தில் நில உச்சவரம்பு சட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப் படுத்தி, உபரி நிலங்கள் மற்றும் தரிசு நிலங்களை நிலமற்ற ஏழை, எளிய விவசாயத் தொழிலாளர் குடும்பத்திற்கு தலா 2 ஏக்கர் வழங்க தேவையான நடவடிக்கை எடுப்பது; தலித், பழங்குடியினர், மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிப்பது; பெண்கள் பெயரில் தனிப்பட்டா மற்றும் கூட்டுப்பட்டா வழங்குவது

·        அனைத்து சமய நிறுவன நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்குவது, இந்நிலங்களில் நீண்ட காலமாக சாகுபடி செய்து வரும் நிலமற்ற ஏழை குத்தகைதாரர்களுக்கும், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கும் அந்நிலங்களை சொந்தமாக்குவதற்கான வழிமுறைகள் மேற்கொள்வது,

·        வன விலங்குகளால் ஏற்படும் சாகுபடி நஷ்டத்திற்கு முழு இழப்பீடு வழங்கிட வலியுறுத்துவது

·        தமிழகத்தில் எஸ்டேட் நிலங்களில் நீண்ட காலமாக குத்தகை சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்கிட நடவடிக்கை எடுப்பது

·        குமரி, நீலகிரி மாவட்டங்களில் அமலாக்கப்பட்டு வரும் “தனியார் வனப்பாதுகாப்புச் சட்டம்” திருத்தப்பட்டு, விவசாயிகளுக்கு நில உரிமை வழங்குவது 

நகர்ப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த

·        தற்போது திணிக்கப்பட்டுள்ள சொத்துவரி சீராய்வினை விலக்கிக் கொண்டு நியாயமான அளவுகோல்களை உருவாக்குவது, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சி மன்றங்களில் விவாதித்து, மக்கள் கருத்தறிந்து, நியாயமான வரி நிர்ணயம் செய்வது

·        நகர்ப்புற ஏழைகள், குடிசைவாழ் மக்கள் மற்றும் சாதாரண நடுத்தர மக்களின் வாழ்வாதாரத் தேவைகளை மையமாக வைத்து, நகர்ப்புற மேம்பாட்டுக் கொள்கைகள், நகர்ப்புற வடிவமைப்புத் திட்டங்களை மேற்கொள்வது, நகரங்களின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, பெருகி வரும் சுகாதாரக் கேடுகளை போக்குவதற்கும், மேம்பட்ட பாதாள சாக்கடை வசதி, நகர்ப்புற நீர்நிலைகளை பாதுகாத்து, அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, முறையான திடக்கழிவு மேலாண்மை போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது

·        நகர்ப்புற சீர்திருத்தங்கள், திட்டங்களை மேற்கொள்வதில் ஜனநாயக ரீதியான விவாதம், மக்கள் பங்கேற்பு, வெளிப்படைத் தன்மை போன்ற நெறிகளை கடைபிடிக்க வலியுறுத்துவது

·        இயற்கை பேரிடர் போல அரசின் கொள்கைகளும், நடவடிக்கைகளும் உருவாக்கும் செயற்கை பேரிடர் காரணமாக பாதிப்புக்குள்ளாகும் ஏழை-எளிய மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவது

உள்ளாட்சி நிர்வாகம்

·        உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்த வலியுறுத்துவது

·        உள்ளாட்சி அமைப்புகள் சுயமாக செயல்படும் வகையில் கூடுதல் நிதி, அதிகாரம் மற்றும் ஊழியர்கள், வெளிப்படை தன்மையுடன் செயல்பட கிராம சபை கூட்டங்கள் முறையாக நடத்தப்பட்டு திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து மக்களின் ஒப்புதல் பெறப்படுவது, நகர்ப்புறங்களில் வார்டு அடிப்படையிலான மக்கள் கூட்டங்கள் நடத்துவதைக் கட்டாயமாக்குவது.

·        உள்ளாட்சி நிர்வாகங்களில் நடைபெறும் ஊழல்கள், முறைகேடுகள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தனியான ஆணையம் அமைப்பது

·        கிராமப்புற - நகர்ப்புற சிறிய நடுத்தர கட்டுமான பணிகளை காண்டிராக்டுக்கு மட்டும் விடாமல் மக்கள் பங்களிப்போடு, வாய்ப்புள்ள இடங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கிட, உள்ளாட்சி அமைப்புகள் மூலமே நிறைவேற்றப்படுவது

குடியிருப்பு மற்றும் மனைப்பட்டா

·        கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் வீட்டுமனைப் பட்டா இல்லாத அனைவருக்கும் பட்டா வழங்குவதை எளிமைப்படுத்துவது, ஏற்கனவே பலவகை புறம்போக்கு இடங்களில் குடியிருப்போருக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்குவது

·        சொந்த வீடு இல்லாத அனைத்து ஏழை குடும்பங்களுக்கும், கேரளத்தைப் போன்று இலவச வீடு கட்டித் தருவது

·        சென்னை உள்ளிட்ட மாநகரங்கள் மற்றும் இதர நகரங்களில் வாழும் குடிசைப் பகுதி மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுவது தடுக்கப்பட்டு அவர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படுவது

·        மொத்தத்தில் குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க குரல் கொடுப்பது

உணவு பாதுகாப்பு

·        ரேசன் பொருள் மானியங்களுக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நேரடி பணப்பட்டுவாடா முறையை ரத்து செய்து, எரிவாயு உள்ளிட்ட பொருட்களைக் கடந்த காலம் போல மானிய விலையிலேயே வழங்குவது; பொதுவிநியோக முறையை வலுப்படுத்தி, அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கிடைப்பதை உறுதிப்படுத்துதல்

·        வேலை தேடி இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்த பெண்கள் போன்ற நலிந்த பிரிவினருக்கு விலையில்லா உணவு உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள்

நீராதாரம் மற்றும் நீர்நிலை பராமரிப்பு

·        முறையான தேசிய தண்ணீர் கொள்கை உருவாக்கப்பட்டு, தண்ணீர் விற்பனைப் பொருள் என்றிருக்கும் நிலையை மாற்றி, அரிதான பொது சொத்தாக அறிவிப்பது; அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை ஏற்பாடு செய்வது

·        தண்ணீரை படிப்படியாக தனியார்மயமாக்கப்படுவதை தடுத்து நிறுத்துவது

·        நிலத்தடி நீர் வரைமுறையற்று உறிஞ்சப்படுவதைத் தடுப்பது; நீராதாரத்தைப் பெருக்க பல்முனை நடவடிக்கைகள் எடுப்பது

·        நீர்நிலை பராமரிப்புக்குப் பொருத்தமான திட்டங்களை உருவாக்குவது

·        மழைநீர் சேகரிப்பு திட்டத்தை ஊக்குவிப்பது

கல்வி

·        நீட் தேர்வுக்கு விதிவிலக்கு வற்புறுத்துவது, இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற்றிட போராடுவது; உயர் நிலை கல்விக்கு பிறகு மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் படிப்புகளுக்கான சேர்க்கை வழிமுறைகளை உருவாக்கும் பொறுப்பை மாநில அரசுகளிடம் விடுவது

·        மனித நேயம், மத நல்லிணக்கம், ஜனநாயகம், சமூக நீதி, நாட்டுப்பற்று, பாலியல் சமத்துவம் ஆகிய உயர்ந்த விழுமியங்களை மாணவ சமூகத்திடம் உருவாக்கும் வகையில் பாடத்திட்டங்களிலும், ஆசிரியர் பயிற்சியிலும் உரிய மாற்றங்கள் செய்வது 

·        ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தாய்மொழி வழி கல்விக்கு ஊக்கமளிப்பது; ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்றுக் கொடுப்பது

·        கல்வி பெறும் உரிமைச்சட்டம் 2022க்குள் அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைக்கு வருவது; அதன் படி, தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு ஒதுக்கீட்டை ஒற்றைச்சாளர முறையில் அரசே நிரப்ப தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது; 3 முதல் 18 வயதான அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமான தரமுடைய முன்பருவக் கல்வியும், மேல்நிலைக் கல்வியும் அளிக்கப்படுவது, ஆரோக்கியமான குழந்தைப் பருவத்தை உறுதி செய்திட தரமான, ஊட்டச்சத்துள்ள உணவு 2 வேளை வழங்குவது

·        மத்திய-மாநில அரசுகள் மேற்கொள்ளும் கல்விக்கான செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 6 சதவிகிதமாக அதிகரிக்கப்படுவது

·        அருகமை பள்ளிகளை முறையாகத் துவக்கி, பொது கல்வி முறைக்கு முன்னுரிமை அளிப்பது

·        9ம் வகுப்பு முடிய மாணவர்கள் பொது தேர்வு இல்லாமல் (No Detention Policy) தடையின்றி தேர்வு செய்யப்படுவது; உயர்நிலை பள்ளி துவங்கி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மனநல/கற்றல் பிரச்சனைகளுக்கான ஆலோசகர்கள் கட்டாயமாக நியமிக்கப்படுவது  

·        சமச்சீர் கல்வி என்பது பாடத்திட்டம் என்று மட்டும் குறுக்கப்படாமல், கட்டமைப்பு வசதிகள், மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரம், ஆசிரியர் நியமனம் போன்றவை உட்பட பொதுப்பள்ளி கல்வித்திட்டம் என்பதை முழுமையான பொருளில் அமலாக்குவது, அனைத்துப்பள்ளிகளிலும் விளையாட்டு மைதானங்கள்,  உள்விளையாட்டு அரங்குகள் அமைப்பது

·        தலித், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இலவச விடுதிகளை மேம்படுத்தவும், உணவு மானியத்திற்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வது; மொழிவழிச் சிறுபான்மை மக்களுக்காக உள்ள கல்வி நிலையங்களை முறையாக நடத்துவதோடு தேவைக்கேற்ப கூடுதல் கல்வி நிலையங்கள் துவக்கப்படுவது, போதுமான ஆசிரியர்களை நியமனம் செய்வது

·        தனியார் உயர்கல்வி நிறுவனங்களை சமூக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கல்வித்தரம், கட்டணம் மற்றும் நெறிமுறைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் முறைப்படுத்த நடவடிக்கை எடுப்பது

·        பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட பல்வேறு தேர்வும், நியமனமும் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெறும் வகையில் புதிய விதிமுறைகள் வகுப்பது

·        மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை உயர்த்தி, நிபந்தனையின்றி, உரிய காலங்களில் வழங்குவது, பாரத ஸ்டேட் வங்கி தனியார் நிறுவனங்கள் மூலம் கடன் வசூல் செய்யும் தற்போதைய முறையை ரத்து செய்வது

·        மலைவாழ் மக்களுக்கான உண்டு உறைவிடப் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மலைக்கிராமங்களில் கூடுதலான பள்ளிகள் துவக்குவது

·        தொடக்கக் கல்வி துறையை மேம்படுத்த, அதனைத் தனி துறையாக்குவது, அதன் செயல்பாட்டை முடக்கும் அரசாணை எண் 101ஐ ரத்து செய்வது; 3500 அரசு தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை/மேல் நிலை பள்ளிகளுடன் இணைக்கும் முயற்சியைக் கை விடுவது

·        போஸ்ட் – மெட்ரிக் கல்வி உதவித்தொகை அதிகரிக்கப்படுவது, தமிழகத்துக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிலுவையை விரைந்து கொடுக்க வலியுறுத்துவது

·        கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தை ஜனநாயகப்படுத்துவது, கல்விநிலையங்கள் மதச்சார்பற்று இயங்குவதை உறுதி செய்வது, வணிக ரீதியிலான சுரண்டலை ஒழிப்பது, மாணவர் ஆசிரியர் இடையில் ஜனநாயக வெளி அதிகரிக்க நடவடிக்கை எடுப்பது; பாடத்திட்டத்தில் மத வெறி கருத்துக்களை அகற்றுவது; பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க பாலின நிகர்நிலை குழுக்களை அமைப்பது; மாணவர் பேரவை தேர்தல்களை முறையாக நடத்துவது

·        எம்.சி.ஐ, யு.ஜி.சி உள்ளிட்ட அமைப்புகளை வலுப்படுத்துவது, நமது அரசமைப்பு சட்டத்தின் கூட்டாட்சித்தன்மையை பாதுகாக்கும் வகையில் மாநில உரிமைகளுக்கு ஏற்ப மேற்கண்ட அமைப்புகளை கட்டமைப்பது. 

வேலைவாய்ப்பு

·        சுகாதாரத்துறை, மின்சாரத்துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை, காவல்துறை போன்ற அரசுத்துறைகளில் காலியாக உள்ள சுமார் 2 லட்சம் பணியிடங்களும் அந்தந்த தேர்வு வாரியங்கள் மூலமும், வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமும், லஞ்ச ஊழலற்ற நேர்மையான முறையில் நிரப்பப் பட அழுத்தம் கொடுப்பது

·        பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்ய வரும் போது, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதை உறுதி செய்வது

·        வேலைவாய்ப்புகளை அளிக்கும் சிறு குறு நடுத்தர தொழில்களைப் பாதுகாப்பது

·        சுய தொழில் துவங்க கடன் அளிப்பதை எளிமைப்படுத்துவது

·        மத்திய அரசுசார் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைக்கு எடுக்கும் போது, அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது 

·        கிராமப்புற வேலை உறுதி திட்டத்தைப் போல் நகர்ப்புற ஏழைகளுக்கு ‘நகர்ப்புற வேலை உறுதித் திட்டம்’ உருவாக்கப்படுவது

சுகாதாரம்

·        இலவச மருத்துவம் கிடைத்திட மத்திய மாநில அரசுகள் முறையான சட்டங்களை இயற்றுவது; அரசின் நிதி ஒதுக்கீடு ஜிடிபியில் 5 சதவிகிதம் வரை உயர்த்தப்படுவது

·        அடிக்கல் நாட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய உறுதியான நடவடிக்கை எடுத்து, பணிகளை விரைந்து முடிப்பது; மதுரை-கோவை-நெல்லையில் மண்டல புற்றுநோய் மையங்களை உருவாக்குவது

·        ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டமைப்பை மேம்படுத்தி, பலப்படுத்துவது

·        நோய் வந்த பின் நடக்கும் அதிக பண செலவு பிடிக்கும் சிகிச்சை முறைக்கு பதிலாக மலிவான முறையில் செய்யக் கூடிய நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பது

·        தற்போதுள்ள அரசு மருத்துவ காப்பீட்டு திட்டம் தனியார் காப்பீடு மற்றும் மருத்துவமனைகளுக்கே லாபம் கொடுப்பதாக அமைந்திருக்கிறது. பொது மருத்துவ முறைக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வது மக்களுக்கு அதிகம் பயன் தரும் என்பதை முன்வைப்பது

·        தனியார் துறையில் கூட சிறிய, நடுத்தர மருத்துவமனைகள் அல்லாமல், பெரும் கார்ப்பரேட் மருத்துவமனைகள் அமைய வளங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது, தனியார் மருத்துவமனைகள் குறிப்பாக கார்ப்பரேட் மருத்துவமனைகளின் சிகிச்சைக்கான கட்டணங்கள், சிகிச்சை குறித்த வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தி ஒழுங்குபடுத்துவது; பதில் சொல்லும் கடமையை உறுதிப்படுத்துவது

·        அத்தியாவசிய மருந்துகளின் விலைகளைக் குறைத்து, மலிவு விலை அரசு மருந்தகங்களை ஏற்படுத்த முயற்சிகள் எடுப்பது, பிராண்ட் மருந்துகளுக்கு பதிலாக மருத்துவர் ஆலோசனை அடிப்படையில் ஜெனரிக் மருந்து விற்பனையை ஊக்கப்படுத்துவது

·        இந்திய மருத்துவ கழகத்தை சீரமைத்து செயல்பட வைப்பது, அதற்கு ஜனநாயக முறையில் தேர்தல் நடத்துவது; அதற்கு பதிலாக உருவாக்கப்பட உள்ள தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை ரத்து செய்வது

மின் துறை

·        மின் துறை பொது துறையாகப் பராமரிக்கப்படுவது; பிரித்த மின்வாரியங்களை ஒன்றிணைப்பது

·        மின்சார சட்ட திருத்த மசோதா 2018ஐ ரத்து செய்வது

·        அனைவருக்கும் கட்டுப்படியாகும் கட்டணத்தில் மின்சாரம் கிடைப்பதற்கு அழுத்தம் கொடுப்பது

·        மின் உற்பத்தி திட்டங்களை விரைந்து நிறைவேற்றி, மின் தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்குவது

·        சுற்றுச்சூழல்

·        தெளிவான சுற்றுச்சூழல் கொள்கைக்கான முன்வரைவு உருவாக்கப்பட்டு, மக்கள் மத்தியில் பரந்த விவாதத்துக்குப் பின் இறுதி செய்து அமலாக்குவது

·        சுற்றுச்சூழலுக்கும், மக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடலை நிரந்தரமாக்க உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு நிர்ப்பந்தம் அளிப்பது 

·        சுற்றுச்சூழல் பாதிப்பைக் கணக்கில் எடுத்து, நகர் புறங்களில் பொது போக்குவரத்து முறையை மேம்படுத்துவது

·        கூடங்குளம் அணுமின்நிலைய விரிவாக்கத்தை ரத்து செய்ய குரல் கொடுப்பது

·        ஆலைக்கழிவுகள் கால்வாய்களில் கலப்பதை தடுப்பது

·        ஏற்கனவே பல்வேறு தொழிற்சாலைகளால் மாசு ஏற்படுகிற மாவட்டங்களில் புதிய தொழிற்சாலை துவக்கும் முன் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு செய்யும் விதியைக் கட்டாயமாக அமல்படுத்துவது

தொழிலாளர் நலன்

·        விலைவாசி கணக்கில் கொண்டு அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.18,000/- வழங்கிட நடவடிக்கை எடுப்பது

·        தொழிற்சங்க உரிமைகள் மற்றும் உள்நாட்டு சட்ட விதிகளை நிறுவனங்கள் முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்வது, பன்னாட்டு தொழில்நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு பெரிய நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை நிலைநாட்டுவது

·        முறைசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர் நலவாரியங்களும் முறையாக செயல்படவும், பலன்கள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் போய் சேரவும் நடவடிக்கைகள் எடுப்பது, கண்காணிப்பது

·        பல்வேறு பகுதியினரை பாதிக்கும் மோட்டார் வாகன சட்டதிருத்தத்தை அடியோடு ரத்து செய்வது, அதே போல் தொழிலாளர் நலனை பாதிக்கும் வகையில் செய்யப்பட்ட அனைத்து சட்ட திருத்தங்களை ரத்து செய்ய நிர்ப்பந்திப்பது

·        அரசு துறைகளிலும், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களிலும் நிரந்தர பணிகளில் தொழிலாளர்களை ஒப்பந்தக் கூலிகளாக்கி உழைப்பு சுரண்டப்படுவதை தடுக்கவும், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வது, ’குறிப்பிட்ட கால வேலை’ (Fixed term employment) முறையை ரத்து செய்வது.

·        மத்திய அரசு முன்மொழிந்துள்ள தொழிலாளர் சட்ட மசோதாவை ரத்து செய்வது

·        பெண் தொழிலாளர்களுக்குக் குறைந்த பட்ச ஊதியம், பணி பாதுகாப்பு, பணியிட பாதுகாப்பு, பேறுகால விடுப்பு, ஓய்வு நேரம், கழிப்பிட வசதி போன்றவை உறுதி செய்வது; பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலைத் தடை செய்யும் சட்டத்தை முறையாக அமல்படுத்துதல், புகார் கமிட்டிகளை அமைத்தல்

·        பஞ்சாலைகளில் நவீன கொத்தடிமை முறையாக உள்ள சுமங்கலித் திட்டத்தை ஒழிப்பது

·        சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதை உறுதி செய்வது

·        வேலை தேடி நகர்ப்புறங்களை நோக்கிச் செல்லும் கிராமப்புறத் தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான தங்குமிடங்களைக் கேரள மாநிலம் போல் உருவாக்குவது, வெளிமாநில தொழிலாளர்களின் வருகையைப் பதிவு செய்து, ரேஷன் உள்ளிட்ட உதவிகளை செய்வது, பணியிட விபத்துகளுக்கு சட்டப்படியான இழப்பீடு அளிப்பது

·        வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் இந்தியர்களின் பாதுகாப்புக்குக் கூடுதல் கவனம் செலுத்துவது

·        ஐ.டி. ஊழியர்களின் பணி பாதுகாப்பு, அரசு துறைகளில்/ இ-சேவை, ஆதார் சேவை மையங்களில்/தனியார் துறையில் பணியாற்றும் தரவு உள்ளீட்டாளர் உள்ளிட்ட ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.24000 என நிர்ணயிக்கப்படுவது, சட்ட விரோதமான பணி நீக்கம் மற்றும் ஆட்குறைப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது

·        போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு பெறும் போதே பணப்பலனை நிலுவை வைக்காமல் வழங்குவது; அவர்களின் ஓய்வூதிய நிதியில் அரசு செலவழித்த தொகையை உடனே செலுத்துவது

விவசாய தொழிலாளர் நலன்

·        விவசாயத் தொழிலாளர்களுக்கான சமூகப்பாதுகாப்பை சட்ட அங்கீகாரத்துடன் உறுதி செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த மத்திய சட்டம் இயற்றிட வலியுறுத்துவது

·        ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் 200 நாட்கள் வேலையும், ரூ.400 குறைந்தபட்ச கூலியும் கிடைக்கும் விதத்தில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவது, கூலி நிலுவையை உடனடியாக வழங்குவது

·        இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம் ரூ. 10,000/- வழங்குவதை உறுதி செய்வது

·        விவசாய விளை நிலம் வேறு பயன்பாட்டுக்கு செல்லும் போது ஏற்படும் பாதிப்புகளின் போது, நிலத்தை நம்பி வாழ்பவர்கள் என்ற முறையில் விவசாய தொழிலாளர், பெண்களையும் இணைத்து இழப்பீடு வழங்குவது

பெண்கள் நலன்

·        பெண்கள், குழந்தைகள் நலத்துறை மத்தியில் ஒரே துறையாக இருப்பதை மாற்றித் தனித் தனி துறைகளாக செயல்படுத்துவது

·        தேசிய, மாநில மகளிர் ஆணையம், குழந்தை உரிமை ஆணையத்துக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, அவை முறையாக இயங்கவும் அதன் பரிந்துரைகளை செயல்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது, பரிந்துரைகள் மீது அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை (Action Taken Report) சட்டமன்றம்/நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது; பெண்கள், குழந்தைகள் உரிமை குறித்த முற்போக்குக் கண்ணோட்டமும், அனுபவமும் உள்ளவர்களை ஆணைய பொறுப்புகளுக்குக் கொண்டு வருவது

·        பாலியல் வன்கொடுமைகள் தடுப்பு, மகளிர் உரிமை, பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்து அரசு நிர்வாகம், நீதித்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதோடு, பாலின நிகர்நிலை கண்ணோட்டம் குறித்து தொடர் பயிற்சியளிப்பது

·        பாதிக்கப்பட்ட பெண்கள் பாதுகாப்பு/உரிமைகளுக்கான சட்டம் (Victims Rights/Protection Act), திருமணத்துக்குப் பின் சேரும் சொத்துக்களில் மனைவிக்கு சமபங்கு கிடைக்க சட்டம் இயற்றுவது; ஜீவனாம்ச சட்டத்தை பலப்படுத்துவது; கணவனால் கை விடப்படும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்வது; இபிகோ 498 ஏ பிரிவை நீர்த்துப் போகாமல் பாதுகாப்பது

·        பாலியல் வன்முறை மற்றும் அமில வீச்சால் பாதிக்கப்படுபவர்களுக்கு முழுமையான நிவாரணம், மறு வாழ்வு உறுதி செய்வது

·        கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்று கண்டறிவதைத் தடை செய்யும் சட்டத்தைக் கறாராக அமல்படுத்துவது; கண்காணிப்பு கமிட்டிகளை செயல்படுத்துவது

·        பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை மற்றும் அருப்புக்கோட்டை நிர்மலா தேவி வழக்குகளில் உயர்மட்ட நபர்கள் உள்ளிட்ட குற்றவாளிகள் யாரும் தப்பிவிடாத வகையில் உறுதியான நடவடிக்கை எடுப்பது

·        மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 4 சதவிகித வட்டியில் வங்கிக் கடன் அளிப்பது, தனியார் நுண்நிதி நிறுவனங்கள் வழங்கிய கடனுக்கு அதீத வட்டி வசூல் செய்வதையும், அச்சுறுத்தல் மிரட்டலையும் தடுக்க நடவடிக்கைகள் எடுப்பது; தற்போது கஜா புயல் பாதித்துள்ள மாவட்டங்களிலும், தொழில் நசிவு ஏற்பட்டுள்ள மாவட்டங்களிலும் கடனை ரத்து செய்வது

·        நலத்திட்ட உதவிகளை உயர்த்தி, குறைபாடின்றி வழங்குவது; வன்முறை தடுப்பு சட்டங்களைக் கறாராக அமல்படுத்துவது, புதிய சட்டங்கள் குறித்து விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது

·        பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் பேசுவதை, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் நடத்தை விதி மீறலாகக் கருதி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வழி வகை செய்வது

·        பெண்கள் குறித்த ஊடக சித்தரிப்பில் படைப்பாளிகள் சுய கட்டுப்பாடு கடைப்பிடிப்பதை ஊக்குவித்தல்; பாலின சமத்துவ சித்தரிப்புகளை அதிகம் கொண்டு வருதல்

·        மத்திய மாநில நிதிநிலை அறிக்கைகளில் பெண்களுக்கான சிறப்பு கூறு இருப்பதை உறுதி செய்வது (gender budgeting) அதைத் தற்போதைய 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்துவது

·        விதவைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான பென்சன்/உதவித்தொகையை விலைவாசிக்கேற்ப உயர்த்தி மாதந்தோறும் தடையின்றி வழங்கிட போராடுவது

குழந்தைகள்/சிறுவர் நலன்

·        18 வயதுக்குக் கீழ்பட்டவர்களை குழந்தை/சிறுவர் என வகைப்படுத்துவது

·        போதுமான அங்கன்வாடி மையங்களை உருவாக்குவது

·        சிறார் உழைப்பு ஒழிப்புச் சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்துவது, சிறார் உழைப்பைக் கொல்லைப்புற வழியாக அனுமதிக்கும் சட்டத்திருத்தத்தை ரத்து செய்வது

·        குழந்தைகள் கடத்தப்படுவது, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை ஆகிய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திட தேவையான சட்டங்கள் உட்பட உறுதியான நடவடிக்கைகள் எடுப்பது; காணாமல் போகும் குழந்தை/சிறுமியரைத் தேட திறன் மிக்க நடவடிக்கைகள் எடுப்பது; போக்சோ சட்டத்தைக் உறுதியாக அமலாக்குவது

·        மாணவியர், பெண்கள் விடுதி/இல்லங்களைக் கறாராகக் கண்காணிப்பது, பாதுகாப்பை உறுதி செய்வது

·        தமிழகத்தில் 3500 சத்துணவு மையங்களை மூடும் முயற்சியை முறியடிப்பது, அங்கன்வாடி மையங்களைக் கூடுதலாக உருவாக்குவது

இளைஞர் நலன்

·        வேலை உரிமையை அடிப்படை உரிமையாக்குதல்; வேலை கிடைக்கும் வரை வேலையில்லா கால உதவித்தொகை அளித்தல்

·        வேலை நியமன தடை சட்டத்தை ரத்து செய்தல்

·        ¨             தேசிய இளைஞர் கொள்கையை உருவாக்குதல்

மீனவர்கள் நலன்

·        மீனவர்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தும் கடலோர மேலாண்மை மண்டல அறிவிப்பு ஆணையை ரத்து செய்து, கடலோர பகுதிகள் மீதான மீனவர் உரிமையை நிலைநாட்டுதல்.

·        மீன்பிடி சார்ந்த தொழில்களில் ஈடுபடும் அனைத்துப் பெண்களையும் மீனவ தொழிலாளர்களாக அங்கீகாரம் செய்து, ஆண்களுக்கு சமமான பயனாளிகளாக அவர்களைக் கருதுவது.

·        இலங்கை கடற்படையால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுப்பதுடன் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் இருநாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தையைத் தொடர்வது, இலங்கை அரசு தற்போது கொண்டு வந்துள்ள வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்திலிருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாப்பது

·        உள்நாட்டு மீனவர்களுக்கு நீராதாரங்களின் மீன்பிடி குத்தகை வழங்குவதை கட்டாயமாக்குதல், அவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் வழங்குவதை உறுதிசெய்தல், நிவாரணத்தொகையை ரூ.10000-மாக உயர்த்தி வழங்குதல். கடல் மீனவர்களுக்கு வழங்கப்படும் சமூக நலத் திட்டங்கள் அனைத்தையும் உள்நாட்டு மீனவர்களுக்கும் வழங்குவது

·        தேசிய கடல் மீன்பிடி கொள்கை 2017, நீலபுரட்சி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் பெயரால் பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடி உரிமையை பறித்துவிட்டு, இந்திய பெருங்கடலில் அன்னிய கப்பல்களுக்கு அனுமதி வழங்கி கொட்டிக்கிடக்கும் மீன்வளத்தைச் சுரண்டுவதைத் தடுத்து நிறுத்துவது, சாகர்மாலா போன்ற பெரும்திட்டங்களின் பெயரால் கடலூர்-நாகை கடற்கரைப்பகுதிகளில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம், குமரி மாவட்டத்தில் கோவளம் மணக்குடி துறைமுக திட்டம் போன்ற நடவடிக்கைகள் கடல்சார் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிப்பதை மாற்றி அமைப்பது

·        கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை 1991-யை அடிப்படையாக கொண்டு முழுமையான கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்தை கடலோர சமுக மக்களிடம் கலந்து பேசி புதிய திட்டத்தை உருவாக்கி அதை தமிழில் வெளியிடுவது

·        மாற்று வாழ்வாதாரமான ஆழ்கடல் மீன்பிடிப்புத்திட்டத்தை முறையாக அமல்படுத்த போதிய நிதியை ஒதுக்கீடு செய்து அதிகபட்சமாக இரண்டு வருடத்திற்குள் நிறைவேற்றுவது , மீனவர்களின் அடிப்படை வாழ்வாதார உரிமையை பாதுகாக்க அமைக்கப்பட்ட முராரி கமிட்டி குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது, மத்தியில் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்குவது

·        நாடு முழுவதும் உள்ள அனைத்து மீன்பிடி படகுகளுக்கும்,தேவையான அளவு முழு வரி விலக்கு அளிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவது, தமிழ்நாடு அரசு உள்நாட்டு நீர் நிலைகளில் மீன்பிடிக்கும் உரிமையை தனியாருக்கு குத்தகை விடுவதை தவிர்த்து, உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குவது

தலித் மற்றும் பழங்குடியினர் நலன்

·        பா.ஜ.க ஆட்சியில் துணைத்திட்டங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி களையப்பட்டு ஜாதவ்குழு பரிந்துரைகள் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு கிடைக்கக் குரல் கொடுப்பது

·        ஒதுக்கீடு செய்யப்படும் முழுத்தொகையும் நேரடியாக பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர்களின் தனிநபர், குடும்பம், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் நேரடியாக பயன்படக் கூடிய விதத்தில் திட்டங்கள் வகுப்பது, இந்நிதியைப் பொது திட்டங்களில் முதலீடு செய்வதை முற்றாக தடுப்பது, இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் மத்திய சட்டம் இயற்றப்படுவது

·        நிலமற்ற தலித் பழங்குடியினர் குடும்பங்களுக்கு தலா 5 ஏக்கர் விவசாய நிலம் வழங்குவது

·        வன்கொடுமை தடுப்பு திருத்தச்சட்டம் 2015ஐ செம்மையாக அமல்படுத்துவது; அரசியல் சாசன அட்டவணை 9ல் இதை இணைப்பது

·        குக்கிராமங்கள் துவங்கி உயர்கல்வி நிலையங்கள் வரை அநீதியான முறையில் தொடர்கிற சமூக, பொருளாதார, பண்பாட்டு பாகுபாடுகளுக்கு முடிவுகட்ட சட்டப்படியாகவும், மக்கள் மத்தியில் ஜனநாயக உணர்வை வளர்ப்பதின் வழியாகவும் சகோதரத்துவத்தை பாதுகாத்து தீண்டாமை கொடுமையை ஒழித்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது, அரசு சார்பில் தொடர் பிரச்சாரங்களை மேற்கொள்வது

·        சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பை உடனடியாக வெளியிடுவது

·        சாதிஆணவப்படுகொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றுவது, வெவ்வேறு சாதியில் திருமணம் செய்யும் தம்பதியரின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட குரல் கொடுப்பது

·        மனிதக் கழிவை மனிதரே அகற்றும் கொடுமைக்கு முடிவு கட்ட மனிதக் கழிவை அகற்றும் தொழிலாளர்கள் மறுவாழ்வுச்சட்டத்தை (2013) உறுதியாக செயல்படுத்துவது

·        பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு உரியவர்களுக்கு வழங்க சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது

·        மத்திய வன உரிமைச் சட்டம் 2006 தமிழ்நாட்டில் அமலாக்கப்பட்டு ஆதிவாசி மற்றும் பழங்குடியின மக்களுக்கு நிலம் வழங்க உரிய நடவடிக்கைகளை எடுப்பது, பழங்குடியினரையும், பாரம்பரியமாக வன நிலங்களில் குடியிருப்போரையும் வெளியேற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்கொள்ள முறையான சட்ட நடவடிக்கைகள் எடுப்பது

·        பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களுக்கு உரிய சாதிச்சான்றிதழ் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுப்பது

·        மலைப்பகுதிகளில் பட்டா வழங்கிட தடை செய்யும் அரசு ஆணை எண் 1168-ஐ ரத்து செய்திட வற்புறுத்துவது

·        வேட்டைக்காரன் இனம் குறித்த ஆய்வை பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் மூலம் தாமதமில்லாமல் துவங்குவது

·        பழங்குடி மக்கள் வசிக்கும் மலைகிராமங்களுக்கு பள்ளி, மருத்துவம், குடிநீர், மின்சாரம், சாலை வசதிகளை ஏற்படுத்துவது.

சிறுபான்மையினர் நலன்

·        சிறுபான்மை ஆணையத்துக்கு அரசியல் சட்ட அந்தஸ்து அளிப்பது

·        சிறுபான்மை மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளுக்காக சச்சார் குழு மற்றும் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அளித்த பரிந்துரைகளை நிறைவேற்ற சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வது

·        மதம் மாறிய தலித் மக்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கான உரிமைகள், சலுகைகள் கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பது

·        சிறுபான்மையின மக்களுக்கு எதிராக இந்துத்துவா சக்திகள் தூண்டி வரும் மத வன்முறைகளை ஒடுக்கவும், வெறுப்பு பிரச்சாரங்களை தடுக்கவும் உறுதியான நடவடிக்கைகள் எடுப்பது, வகுப்புவாத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு மசோதாவை நிறைவேற்றுவது

·        சிறுபான்மை தொழில் முனைவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கிட நடவடிக்கை எடுப்பது

·        இசுலாமிய சிறுமியருக்குக் கல்வி அளிக்க சிறப்பு கவனம்; கல்வி உதவித்தொகை, விடுதி வசதிகளை அதிகரிப்பது

·        சிறுபான்மையினரின் உரிமைகள் மறுக்கப்படுவதைத் தடுக்கவும், அவர்கள் மீது நடைபெறும் மத ரீதியான வன்முறைகளைத் தடுத்து உரிய பாதுகாப்பு வழங்கவும் சம உரிமை ஆணையம் அமைக்க மத்திய அரசை வற்புறுத்துவது

·        உருது ஆசிரியர் காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்து, உருது பயிலும் மாணவர்களின் கல்வி தடைபடாமல் தொடர முயற்சிப்பது

·        முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமையை பாதுகாப்பது, பட்டா நிலங்களில் வழிபாட்டு தலங்கள் அமைக்க சமர்ப்பிக்கப்படும் மனுக்கள் உடனடியாக பாரபட்சமின்றி பரிசீலிக்கப்பட்டு, உரியகாலத்தில் அனுமதி வழங்கப் படுவது

·        ஏழை முஸ்லீம்கள் வாழும் பல பகுதிகளில் பொருத்தமான வகையில் புறம்போக்கு நிலங்களை ஒதுக்கீடு செய்து இறந்தவர்களை நல்லடக்கம் செய்ய கபர்ஸ்தான் அமைக்க அரசை வற்புறுத்துவது

·        தண்டனை காலம் முடிந்தும் சிறையில் வாடுகிற முஸ்லீம் சிறை கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவும், பல்லாண்டுகளாக விசாரணைக் கைதிகளாக தொடர்ந்து பிணை கூட வழங்கப்படாமல் நீதிக்குப் புறம்பாக சிறையில் உள்ள முஸ்லீம் சிறைக் கைதிகளை விடுதலை செய்யவும் அரசை வற்புறுத்துவது

·

பிற்படுத்தப்பட்டோர் நலன்

·        மத்திய கல்வி நிலையங்களில் 27 சதவிகித ஒதுக்கீட்டை அமல்படுத்துவது, தனியார் கல்வி நிலையங்களுக்கு விரிவுபடுத்துவது

·        தேசிய பிற்பட்டோர் ஆணையத்தை வலுப்படுத்துவது

·        சாதி சான்றிதழ் வழங்குவதை எளிமைப்படுத்துவது

·        பிற்பட்டோரில் பொருளாதார ரீதியாக நலிந்தவர்களுக்கு வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு போன்றவற்றை உறுதிப்படுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்வது

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் நலன்

·        அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைத்து துறைகளிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதிய திட்டம் அமலாக்கப்படுவது

·        சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர், அங்கன்வாடி, ஆஷா உள்ளிட்ட திட்டம் சார் ஊழியர்கள், மற்றும் அனைத்து துறைகளிலும் உள்ள தொகுப்பூதிய, மதிப்பூதிய ஊழியர்களுக்குக் கால முறை ஊதியம் நிர்ணயிப்பது,

·        நிரந்தர அரசு பணிகளை காலி செய்யும் அவுட் சோர்சிங் முறையை ரத்து செய்வது; இதற்கு வழி வகுக்கும் அரசாணை எண் 56ஐ ரத்து செய்வதோடு, ஆதிசேஷையா தலைமையில் அமைக்கப்பட்ட பணியாளர் சீரமைப்பு குழுவின் பரிந்துரைகளை நிராகரிப்பது

மாற்றுத்திறனாளிகள் நலன்

·        பாகுபாடு பார்ப்பதை தடை செய்யும் அரசியல் சாசன பிரிவு 15 (1)ல் “ஊனமுற்றோரை” சேர்க்க வலியுறுத்துவது, அதைப்போன்று அரசு பணியமர்த்தலில் சமத்துவத்தை வலியுறுத்தும் அரசியல் சாசன பிரிவு 16(2)ல் “ஊனமுற்றோரை” சேர்ப்பது

·        மாற்றுத்திறனாளிகளுக்கான தடையில்லா சூழல் உள்ளிட்ட சட்டபூர்வ அரசு கடைமைகளை செய்ய ஒவ்வொரு துறையும் தனது நிதிச்செலவினத்தில் 5 சதவீத நிதியை ஒதுக்கீடு செய்வது

·        பொதுக்கல்வித்துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் கல்வி - உள்ளடங்கிய கல்வியை உரிய கட்டமைப்பு வசதிகளுடன் ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒரு சிறப்புப் பள்ளியை ஏற்படுத்துவது 

·        மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள குடும்பங்களை வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களாக அறிவித்து, அரசுகளின் நலத்திட்டங்கள் முன்னுரிமை அடிப்படையில் நிபந்தனையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வது

·        மாற்றுத்திறன் பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்க அரசுகளின் அனைத்துத் திட்டங்களிலும் முன்னுரிமை வழங்க நடவடிக்கை, இவர்கள் மீதான் பாலியல் வன்முறை உள்ளிட்ட அனைத்து தாக்குதல்களையும் தடுத்திட நடவடிக்கைகள் எடுப்பது

·        மாற்றுத் திறனாளிகளுக்கு கண்ணியமான வாழ்வை உறுதி செய்வது; கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சட்டப்படியான 4 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்வது, மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கையான சைகை மொழிக்கு அங்கீகாரம் வழங்குவது; தனியார் துறை பணிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்வது

·        மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை விலைவாசி உயர்வுக்கேற்றவாறு உயர்த்தப்பட்டு, தடையின்றி மாதந்தோறும் வழங்குவது

முதியோர் நலன்

·        முதியோர் உதவித்தொகையை விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு உயர்த்தி மாதந்தோறும் தடையின்றி வழங்குவது

·        ஒவ்வொரு ஒன்றியத்திலும் அரசு முதியோர் இல்லங்கள் ஏற்படுத்தி, தக்க உறைவிட மற்றும் உடல், மனநல மருத்துவ வசதிகளுடனும், பாதுகாப்புடனும் செயல்படுவதை உறுதிப்படுத்துவது

·        தனியார் அமைப்புகள் நடத்தி வரும் முதியோர் இல்லங்களை கண்காணித்து, முதியோர் நலனும், கண்ணியமும் காக்கப்படுவதை உறுதிப்படுத்த அரசு உரிய நடவடிக்கைகள் எடுப்பது

திருநங்கையர் திருநம்பியர் (திருநர்) நலன்

·        திருநர் உரிமைகள் மசோதா 2014ஐ சட்டமாக்குதல்; 2018 மசோதாவில் உள்ள குறைபாடுகளைக் களைதல்

·        2014 உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி திருநம்பியர், திருநங்கையருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீட்டிற்கு குரல்கொடுப்பது

·        திருநர் சமூகத்தைக் காத்திட “திருநர் பாகுபாடு தடுப்புச் சட்டம்” கொண்டுவருவது

·        தமிழகத்தில் உள்ள திருநர் நல வாரியத்தை செயல்படுத்துவது, குடியிருப்பு, ரேஷன் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்வது

·        இலவச பாலின மாற்று அறுவை சிகிச்சை, குடும்பங்களுக்கு கவுன்சிலிங் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பது

கீழடி அகழ்வாய்வு

·        கீழடி அகழ்வாய்வை மத்திய தொல்லியல்துறை தொடர்வது, அகழ்வாய்வில் கிடைத்துள்ள பொருட்களின் தொன்மையை கண்டறிய முழுமையான, அறிவியல்பூர்வமான ஆய்வு, இதுவரை கிடைத்துள்ள பொருட்களை கொண்டு கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பது

·        1904 ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுதான் இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் அகழ்வாய்வு என்ற பின்னணியில் 2004 வரை தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு தற்போது வரை 4 தொகுதிகளாக தொகுக்கப்பட்ட ஆய்வறிக்கைகளை உடனடியாக வெளியிடுவது, தமிழகத்தில் அகழ்வாய்வு நடத்தப்பட்ட அனைத்து இடங்களிலும் மேற்கொண்டு தொடர்வது

·        தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இடஒதுக்கீட்டு முறை பாதுகாக்கப்படுவது, மேலும் தனியார் துறையில் இடஒதுக்கீட்டினை விரிவுபடுத்துவதற்கான சட்டத் திருத்தம் வலியுறுத்தப்படுவது, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றுவது

·        பின்னடைவு காலி பணியிடங்களைப் பூர்த்தி செய்வது

நாட்டுப்புறக் கலைகள்

·        நாட்டுப்புறக் கலைகளை பாதுகாத்திட, வளர்த்திட நாட்டுப்புறவியல் பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவது, கல்லூரிகளில் நாட்டுப்புறக்கலை பட்டப்படிப்பை நிறுவுவது , நலிவடைந்த நாட்டுப் புற கலைஞர்களுக்கு இலவச பஸ் பாஸ், ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகளை வழங்குவது

·        நாட்டுப்புறக் கலை பட்டம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது

கட்டற்ற மென்பொருள்

·        அனைத்து அரசு பள்ளிகளிலும் கணினி வழி கல்வியை மேம்படுத்துவது, மாணவர்களுக்குப் பயன்படும் விதத்தில் கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கப்படுவது

·        கட்டற்ற மென்பொருள், அது சார்ந்த தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, தொழில் முனைவோருக்குக் கூடுதல் உதவி அளிப்பது

·        ஓலா, ஊபர் ஓட்டுநர்களுக்குத் தொழில்நுட்ப முறையில் உழைப்பாளர் கூட்டுறவை உருவாக்குவது

·        சொமாட்டோ, ஸ்விக்கி ஊழியர்களுக்கு வேலை நேரம், பணி பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுப்பது

·        அரசுடமையாக்கப்பட்ட நூல்கள், அரசு நூலக புத்தகங்களை அனைவரும் பயன்படுத்தும் விதத்தில் டிஜிட்டல் நூலகத்தில் வெளியிடுவது, நூலகங்களை அதிகப்படுத்துவதோடு, நூல்கள் வாங்குவதற்கான நிதியை அதிகரிப்பது

சமூக வலைத்தளம்

·        சமூகவலைத்தளங்களில் தனிநபர் சுதந்திரம், உரிமை, பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுப்பது; அதே சமயம் போலி செய்திகள், அச்சுறுத்தல்கள் மூலம் சமூக பதட்டத்தைத் தூண்டுவதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பது

·        வலைத்தளம் சார்ந்த பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட வன்முறையைத் தடுக்க சைபர் கிரைம் பிரிவை பலப்படுத்தி, விரைவாகவும், பாகுபாடு இன்றியும் நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்வது

விளையாட்டுத் துறை

·        திறமையான ஆண்/பெண் விளையாட்டு வீரர்களை நகரங்கள் மட்டுமின்றி கிராமப் புறங்களிலும் சிறுவயதிலேயே அடையாளம் கண்டு, அரசே முழு செலவுகளையும் ஏற்றுக் கொண்டு தீவிரப் பயிற்சி கொடுப்பது

·        வீரர்கள் ஒவ்வொருவரும் தேசிய, சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று வருவதற்கான செலவுகள் அனைத்தையும் அரசு ஏற்பது

·        விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு மத்திய அரசு பல்வேறு விருதுகளை வழங்கி வந்தாலும், மாநில அரசுகளும் விருதுகள் வழங்கி கௌரவப்படுத்துவது

·        விளையாட்டு பல்கலைக்கழகங்களின் கீழ் அரசு கல்லூரிகளை உருவாக்கி மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி கொடுப்பது

·        அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்கப்பட்டிருக்கும் விளையாட்டு மைதானங்களின் உள்கட்டமைப்பை நவீன வசதிகளுடன் விரிவுபடுத்துவது .

·        விளையாட்டு துறைக்கான ஒதுக்கீட்டில் கிடைக்கும் கல்வி, வேலைவாய்ப்புகள் அனைத்து விளையாட்டுக்கும் கிடைக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது

போக்குவரத்து:

·        தில்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் வசூலிக்கப்படும் மெட்ரோ ரயில் கட்டணம் போல் சென்னையிலும் குறைவான கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுப்பது, மேலும் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் குறைந்த கட்டணத்தில் மெட்ரோ ரயில் பயணத்திற்கு மாதாந்திர பாஸ் வழங்கிட குரல் கொடுப்பது

·        கோவை, மதுரை, திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டு வருவது

·        போதுமான ரயில்களைத் தமிழகத்துக்கு விடுவது

·        மாநில போக்குவரத்து துறை சேவை துறை என்ற அடிப்படையில், நஷ்டம் ஏற்பட்டால் ஈடுகட்ட அரசு உதவுவது

மத்தியில் அமைந்த மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு அனைத்து ஜனநாயக, அரசியல் சாசன கட்டமைப்புகளையும் தகர்த்துள்ள நிலையில் அவற்றை புனரமைப்பதும், ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி உள்ளிட்ட விழுமியங்களை நிலைநிறுத்துவதும் அவசியமாகிறது. அதற்கு மத்தியில் ஒரு மதச்சார்பற்ற மாற்று அரசு அமைவது அவசியமாகும். மோடி அரசினால் முட்டுக் கொடுக்கப்படும் தமிழக அதிமுக அரசும் அனைத்து வகையிலும் மக்களுக்கு தீங்கு செய்வதையே தொழிலாகக் கொண்டுள்ளது.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படவும், மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுக்கும் போராட்டங்களுக்கும், முன் வைக்கும் மாற்றுத் திட்டங்களுக்கும் தமிழக மக்கள் பேராதரவு தர வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம்.

******


;