districts

ஆயிரம் இடத்திற்கு 35 ஆயிரம் விண்ணப்பம்!செங்கை மாவட்டத்தில் கூடுதலாக கல்லூரி துவங்க கோரிக்கை

செங்கல்பட்டு, ஜூன் 26-  செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்யூர் வட்டம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப் பின்தங்கிய வட்டமாகவும் விவசாயம் நிறைந்த பகுதியாகவும் கிராமங்கள் நிறைந்த பகுதியாகவும் இருந்து வருகிறது.  

செய்யூர் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் இருந்து பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு உயர் கல்விக்கு பயில செல்ல வேண்டுமென்றால் செங்கல்பட்டில் உள்ள அரசு கலைக் கல்லூரிக்கும் சென்னையில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் நீண்ட தூரம் பயணம் செய்து கல்லூரிக்கு செல்வது மட்டுமில்லாமல் சென்னையில் விடுதியில் தங்கி  பயிலும் நிலைமையும் உள்ளது.  இப்பகுதியில் உள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு செய்யூரை மையமாக வைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடனடியாக துவங்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 இப்பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இல்லாததால் கிராமப்புற மாணவர்கள் பலருக்கு உயர்கல்வி என்பதே மறுக்கப்பட்டு வருவதாக இப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க செங்கல்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மொத்தம் உள்ள 990 இடங்களுக்கு இந்த நடப்பு ஆண்டு மட்டும் 35 ஆயிரம் 600 விண்ணப்பங்கள் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 இந்நிலையில் செய்யூர் வட்டத்திற்குட்பட்ட கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி கனவை நினைவாக்கிடும் வகையில் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் செய்யூர் வட்டத்தை மையப்படுத்தி ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்யூர் பகுதி மக்களும் இந்திய மாணவர் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட குழுவும் கோரிக்கை வைத்துள்ளனர்  மேலும் இதற்கான அறிவிப்பை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும் என்பதே இப்பகுதி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக இருப்பதோடு அரசியல் கட்சிகளின் கோரிக்கையாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட குழுவின் சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதல்வருக்கு அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.