economics

img

வேலைவாய்ப்புக்களை உருவாக்காத வளர்ச்சியாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உள்ளது

புதுதில்லி, ஆக. 5 -  “இந்தியப் பொருளாதாரம் வளர்க்கிறது தான்... ஆனால், வேலைவாய்ப்புகளை உருவாக்காத வளர்ச்சியாக அது உள்ளது” என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். இந்தியாவில் பணவீக்கம், விலைவாசி அதிகரிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அப்போது, “உலகம் முழுவதும் பண வீக்கம் அதிகரிப்பு, மந்த நிலை அச்சம் அதிக மாக இருக்கும் வேளையில் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியில் செல்கிறது. எனவே, இந்தியப் பொருளாதாரம் மந்தநிலை (Recession) அல்லது தேக்க நிலையில் (Stagflation) தள்ளப்படுவது குறித்த கேள்வியே தேவையில்லை” என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்க்கட்சிகளுக்குப் பதிலளித்தார். “ஒன்றிய அரசு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், நாட்டின் கடனைத் திறமையாக நிர்வகித்துள்ளது” எனவும் கூறினார். ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம்  ராஜன், இந்த விஷயத்தில் ஒன்றிய அரசை  பாராட்டியிருப்பதையும் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார். 

இதற்கு பாஜக-வைச் சேர்ந்த சுப்பிரமணியசாமியே தனது டுவிட்டர் பக்கத்தில் தகுந்த பதிலடி கொடுத்தார். “இந்திய பொருளாதாரம் மந்தநிலை  (Recession) அல்லது தேக்கநிலைக்கு (Stagflation) தள்ளப்படுவது குறித்துக் கேள்வியே இல்லை என ஒன்றிய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்வது  சரிதான். ஏனென்றால் இந்திய பொரு ளாதாரம் கடந்த ஆண்டே பொருளாதார மந்தநிலைக்குள் (Recession) சென்றுவிட்டது. எனவே, ‘மந்தநிலைக்குள் செல்லுமா?’ என்ற கேள்வி எழாது!” என்று கிண்டலடித்தார். “’5 டிரில்லியன் டாலர் ஜிடிபி’ குறித்துச் செம்மறி ஆடுகளைப் போலத் துள்ளிக்குதித்த பின்பு, இப்போது ‘மந்தநிலை இல்லை’ என்று  சொல்லும் நிலைக்குத்தான் (ஒன்றிய ஆட்சியாளர்கள்) அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்” என்றும் விமர்சித்திருந்தார். இந்நிலையில், ரகுராம் ராஜனும், ‘இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் தன்மை’ குறித்து விளக்கியுள்ளார். இதுதொடர்பாக ராய்ப்பூரில் பேட்டி ஒன்றை அவர் அளித்துள்ளார். “இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் செல்வது மட்டுமல்ல, வேகமாகவும் இயங்குகிறது. ஆனால், இந்திய பொருளாதார வளர்ச்சியின் பெரும்பகுதி வேலையில்லா வளர்ச்சி யாகும். அதாவது வேலைவாய்ப்புக்களை உருவாக்காத வளர்ச்சி (Jobless Growth) ஆகும். 

வேலைவாய்ப்புகள் என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியப்  பணியாகும். எல்லோரும் ஒரு மென்பொருள் புரோகிராமர் அல்லது ஆலோசக ராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, ஆனால் அனைவருக்கும் நிலை யான, கண்ணியமான வேலைவாய்ப்புகள் அவசியம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் “மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளது. ஆயினும், நாட்டின் பரந்த மக்கள்தொகையைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், இன்னும்  அதிகப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்திருக்க வேண்டும்” எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

ரகுராம்ராஜன் இதற்கு முன்பு அளித்த பேட்டியில், “இந்தியா தனது இளம் தலைமுறையினருக்குச் சரியான கல்வியை அளிக்கத் தவறுகிறது. மருத்துவம் போன்ற முக்கியமான படிப்புகளுக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல அதிகளவிலான இந்தியர்களைத் தள்ளி வருகிறது.  இந்தியா சீனா-வை போல் உற்பத்தி மூலம் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு வருவதைக் காட்டிலும், சேவைத் துறையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், மருத்துவர் போன்ற பல முக்கியமான சேவைகளை இந்தியா வெளிநாடுகளிடம் இழக்க வேண்டிய நிலை உருவாகும்” எனவும் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

;