election-2019

img

நீதிபதி லோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை - அ.மார்க்ஸ்

முதலில் முன்கதைச் சுருக்கம்:

ஷொராபுதீன் ஷேக், அவரது உதவியாளர் துள்சிராம் பிரஜாபதி ஆகியோர் போலி என்கவுன்டரில் கொல்லப்படுகின்றனர். (2005 நவம்பர் 25). ஷொராபுதீனின் மனைவி கவ்சர் பீவியின் உடல் பின்னர் கண்டெடுக்கப் படுகிறது. ஷொராபுதீன் கொல்லப்பட்ட நான்கைந்து நாட்களுக்குப் பின் அவர் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார் எனப் பின்னர் செய்திகள் வருகின்றன. இது போலி என்கவுன்டர் எனப் பின்னர் அறியவந்தபோது அதற்குக் காரணமாக இருந்தவர் அமித்ஷா எனக் குற்றச்சாட்டு எழுகிறது. அது குஜராத்தில் மோடி ஆட்சியில் பல போலி என்கவுன்டர் கொலைகள் நடந்து கொண்டிருந்த காலம். அந்தப் போலி என்கவுன்டர்களைச் செய்த IPS அதிகாரிகள் (வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் etc) பலர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகின்றனர். அப்படியான வழக்குகளில் ஒன்றுதான் மோடியின் வலது கரமான அமித்ஷா மீதான இந்தக் கொலை வழக்கும்.

அந்த வழக்கு விசாரணைக்கு நேர்ந்த கதியைத் தொடர்வோம்:

1. அமித்ஷா மீதான ஷொராபுதீன், பிரஜாபதி என்கவுன்டர் படுகொலை வழக்கை மோடியின் குஜராத்தில் விசாரித்தால் நீதி கிடைக்காது என உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணையை 2012ல் மும்பை CBI நீதிமன்றத்துக்கு மாற்றுகிறது. வழக்கை விசாரிக்க சிறப்பு CBI நீதிபதியாக உத்பத் நியமிக்கப்படுகிறார். விசாரணைக்கு ஒத்துழைக்காத அமித்ஷாவைக் கண்டித்த உத்பத் வழக்கு விசாரணையை ஜூன் 26, 2014 க்கு ஒத்திவைத்து அன்று அமித்ஷா ஆஜராக வேண்டும் என்று ஆணையிட்டார். சரியாக ஒரு நாள் முன்னர் (ஜூன் 25, 2014) அவர் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அந்த இடத்தில் நியமிக்கப்பட்டவர்தான் நீதிபதி B.H..லோயா. அடுத்த ஐந்தாம் மாதத்தில் நீதிபதி லோயா மர்மமான முறையில் மரணமடைகிறார் (நவம்பர் 30, 2014). அடுத்து அந்த இடத்தில் நியமிக்கப்பட்ட நீதிபதி M.B. கோசாவி அமித்ஷாவின் discharge petition ஐ 3 நாளில் விசாரித்து, லோயா இறந்த ஒரே மாதத்தில் (டிசம்பர் 30, 2014) அமித் ஷாவை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கிறார்.

2. மூன்றாண்டுகளுக்குப் பின்.. நவம்பர் 21, 2017 அன்று நீதிபதி லோயாவின் சகோதரி அமித்ஷாவைக் குற்றத்திலிருந்து விடுவித்தால் 100 கோடி ரூபாயும் மும்பையில் ஒரு வசதியான Flat ம் அளிப்பதாக லோயாவிடம் பேரம் பேசப்பட்டது எனவும், நேர்மையான நீதிபதியான லோயா அதை ஏற்காமல் மறுத்தார் என்பதையும் வெளிப்படுத்துகிறார்.

3. மாரடைப்பில் இறந்தார் என லோயாவின் கதை முடிக்கப்பட்டது. ஆனால் ECG மற்றும் Histopathology அறிக்கைகள் மாரடைப்பால் இறக்கவில்லை என்கின்றன. AIIMS மருத்துவ மனையின் Forensic துறைத் தலைவர் ஆர்.கே.ஷர்மாவும் லோயா மாரடைப்பில் இறந்ததற்குச் சான்றுகள் இல்லை என்கிறார். மூளை அடிபட்டு (trauma in brain) இறந்திருக்கலாம் என்கிறார்.

4. லோயா அணிந்திருந்த உடையின் கழுத்துப் பகுதியில் ரத்தம் இருந்தது என அவரது குடும்பத்தார் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

5.லோயாவின் மர்ம மரணம் நிகழ்ந்தது டிசம்பர் 30, 2014ல். அவருக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு (security) சரியாக ஒருவாரம் முன்பு (நவம்பர் 24, 2014) நிறுத்தப்பட்டது. அவர் கடைசியாக ரயிலில் பயணம் செய்தபோது கூட பாதுகாப்பு இல்லாமல்தான் சென்றார்.

6. மும்பையிலிருந்து அவர் . நாக்பூருக்கு ரயிலில் சென்றதற்கான பதிவும் இல்லை.

7. நவம்பர் 30, 2014 அன்று அவர் ரவி பவனில் தங்கியிருந்தார் எனவும் அன்று இரவில்தான் அவருக்கு மாரடைப்பு வந்தது எனவும் சொல்லித்தான் அவர் கதை முடிக்கப்படுகிறது. ஆனால் ரவிபவனில் அவர் தங்கியிருந்தது குறித்த பதிவு அதற்குரிய பதிவேட்டில் இல்லை. அன்று ரவி பவனில் வேலை செய்து கொண்டிருந்த 15 பேர்களில் யாரும் அன்று அவரை அங்கு பார்க்கவில்லை என்கின்றனர்.

8. மாரடைப்பு வந்ததாகச் சொல்லப்படும் இரவில், ரவி பவனில் இருந்த அந்த அறையில் லோயா உட்பட மூவர் தங்கியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. பக்கத்து அறை காலியாக இருந்தும் இரண்டே படுக்கையுள்ள அந்த அறையில் மூவர் தங்கியிருந்தது ஏன்? இரவில் அவருக்கு மாரடைப்பு வந்து, அவசரமாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது அப்படியான ஒரு அமளி நடந்தது அன்று அங்கு பணியில் இருந்த 15 பேர்களில் யாருக்குமே எப்படித் தெரியாமல் போயிற்று?

9. இறந்ததாக அறிவிக்கப்பட்டபின் உடனடியாக (டிச 01,2014 இரவு), அவரது குடும்பத்தார் யாரும் இல்லாமலேயே, அவர்களில் ஒப்புதல் பெறாமலேயே 'போஸ்ட்மார்டம்' செய்யப்பட்டுள்ளது. போஸ்ட்மார்டம் அறிக்கையில் அவரது பெயர் கூடச் சரியாக எழுதப்படவில்லை. அத்தனை அவசரம் ஏன்?

10. அமித்ஷாவைக் குற்றத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று லோயாவிற்குக் கடுமையான அழுத்தம் அளிக்கப்பட்டது தங்களுக்குத் தெரியும் எனச் சொன்ன நீதித்துறை சார்ந்த அவரது நண்பர்கள் இருவரும் மர்மமான முறையில் இறந்துள்ளனர். Associate Advocate கண்டல்கார் நவ 29, 2015 அன்று நாக்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இறந்து கிடந்தார். எட்டாவது மாடியிலிருந்து அவர் விழுந்து இறந்தார் எனச் சொல்லி அவரது கதை முடிக்கப்பட்டது. முதல் நாள் நீதிம்ன்றம் செயல்படாதது குறிப்பிடத் தக்கது. பின் ஏன் அவர் அங்கு போனார், எட்டாவது மாடியிலிருந்து எப்படி விழுந்தார்? இன்னொருவர் தோம்ப்ரே என்ற ஓய்வுபெற்ற நீதிபதி. இவர் நாக்பூரிலிருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்தபோது மே 16, 2016 அன்று ரயிலில் மரணம் அடைந்தார், முதல் தகவல் அறிக்கை எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

லோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை இதுதான். இனியும் தொடருமா இந்தக் கதை? இல்லை இத்தோடு முடியுமா?

யாராவது தொடர நினைத்தால் Criminal contempt ! Be Careful ....

(இந்த 10 குறிப்புகள் காங்கிரஸ் கட்சி டெல்லியில் நடத்திய சந்திப்பில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டதன் மொழியாக்கம்)

இப்போது பின் கதைச் சுருக்கம்:

1.நியாயமான விசாரணை, 

சார்பில்லாத, நடுநிலையான தீர்ப்பு ஆகியவற்றைக் கோருவதும் அதற்காகப் போராடுவதும் நம் கடமை...

நீதிபதி லோயா மரணம் குறித்து ஐயம் எழுப்புவது Criminal Contempt என மத்திய அசட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மிரட்டினார் (ஏப்ரல் 21, 2018)

2.நீதிபதி லோயா மரணம் குறித்த மறுவிசாரணை தேவையில்லை எனத் தீர்ப்பளித்த தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வின் தீர்ப்பை "utterly wrong and jurisprudentially incorrect' எனக் கடுமையாக விமர்சித்தார் நீதியரசர் ஏ.பி. ஷா (மே 02, 2018).

3.நீதிபதி லோயா மாரடைப்பால் காரணமானதாகக் கொடுக்கப்பட்ட போஸ்ட்மார்டம் அறிகை போலியானது என்கிறது 'காரவான்' இதழ்.

இக்கட்டுரை ஆசிரியர் நிகிதா சக்சேனா (Death Of Judge Loya: Post-Mortem Examination Was Manipulated Under Directions Of Doctor Related To Maharashtra Cabinet Minister, Caravan 2 April 2018) சொல்வதில் சில அம்சங்கள் மட்டும்:.

ஒரு விவகாரமான மருத்துவரை நமக்கு நிகிதா அறிமுகப்படுத்துகிறார். அவர் மகரந்த் விவகாரே. இவர் தன் வேலையைக் கச்சிதமாக முடிப்பதற்கெனக் கையாளும் வழிமுறை அலாதியானது.

அவர் போஸ்ட்மார்டம் செய்யும் குழுவில் இருக்க மாட்டார். ஆனால் அதை எப்படி எழுத வேண்டும் என்பது இவராலேயே தீர்மானிக்கப் படும். போஸ்ட்மார்ட்டத்துக்கென அறிவிக்கப்பட்ட டாக்டரின் பெயரில்தான் அந்த அறிக்கை வெளிவரும். எந்தப் பத்திரிகையிலும் தன் பெயர் வராமல் பார்த்துக் கொள்வதில் அவர் கில்லாடி. லோயாவின் பிணக்கூறாய்வு அறிக்கையிலும் அதுதான் நடந்தது. அறிக்கையிலோ அல்லது நடந்து கொண்டுள்ள வழக்கின் எந்த ஆவணங்களிலுமோ அவர் பெயர் இல்லை.

ஆவணங்களின் படி லோயாவின் உடல் கூறாய்வை நடத்தியது அரசு மருத்துவக் கல்லூரி (GMC) பேராசிரியர் டாக்டர் NK தும்ரம். ஆனால் உண்மையில் அதை வழிநடத்தியது மகரந்த் விவகாரேதான் என்கிறார் நிகிதா. அப்போது விவகாரே நாக்பூர் இந்திரா காந்தி அரசு மருத்துவ மனையின் forensic துறையில் பேராசிரியராக இருந்தார். இப்போது அந்தத் துறையின் தலைவர் அவர். மருத்துவத்துறையக் கட்டுப்படுத்துகிற முக்கிய அமைப்பான மஹாராஷ்டிர மருத்துவக் கவுன்சிலில் (MMC) நம்ம டாக்டர் விவகாரே செல்வாக்கான நபரும் கூட.

எல்லாவற்றையும் காட்டிலும் அவர் மகாராஷ்டிர மாநில அமைச்சரவையில் முதலமைச்சருக்கு அடுத்து அதிகாரம் மிக்கவராகக் கருதப்படும் அமைச்சர் சுதிர் முங்கனித்வாரின் மைத்துனரும் கூட.

நீதிபதி லோயாவின் பிண ஆய்வில் அளவுக்கு அதிகமான ஆர்வத்தைக் காட்டினார் விவகாரே என்கிறார் கட்டுரை ஆசிரியர் நிகிதா. போஸ்ட்மார்டம் நடந்தபோது அவர் அருகில் இருந்துள்ளார். கூறாய்வு செய்து கொண்டிருந்த ஒரு இளம் மருத்துவர் லோயாவின் பிடரியில் இருந்த ஒரு ஐயத்திற்குரிய காயத்தைக் கவனப்படுத்திக் கேட்டபோது விவகாரே சத்தம் போட்டு அவரை அடக்கியுள்ளதாகவும் நிகிதா எழுதுகிறார்.

இந்த வழக்கில் மிக முக்கிய தடயமான இந்தக் காயம் பற்றிய தகவலை வெளியில் வராமல் மறைப்பதில் விவகாரே ரொம்பவும் விவரமாகவும் விவகாரமாகவும் இருந்துள்ளார். மேலும் விவரங்களுக்கு பார்க்க: மேற்குறிப்பிட்ட 'காரவன்' கட்டுரை.

(தொடரும்)

;