தூத்துக்குடி, ஆக. 30 தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் வெள்ளிக்கிழமை மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் பேசும்போது, “மாநகராட்சியில் மண்டல வாரியாக நடத்தப்பட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறோம். இதனால் மனுக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அனைவரது ஒத்துழைப்பினால் தூத்துக்குடி மாநகராட்சி தமிழகத்தில் 2வது இடம் பிடித்துள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் சாலைகள் அமைக்கப்படும். மழைநீர் தேங்காத வகையில், அனைத்து பகுதிகளுக்கும் கால்வாய் அமைக்கப்படும். சாலைகளில் திரியும் கால்நடைகளை அடைப்பதற்காக வஉசி கல்லூரி அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், கால்நடைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். அதில் உரிமையாளர்களின் பெயர், முகவரி போன்ற விவரங்கள் இடம்பெறும். அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிறிய அளவிலான நூலகம் அமைக்கப்படும். ஏற்கனவே அண்ணா பேருந்து நிலையத்தின் மேல் தளத்தில் நூலகத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் பெண்களுக்காக பிரத்யேகமாக பூங்கா அமைக்கப்படும். முத்துநகர் பூங்கா, பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் கழிவறைகள் சீரமைக்கப்படும் என தெரிவித்தார். ஆணையர் ராஜாராம், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.