education

img

“அறிவுக்கு ஆங்கிலம் முக்கியம் அல்ல” - மயிலைபாலு

12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழி பயின்று கல்லூரிக்குச் செல்லும்போது அனைத்தும் ஆங்கிலத்தில் என்றானால் .... கண்களைக் கட்டி காட்டில் விட்டது போலத்தான்.  எது முட்டும் ? எது சுற்றிக்கொள்ளும்? எது குத்தும் ? எது இடறும் ? எது வீழ்த்தும் என்று அறியமுடியாமல் மனம் திக் திக் திக் தான்.  இந்த நிலை டாக்டர் இரா.சர்மிளாவுக்கும் ஏற்பட்டது.  ஏழை எளிய குடும்பத்துப் பெண்களின் மருத்துவர் கனவு கானல் நீர் ஆவது போல,  ஆலங்குடியை அடுத்த அனவயல் கிராமத்துப் பெண் சர்மிளாவின் கனவும் கலைந்து போனது.  ஆனாலும் என்ன? மூடிய கதவின் முன் நின்று புலம்பாமல் மாற்று வழியைத் தேடு எனத் தூண்டினார் அவரது தந்தை இராமநாதன்.  மருத்துவத் துறைக்கு இணையான துறைகள் எவ்வளவோ இருக்கின்றன என ஆற்றுப்படுத்தினார்.  நுண் உயிரியல் துறைக்கு வழியும் காட்டினார். 

அவ்வழி நடந்து கல்லூரிக்கும் போயாச்சு.  மீண்டும் தலையில் இடித்தது ஆங்கிலம். என்ன செய்வது ? தடுமாற்றம் ஏற்பட்டது. சர்மிளா மட்டும் தடுமாறவில்லை.  உடன் பயின்ற பலரும் தடுமாறினார்கள்.  சிலர் படிப்பை பாதியிலேயே கைகழுவி விட்டார்கள். சர்மிளாவை மீண்டும் நல்லாற்றுப்படுத்தியவர் ஒரு பேராசிரியர்.  “மொழியைக்கண்டு மிரளாதே . அறிவுக்கு ஆங்கிலம் முக்கியமல்ல; அறிவைப் பெறுவதுதான் முக்கியம்.  முயற்சி செய். உன்னால் முடியும்” என்ற நம்பிக்கை வார்த்தைகள் சர்மிளாவை உயிர்ப்பித்தது. மனம் துளிர்த்தது.  பட்டப்படிப்பில் 96 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். இவ்வளவு மதிப்பெண்களுடனான தேர்ச்சி முன்பு யாரும் பெற்றதில்லை;  இதுவரை யாரும் பெறவும் இல்லை என்பதில் பெருமிதம் கொள்கிறார் சர்மிளா. ஆங்கில வழிக் கல்வியில் தேர்ச்சி பெற்றுவிட்ட பூரிப்போடு  நின்றுபோயிருந்தால் டாக்டர் சர்மிளா தமுஎகச விருது விழா மேடைக்கு வந்திருக்கமாட்டார். ஆங்கிலவழி தாம் பெற்ற அறிவைத் தாய்மொழியாம் தமிழுக்கு அளிக்க வேண்டும் என்று விரும்பினார். எளிய தமிழில் ‘மரபணு என்னும் மாயக்கண்ணாடி’ உருவானது. அந்த மாயக் கண்ணாடி வழியாகத்தான் தமுஎகச சர்மிளாவை அடையாளம் கண்டது. 2018 ஆம் ஆண்டிற்கான  தமிழ் வளர்ச்சிக்கு உதவும் சிறந்த நூலுக்கான சின்னப்பபாரதி அறக்கட்டளை விருதினை வழங்கி கௌரவித்தது. 

செல் அறிமுகம், மரபணு (டிஎன்ஏ) நகர்வு, மரபணு மாற்றத்தால் ஏற்படும் நன்மை தீமைகள் உட்பட  பத்துத் தலைப்புகளில் அறிவியல் தமிழ் வளர்க்கப்பட்டுள்ளது.  “ தமிழ் விரிவாக்கத்துக்கும் அறிவியல் வளர்ச்சிக்கும்  இதுபோன்ற முயற்சி அவசியமானது”  என்ற தமுஎகசவின் பாராட்டுப் பத்திரம் சர்மிளாவுக்கு மிகவும் பொருத்தமானது .  கிராம நிர்வாக அலுவலரான இராமநாதன் தனது மகளுக்கு வழிகாட்டி ஊக்கப்படுத்தியதில்  “சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்ற பாரதியின் மரபணு ஒட்டி கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. 

இந்நூல் விருது கிடைக்கும் என்றெண்ணி எழுதப்பட்டதல்ல.  இயல்பான- சமூகத்திற்குத் தேவையான நூல் எழுதப்படும்போது விருது தானாகவே தேடி வருகிறது. விருது என்பது எழுத்தாளருக்கு வெகுமதி மட்டுமல்ல. உந்து சக்தியும் கூட. விருது கிடைப்பதற்கு முன்பே “ஸ்டெம்செல் ஓர் உயிர் மீட்பு செல்” என்ற இரண்டாவது அறிவியல் நூலினை எழுதி அவர் வெளியிட்டுவிட்டார். விருது வழங்கும் விழா மேடையில் மூன்றாவது நூல் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்ற சர்மிளாவின் அறிவிப்பு “மெல்லத் தமிழினி சாகும் என்று சில பேதைகள் சொல்லும்பழி நீங்கும்”  என்ற நம்பிக்கை துளிர்க்கச் செய்தது.  தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் மட்டுமல்ல, தன் மகளைச் சான்றோள் எனக்கேட்ட தந்தையும் பெரிதுவப்பார் என்பதை செல்பேசி உரையாடலில் இராமநாதனின் சொல் தழுதழுப்பில் உணரமுடிந்தது.  டாக்டர் சர்மிளா போன்றவர்களின் அறிவியல் நூல்கள் பல்கிப் பெருகும்போது அறிவியல் அரியணை ஏறி தமிழ் வீறுடன் வீற்றிருக்கும். 

;